கொரோனா பாதித்த கனடா பிரதமரின் மனைவி பேசும் வீடியோவா ?

பரவிய செய்தி
கனடா பிரதமரின் மனைவி.. யாரும் எளிதில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்பதற்கு இதைவிட காட்சியை காண்பிக்க இயலாது..
மதிப்பீடு
விளக்கம்
மார்ச் 13-ம் தேதி கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபியாவிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட கனடா பிரதமரின் மனைவி பேசும் வீடியோ என மேற்காணும் வீடியோ உலக அளவில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட பிறகு அவரின் தனிப்பட்ட வீடியோக்கள் வெளியாகவில்லை. அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்கிற செய்திகளே வெளியாகின
கனடா பிரதமரின் மனைவி சோபியா என வைரல் செய்யப்படும் பெண் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வரும் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர்.
மார்ச் 18-ம் தேதி நிக்கோலே பாப்பி என்பவர் வைரலாகும் வீடியோவை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டு, 30 வயதான என் தங்கை தாரா ஜானே லங்ஸ்டன் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும், அனைவரும் சுகாதார நடவடிக்கைகளை சரியாக பின்பற்றவும் என பதிவு செய்துள்ளார்.
மார்ச் 19-ம் தேதி dailymail இணையதளத்தில், கொரோனா வைரஸ் பாதித்த பிரிட்டனைச் சேர்ந்த 39 வயதான தாரா ஜானே லங்ஸ்டன் ஒவ்வொருமுறை மூச்சுவிடும் பொழுதும் போராடி வருகிறார். தற்போது அவர் தீவிர கண்காணிப்பு அறையில் இருந்து மாற்றப்பட்டு உள்ளதாகவும், மீண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த 39 வயதான தாரா ஜானே லங்ஸ்டன் கொரோனா பாதிப்பில் இருந்து பேசிய வீடியோவை கனடா பிரதமரின் மனைவி 44 வயதான சோபியா என தவறாக பரப்பி வருகிறார்கள். எனினும், வைரஸ் குறித்து சரியான எச்சரிக்கையை யார் தெரியப்படுத்தினாலும் அதைக் கடைபிடிப்பது நல்லதே.