This article is from Jan 03, 2020

CAA எதிர்ப்பு போராட்டத்தில் இந்து கடவுள்களின் படங்கள் எரிக்கப்பட்டதா ?

பரவிய செய்தி

அழிவு காலம் ஆரம்பம் ! CAA எதிர்ப்பு போராட்டத்தில் இந்து கடவுள்களின் படங்கள் எரிக்கப்பட்டன.

Facebook link | archived link 

மதிப்பீடு

விளக்கம்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடும் மக்கள் இந்து மதக் கடவுள்களின் பல புகைப்படங்களை தீயிட்டு எரித்ததாக வீடியோ பதிவு ஒன்று முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உறையூர் சுகுமார் நடராஜன் என்ற முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்ட வீடியோ 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று வைரலாகி வருகிறது.

Facebook link | archived link 

இவ்வீடியோ தமிழ் மட்டுமின்றி இந்திய அளவில் பிற மொழிகளிலும் ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு கண்டனங்களையும், போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூறியும் பதிவிடுகின்றனர். இந்து மதத்தினருக்கு கோபத்தை உண்டாக்கும் வகையில், குடியுரிமை போராட்டத்தில் உள்ளவர் மீது வெறுப்பைத் தூண்டும் வகையில் பகிரப்படும் இவ்வீடியோ எங்கு, எப்பொழுது எடுக்கப்பட்டது என்பது குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.

Twitter link | archived link 

உண்மை என்ன ? 

இந்து கடவுள்களின் புகைப்படங்கள் பலவற்றை சாலையில் வைத்து எரிக்கும் காட்சி குறித்து தேடிய பொழுது, இதே வீடியோ In Hindi Analysis என்ற யூடியூப் சேனலில் ” Bhim army activists disrespect hindu gods” எனும் தலைப்பில் 2018-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி வெளியாகி உள்ளது.

Youtube archived link 

அம்பேத்கர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்து கடவுள்களின் படங்களை அவமதித்ததாக யூடியூப் வீடியோவில் கூறியுள்ளனர். வீடியோவில் பாபாசாகேப் அம்பேத்கர் பெயரைக் குறிப்பிட்ட கோஷங்கள் எழுவதை கேட்கலாம். எனினும், இந்த சம்பவம் எங்கு நிகழ்ந்தது என்பது குறித்து தேடிய பொழுது, இதே வீடியோ 2018 ஏப்ரல் மாதத்தில் முகநூல் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.

Facebook link | archived link 

அரசியலமைப்பு சட்டத்தின் நகல்களை எரித்த சங்கீகளுக்கு எதிராக மைசூர் அசோக்புரத்தில் இளம் அம்பேத்கர்வாதிகள் இந்து கடவுகள்களின் படங்களை எரித்ததாக முகநூலில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே பதிவிட்டு உள்ளனர். எனினும், இந்து கடவுள்களின் படங்கள் எரிக்கப்பட்டது குறித்த சம்பவத்திற்கு மற்றும் அதற்கான காரணத்திற்குள் நாம் செல்ல விரும்பவில்லை.

ஆனால், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள் இந்து கடவுள்களின் புகைப்படங்களை எரித்ததாக பரப்பப்பட்டு வரும் வீடியோ காட்சி 2018 ஏப்ரலில் இருந்தே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்து கடவுள்களின் படங்கள் எரிக்கப்பட்டதாக கூறுவது தவறான தகவல்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader