சீக்கியர்கள் போராட்டத்தில் கனடா பிரதமர் கலந்து கொண்ட புகைப்படமா ?

பரவிய செய்தி
கனடாவில் சீக்கியர்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாக கனடா பிரதமர் இவர் தான் மக்களின் பிரதமர் நன்றி நன்றி
மதிப்பீடு
விளக்கம்
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தியதற்கு, உலகில் அமைதியாக நடைபெறும் போராட்டங்களின் உரிமைக்காக கனடா எப்போதும் துணை நிற்கும் என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த கருத்து இந்தியாவில் கவனம் பெற்றது.
ஆனால், ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து தேவையற்றது என்றும், அவரது கருத்து இருநாட்டு நல்லுறவை பாதிக்கும் என்றும் மத்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், விவசாயிகள் போராட்டத்திற்கு மீண்டும் தனது ஆதரவைத் தெரிவித்ததோடு, விவசாயிகள் தொடர்பான பேச்சுவார்த்தை மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறி இருந்தார்.
இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக சீக்கியர்கள் கனடாவில் நடத்திய போராட்டத்தில் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டதாக இப்புகைப்படம் தமிழ் மட்டுமின்றி இந்திய அளவிலும் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
உண்மை என்ன ?
கனடாவில் சீக்கியர்கள் நடத்திய போராட்டத்தில் கனடா பிரதமர் கலந்து கொண்டதாக வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2015-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி வெளியான ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில் இப்புகைப்படம் இடம்பெற்று இருந்தது.
2015-ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு ஓட்டவா பகுதியில் அமைந்துள்ள குருத்வாரா மற்றும் இந்து கோவிலுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வருகை தந்துள்ளார். அவரின் வருகையின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் அவரைச் சுற்றி சீக்கியர்கள் அமர்ந்து இருக்கும் புகைப்படமே போராட்டமென தவறாகப் பகிரப்பட்டு வருகிறது.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவிலும் நூற்றுக்கணக்கானோர் பதாகைககள் உடன் பேரணி நடத்தி உள்ளனர். ஆனால், அத்தகைய பேரணிகளில் கனடா பிரதமர் கலந்து கொண்டதாக எந்தவொரு தகவலும் இல்லை. விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு மட்டுமே தெரிவித்து இருந்தார்.
முடிவு :
நம் தேடலில், விவசாயிகளுக்கு ஆதரவாக கனடாவில் சீக்கியர்கள் நடத்திய போராட்டத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டதாக வைரலாகும் புகைப்படம் 2015-ம் ஆண்டில் எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.