கனடாவில் ராட்சத மீன் தாக்கி கப்பல் உருக்குலைந்ததாகப் பரப்பப்படும் தவறான வீடியோ !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
கனடாவில் ராட்சத சுறாமீன் தாக்கி கப்பல் சுக்குநூறாக உருக்குலைந்து, இரண்டாக பிளவுபடுவது போன்ற 40 வினாடி கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
கனடாவில் மீன் தாக்குதலில் உருக்குலைந்த கப்பல் pic.twitter.com/RZAlroxVxE
— C.Karthikeyan BJYM (@kavingarKarthi) April 4, 2023
இதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து பாராமல் பலரும் கனடாவில் சுறா மீன் தாக்கி கப்பல் உருக்குலைந்ததாகக் கூறி ட்விட்டர், முகநூல், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் பரவலாகப் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் வீடியோவிலிருந்து கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து பார்க்கையில், “இது aleksey__n என்பவரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மார்ச் 10, 2023 அன்றும், அவருடைய இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் வலைதளங்களில் மார்ச் 9, 2023 அன்றும் பகிரப்பட்டுள்ளது.
அலெக்ஸி – டிஜிட்டல் கிரியேட்டராகவும், AI டிசைனராகவும் பணியாற்றி வருகிறார். 3D Max என்னும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அழிந்து போன சுறா இனமான Megalodon எனப்படும் பெரிய பல் கொண்ட ராட்சத சுறாவைப் பயன்படுத்தி இந்த அனிமேஷன் செய்துள்ளார். இந்த வீடியோவை “I’m finally done! #megalodon #meg #animation #digitalart #CGI #3D“ என்று குறிப்பிட்டு தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: ஹெலிகாப்டரை சுறா மீன் தாக்குவதாக திரைப்படத்தின் காட்சியை பதிவிட்ட கிரண் பேடி !
இதே போன்று, நேஷனல் ஜியாக்ரபிக் சேனல் 1 மில்லியன் டாலர் தொகையை செலவிட்டு எடுத்ததாகக் கூறி ஹெலிகாப்டரை சுறா மீன் தாக்குவது போன்ற திரைப்படத்தின் காட்சியை கிரண் பேடி ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அதுகுறித்தும் யூடர்ன் கட்டுரை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
முடிவு :
நம் தேடலில், கனடாவில் ராட்சத சுறா மீன் தாக்கி கப்பல் உருக்குலைந்ததாகப் பரப்பப்படும் தவறான வீடியோ அலெக்ஸி என்னும் டிஜிட்டல் கிரியேட்டரால் உருவாக்கப்பட்ட அனிமேஷன் வீடியோ என அறிய முடிகிறது.