உ.பி பாஜகவினர் கனடா கொடிக்குப் பதிலாகக் கர்நாடகா மாநில கொடியை எரித்ததாகப் பரவும் போலிச் செய்தி !

பரவிய செய்தி
கர்நாடக கொடியை எரித்த உ.பி. பாஜகவினர். இந்தியா கனடா நாடுகளுக்கு இடையே – ராஜாங்க உறவு மோசமடைந்தை அடுத்து கனடா நாட்டின் கொடிக்கு பதிலாக கர்நாடக மாநிலக் கொடியை எரித்த உத்தர பிரதேசம் கோரக்பூர் மாவட்ட பாஜகவினர்
மதிப்பீடு
விளக்கம்
காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும், இந்திய அரசுக்கும் நம்பத்தக்க தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசியதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கு இடையேயான உறவில் சலசலப்பு எழத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கனடாவை எதிர்த்து உத்திர பிரதேச கோரக்பூர் மாவட்டத்தில் பாஜகவினர் நடத்திய போராட்டத்தில் கனடா நாட்டுக் கொடியை எரிப்பதற்குப் பதிலாகக் கர்நாடக மாநில கொடியை எரித்ததாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
பரவக் கூடிய நியூஸ் கார்டில் ‘நம் டிவி செய்திகள்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில் ‘22.09.2023’ என்ற தேதியும் உள்ளது. அப்பெயரினை கொண்டு சமூக வலைத்தளத்தில் தேடியதில் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்கள் இருப்பதைக் காண முடிந்தது.
அப்பக்கங்களை ஆய்வு செய்ததில் அப்படி எந்த நியூஸ் கார்டும் இல்லை. கடைசியாகக் கடந்த ஜூலை 7ம் தேதி அவர்கள் பக்கத்தில் நியூஸ் கார்டு பதிவிடப்பட்டுள்ளது. அதன் பிறகு எந்த நியூஸ் கார்டையும் அவர்கள் பதிவிடவில்லை.
பரவும் நியூஸ் கார்டில் இருக்கக் கூடிய புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடியதில், அப்புகைப்படம் கடந்த 2021ம் ஆண்டு ‘The Hans India’ எனும் தளத்தில் வெளியான ஒரு செய்தியில் இடம்பெற்றுள்ளது.
அதில், ‘கர்நாடக மாநில கொடியை எரித்த சிவசேனா அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரபலங்களும் அரசியல்வாதிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்’ என்றுள்ளது. இது தொடர்பான செய்தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலும் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மேற்கொண்டு தேடியதில் 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் கர்நாடகா மாநில கொடியைச் சிவ சேனா கட்சியினர் மகாராஷ்டிராவில் எரித்தது தொடர்பான செய்திகள் கிடைக்கப்பெற்றது. இதற்கு அரசியல் மற்றும் பிரபலங்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளது.
கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனையின் போது எரிக்கப்பட்ட கர்நாடக கொடி தொடர்பான படத்தினை தற்போது கனடா நாட்டுடன் ஒப்பிட்டு எடிட் செய்து தவறாகப் பரப்பப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க : கனடாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ததாகப் பரவும் தவறான தகவல் !
கனடா நாட்டில் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டதாகப் பரப்பப்பட்ட போலி செய்தி பற்றிய உண்மைத் தன்மை யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், உத்தரப் பிரதேசத்தில் பாஜகவினர் கனடாவிற்கு எதிராக நடத்திய போராட்டத்தில் கனடா கொடியை எரிப்பதற்குப் பதிலாகக் கர்நாடகா மாநில கொடியை எரித்ததாகப் பரவும் நியூஸ் கார்டு உண்மையானது அல்ல.
அது 2021ம் ஆண்டு கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனையின் போது சிவசேனா கட்சியினரால் எரிக்கப்பட்ட புகைப்படம் என்பதை அறிய முடிகிறது.