This article is from Oct 25, 2019

Cadbury “இலவச சாக்லேட் பேஸ்கட்” வழங்குகிறதா ?| வைரலாகும் லிங்க் !

பரவிய செய்தி

இந்த தீபாவளியை சிறப்பிக்க 1500 ரூபாய் மதிப்புள்ள கேட்பெரி சாக்லேட்கள் அடங்கிய பேஸ்கெட்டை இலவசமாக வழங்குகிறது கேட்பெரி. இங்கே உங்களின் இலவச பேஸ்கெட்டை பெறவும்- http://www.cadbury-baskets.com .

மதிப்பீடு

விளக்கம்

பிரபல சாக்லேட் தயாரிப்பான cadbury சாக்லேட் தரப்பில் தீபாவளி பரிசாக 1500 ரூபாய் மதிப்புள்ள ” இலவச சாக்லேட் பேஸ்கட் ” -ஐ அளிக்க உள்ளதாக லிங்க் ஒன்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதை வாட்ஸ் அப் உள்ளிட்டவையில் மக்கள் ஷேர் செய்து வருவதை அறிய நேர்ந்தது.

அவ்வாறு பரவி வரும் cadbury basket லிங்க் குறித்த உண்மைத்தன்மையை ஃபாலோயர் தரப்பில் இருந்து கேட்கப்பட்டது. Cadbury இலவசமாக சாக்லேட் பேஸ்கெட் வழங்குவதாக செய்திகள் பரவுவது முதல் முறை அல்ல. இந்திய அளவில் cadbury basket என்ற பெயரில் ஒரு லிங்க் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ? 

Cadbury சாக்லேட் ஆனது தீபாவளி சிறப்பு பரிசாக ” இலவச சாக்லேட் பேஸ்கெட் ” வழங்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எங்கும் வெளியாகவில்லை. அந்த தயாரிப்பின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் வைரலாகும் Cadbury basket லிங்க் குறித்து எந்த பதிவும் இல்லை.

இது தொடர்பாக, அக்டோபர் 23-ம் தேதி Thakur avnish என்பவர் cadbury-யின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்திற்கு வைரல் செய்தியை அனுப்பி இருந்தார். அதற்கு Cadbury தயாரிப்பு நிறுவனமான Mondelez india அளித்த பதிலில்,

” Cadbury பெயரின் கீழ் இலவச சாக்லேட்கள் வழங்குவதாக உறுதி அளித்து வைரலாகும் இணையதள லிங்க் ஆனது போலியானவை என மொன்டெலெஸ் இந்தியா உறுதிப்படுத்தி உள்ளது. அவர்களின் தரப்பில் இதுபோன்ற எந்தவொரு விளம்பரமும் செய்யப்படவில்லை. அந்த லிங்கை பகிர்வது மற்றும் உள்ளே நுழைவதற்கு முன்பாக நுகர்வோர் எச்சரிக்கையாக இருக்குமாறு ” கூறியுள்ளனர்.

Cadbury சாக்லேட்கள் இலவசமாக வழங்குவதாக செய்திகள் சமூக வலைதளங்களில் பரவுவது முதல் முறை அல்ல. கடந்த 2018-ல் கூட Cadbury-யின் 194-ம் ஆண்டிற்கான இலவச சாக்லேட் பேஸ்கெட் வழங்குவதாக வதந்திகள் பரவி இருந்தன.

மேலும் படிக்க : Cadbury தயாரிப்புகளில் HIV நோயாளியின் இரத்தம் கலந்ததா ?

இதற்கு முன்பாக , cadbury சாக்லேட்களில் ஹெச்.ஐ.வி கலந்து விட்டதாகவும், உயிரிழப்புகள் நிகழ்ந்ததாகவும் வதந்திகள் பரவின. அதைக் குறித்தும் விரிவாக கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

இவ்வாறு பகிரப்படும் லிங்க்களில் செல்லும் நபர்களிடம் சில கேள்விகள் கேட்கும்படி அமைந்து இருக்கும் , பின்னர் அவர்களின் தனிப்பட்ட விவரங்கள் கேட்கப்படும். தனிநபர் தகவல்களை திருடும் நபர்கள் மூலம் போலியான இணையதளங்கள் உருவாக்கப்பட்டு மக்களின் விவரங்கள் பெறப்படுகின்றன. இறுதியாக, உங்களின் விவரங்கள் விற்கப்படுகின்றன. இப்படி நீங்கள் அளிக்கும் விவரங்கள் வாயிலாகவே தேவையில்லாத அழைப்புகள், எஸ்எம்எஸ் , ஈமெயில் உள்ளிட்டவை வருகின்றன.

இலவசம் என்ற பெயரில் போலியான இணையதள லிங்க் பல சுற்றி வருகின்றன. Free Adidas , amazon , jet airways , domino’s anniversary offer , KFC offer என பல போலியான ஆஃபர் செய்திகள் இணையத்தில் குவிந்து இருக்கின்றன. அவற்றிக்கு ஒரு லிங்க் அளிக்கப்படுகிறது. அதுபோன்ற லிங்க்களை கிளிக் செய்வதற்கு முன்பாக நன்றாக யோசிக்கவும். தவறான லிங்க்களுக்கு சென்று உங்களின் தனிப்பட்ட விவரங்களை இழக்க வேண்டாம்.

Please complete the required fields.




Back to top button
loader