கனடாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ததாகப் பரவும் தவறான தகவல் !

பரவிய செய்தி
RSSஐ முற்றுலிமாக தடை முதல் நாடு கனடா.
மதிப்பீடு
விளக்கம்
காலிஸ்தான் பிரிவினைவாத தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் இந்திய அரசுக்கும் நம்பத்தக்க தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசியது இருநாட்டிற்கு இடையே பெரும் விரிசலை உருவாக்கி உள்ளது.
கனடா நாட்டில் RSS தடைசெய்யப்பட்டது.
சிறப்பான சம்பவம்.🔥 pic.twitter.com/e2F1wri9IB
— Shafeeq (@shafeeqkwt) September 21, 2023
கனடா நாட்டில் RSS தடைசெய்யப்பட்டது.
சிறப்பான சம்பவம் 🔥🔥🔥#RSS #RSSBan #CanadaBannedRSS pic.twitter.com/2dW6h96iAS
— Gopinathan Vijayaraman (@gopinathvijay91) September 21, 2023
வைரல் செய்யப்படும் வீடியோவில் உள்ள நபர், ” WSO உடன் இணைந்து, குற்றவியல் சட்டத்தில் உள்ள பட்டியல் விதிகளின் கீழ் ஆர்எஸ்எஸ்-ஐ உடனடியாக தடை செய்ய வேண்டும் மற்றும் அதன் பிரதிநிதிகளை கனடாவில் இருந்து அகற்ற வேண்டும் ” எனக் கூறுகிறார்.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோவில் இருந்து கீப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், செப்டம்பர் 20ம் தேதி NCCMtv எனும் யூடியூப் சேனலில், ” கனடாவில் சீக்கியர் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுவதற்கு பதிலளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க NCCM தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பிரவுன் அழைப்பு ” எனும் தலைப்பில் முழு வீடியோவும் பதிவாகி இருக்கிறது.
மேற்காணும் வீடியோவின் நிலைத்தகவலில், கனேடிய முஸ்லீம்களின் தேசிய கவுன்சில்(NCCM) தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பிரவுன் மற்றும் கனடாவைச் சேர்ந்த உலக சீக்கிய அமைப்பின் இயக்குநர்கள் குழு முக்பீர் சிங்குடன் இணைந்து, இந்திய அரசின் உளவாளிகளால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் வழக்கில் கனேடிய அரசாங்கம் தெளிவான நடவடிக்களை எடுக்கக் கோரி பேசியுள்ளனர்.
ஸ்டீபன் பிரவுன் முன்வைத்த கோரிக்கைகள் பின்வருமாறு,
- இந்தியாவுக்கான கனடா தூதரை உடனடியாக திரும்ப பெறுதல்.
- கனடாவுக்கான இந்தியத் தூதர் சஞ்சய் குமார் வர்மாவை வெளியேறச் செய்ய நடவடிக்கை.
- விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம்(CEPA) உட்பட இந்தியாவிற்கும், கனடாவிற்கும் வர்த்தக உடன்பாட்டில் முறையான முடக்கம்.
- WSO உடன் இணைந்து, குற்றவியல் சட்டத்தில் உள்ள பட்டியல் விதிகளின் கீழ் ஆர்எஸ்எஸ்-ஐ உடனடியாக தடை செய்ய வேண்டும் மற்றும் அதன் பிரதிநிதிகளை கனடாவில் இருந்து அகற்ற வேண்டும்
கனேடிய முஸ்லீம்களின் தேசிய கவுன்சில்(NCCM) எனும் அமைப்பின் நிர்வாக அதிகாரி கனடாவில் உள்ள சீக்கிய அமைப்புடன் இணைந்து வெளியிட்ட கோரிக்கையை கனடா அரசு வெளியிட்டதாகத் தவறாகப் பரப்பி உள்ளனர்.
முடிவு :
நம் தேடலில், கனடா அரசு ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ததாகப் பரவும் வீடியோ தகவல் தவறானது. வீடியோவில் பேசும் நபர் கனேடிய முஸ்லீம்களின் தேசிய கவுன்சில் நிர்வாக அதிகாரி. கனடா அரசு ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையே அவர்கள் முன்வைத்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.