மங்களூரில் சிஏஏ-க்கு எதிராக இளைஞர் தற்கொலை முயற்சியா ?

பரவிய செய்தி
சிஏஏ/என்சிஆர்/என்பிஆர் இன்று மங்களூரில் இமாலய எதிர்ப்பு. இந்த வீடியோவில் உள்ள விசயங்களை தேசிய சேனல் காட்டவில்லை. ஆதலால், நாம் அனைவரும் குரூப்பில் சேர் செய்யவும்.
மதிப்பீடு
விளக்கம்
குடியுரிமைத் திருத்தச் சட்டம், இந்திய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிக்கு எதிராக நாடு முழுவதிலும் பல்வேறு போராட்டங்கள் எழுத்தன. தற்பொழுதும் சிஏஏ-க்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மங்களூரில் சிஏஏ-க்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை தேசிய ஊடகங்கள் காண்பிக்கவில்லை எனக் கூறி பகிரப்படும் வீடியோவில் இளைஞர் ஒருவர் டிரான்ஸ்ஃபார்மர் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ள முயன்றது பதிவாகி இருக்கிறது. ஜனவரி 23-ம் தேதி முதல் பரவி வரும் இவ்வீடியோ முகநூலில் தொடர்ந்து வைரல் செய்யப்படுகிறது. ஆங்கிலத்தில் வெளியான பதிவை மொழிப்பெயர்ப்பு செய்து தமிழில் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
மங்களூரில் சிஏஏ-க்கு எதிரான போராட்டத்தில் நிகழ்ந்ததாகக் கூறி வைரல் செய்யப்படும் இளைஞரின் தற்கொலை முயற்சி வீடியோ தவறான வீடியோவாகும். கடந்த ஜனவரி மாதம் ஆந்திரா மாநிலத்தின் தலைநகர் அமராவதிக்காக போராடிய விவசாயிகள் மீது போலீஸ் தவறான வழக்குகளை பதிவு செய்வதாகக் கூறி விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக இதே வீடியோ வைரல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக ஜனவரி 14-ம் தேதி யூடர்ன் ” ஆந்திரா தலைநகருக்காக உயிரை தியாகம் செய்த விவசாயி என பரவும் தவறான வீடியோ ” என்ற தலைப்பில் உண்மை என்னவென்று ஆதாரத்துடன் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
கடந்த ஜனவரி மாதத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த சக்தி என்ற ராணுவ வீரரின் மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். கணவனின் வீட்டார் வரதட்சணைக் கேட்டுக் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இளம்பெண் தற்கொலை சம்பவம் தொடர்பாக ராணுவ வீரர் மற்றும் அவரின் குடும்பத்தினர் விசாரணைக்காக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர்.
அப்போழுது, மனவேதனையில் இருந்த ராணுவ வீரர் சக்தி அப்பகுதியில் இருந்த ட்ரான்ஸ்ஃபார்மரில் ஏறி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த பொழுது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டுள்ளார். அச்சமயத்தில் நிகழ்ந்த சம்பவத்தை வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பாக தமிழ் செய்திகள் பலவற்றில் வெளியாகி இருக்கிறது.
ஜனவரி மாதம் மதுரை மாவட்டத்தில் ட்ரான்ஸ்ஃபார்மரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற ராணுவ வீரரின் வீடியோவை மங்களூரில் சிஏஏ-க்கு எதிரான போராட்டத்தில் நிகழ்ந்ததாக தவறாக பரப்பி வருகிறார்கள். இதே வீடியோவை வைத்து தொடர்ந்து தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.