குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக மேற்கு வங்கத்தில் திரண்ட கூட்டமா ?

பரவிய செய்தி
குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக திரண்ட மேற்கு வங்க மண்ணின் மைந்தர்கள்.
மதிப்பீடு
விளக்கம்
நாடு முழுவதிலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமாய் எழுந்து வரும் நிலையில், ஆளும் அரசின் கட்சி மற்றும் அமைப்புகளின் சார்பாக குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக ஒரு சில ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன.
அவ்வாறு மேற்கு வங்க மாநிலத்தில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக லட்சக்கணக்கான மக்கள் திரண்ட கூட்டம் என சில புகைப்படங்கள் ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அத்தகைய புகைப்படங்களை தமிழகத்தில் பாஜகவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதள பிரிவின் தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். ஆனால், அந்த பதிவு பிறகு நீக்கப்பட்டு உள்ளது. எனினும், ட்வீட் உடைய ஸ்க்ரீன்ஷார்ட் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
புகைப்படங்களுடன் ஓர் பதிவை பதிவிட்டு பிறகு நீக்கும் செயலில் தவறு இருந்திருக்க வேண்டும் என்பது எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. காவி நிற கொடிகளை கையில் ஏந்திய லட்சக்கணக்கான மக்களின் கூட்டம் எதற்காக கூடினார்கள் என தேடினோம்.
முதல் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து பார்க்கையில், ” மகாராஷ்டிராவில் 14 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று தூக்கில் தொங்கவிட்ட சம்பத்திற்கு எதிராக காங்கிரஸ் மற்றும் அம்மாநிலத்தின் எதிர்கட்சி தலைவராக இருந்த ராதாகிருஷ்னன் விக்கே பட்டீல் மற்றும் முன்னாள் அமைச்சர் பாலாசாகிப் தோரட் தலைமையில் மரதாஸ் சமுதாயத்தினர் மேற்கொண்ட பேரணி குறித்து புகைப்படத்துடன் 2016-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது “.
இரண்டாவதாக உள்ள புகைப்படம் குறித்து தேடிய பொழுது, 2016-ம் ஆண்டு அக்டோபரில் DNA இணையதளத்தில் ” Ek Maratha, Lakh Maratha: Maratha community’s silent march reaches Mumbai’s doorsteps in Thane ” என்ற தலைப்பில் வெளியான செய்தியில் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.
மூன்றாவதாக உள்ள புகைப்படமும் 2016 அக்டோபர் மாதம் மகாராஷ்டிராவில் மரத்தா சமுதாயம் இடஒதுக்கீடுக்காக மேற்கொண்ட பேரணியில் எடுக்கப்பட்ட புகைப்படமே. அதே புகைப்படம் LIVEMINT என்ற இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நமக்கு கிடைத்த தகவலில் இருந்து, காவி நிற கொடியுடன் லட்சக்கணக்கான மக்கள் கூடிய கூட்டம் மேற்கு வங்கத்தில் குடியுரிமைக்கு ஆதரவாக கூடியவர்கள் அல்ல. 2016-ல் மகாராஷ்டிராவில் மரதா சமுதாயத்தால் மேற்கொள்ளப்பட்ட பேரணியின் போது எடுக்கப்பட்டவை.
Update :
டிசம்பர் 21-ம் தேதி கதிர் நியூஸ் இணையதளத்தில், ” மேற்கு வங்கம் குலுங்கியது! குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக மாபெரும் பேரணி! முடிகிறது மம்தா சகாப்தம்! ” என்ற தலைப்பில் குடியுரிமைக்கு ஆதரவாக கூடிய மக்கள் கூட்டம் என மகாராஷ்டிராவின் மரத்தா பேரணியின் புகைப்படத்தை வைத்து கட்டுரை வெளியிட்டு இருந்தனர்.
இந்த பதிவின் லிங்கை தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பொழுது, அத்தகைய புகைப்படங்கள் தவறானவை என யூடர்ன் வெளியிட்ட கட்டுரை மற்றும் மீம் பதிவை ட்வீட் கீழ் ஒருவர் பதிவிட்டு உள்ளார். தற்பொழுது, கதிர் நியூஸ் தன்னுடைய கட்டுரையை நீக்கி உள்ளது. கட்டுரையை நீக்கி இருந்தாலும், கதிர் நியூஸ் உடைய கட்டுரையின் ஸ்க்ரீன்ஷார்ட் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.