குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களுக்கு குடிமக்கள் செல்ல வேண்டாம் என்றதா கனடா அரசு ?

பரவிய செய்தி

குஜராத் செல்ல வேண்டாம் : கனடா விஷமத்தனம்

Twitter link | News link 

மதிப்பீடு

விளக்கம்

” இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு கனடா குடிமக்கள் செல்ல வேண்டாம் என்று அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த 3 மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கணிக்க முடியாத சூழல் நிலவுவதாகவும், வெறுப்பு குற்றம் நிகழ்வதாகவும் தெரிவித்துள்ளது” என மெட்ராஸ் ரிவியூ(Madras Review) என்ற பக்கம் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளது.

மேலும், “குஜராத் செல்ல வேண்டாம்: கனடா விஷமத்தனம்” என்ற தலைப்பில் தினமலர் தனது வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

உண்மை என்ன ?

உலகில் உள்ள பெரிய நாடுகள் அனைத்தும் தனது வெளியுறவு துறை அமைச்சகம் மூலம் தன்நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும்போது அதற்கான பயண ஆலோசனைகளை வழங்குவது வழக்கமான ஒன்று.

இதில், இந்தியாவை பற்றிய கனடா அரசின் ஆலோசனையில் பின்வருமாறு மூன்று முக்கிய அம்சங்களை கூறியுள்ளது:

  1. குஜராத், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள பகுதிகள் எங்கும் பயணம் செய்ய வேண்டாம்.
  2. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு பயணம் செய்ய வேண்டாம்.
  3. வடகிழக்கு மாநிலமான அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்கு பயணம் செய்ய வேண்டாம்.

இதற்காண காரணங்களை அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சகம் குறிப்பிடுகையில் அசாம் மற்றும் மணிப்பூரில் பயங்கரவாதம் நிலவுவதாகவும், காஷ்மீரில் உள்நாட்டுக் கலவரம் நடப்பதாகவும், குஜராத், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் பாகிஸ்தான் எல்லைகளில் கன்னி வெடிகள் இருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளது. இவை அனைத்தும் ஆலோசனைகளே தவிர கட்டுப்பாடுகள் இல்லை. வாகா எல்லைக்கு அப்படி எந்த அறிவுறுத்தலும் இல்லை எனக் கூறப்பட்டு உள்ளது.

இதேபோல் கடந்த செப்டம்பர் மாதம், கனடாவில் வெறுப்பு பிரச்சாரங்கள், இந்தியர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வெளியுறவு துறை அமைச்சகம் ஆலோசனை வழங்கி இருக்கிறது.

இவ்வாறான ஆலோசனைகள் அனைத்து பெரிய நாடுகளும் அந்நாட்டு மக்களின் நலனுக்காக  கொடுப்பது வழக்கம்.

மேலும், அமெரிக்காவும் இது போன்ற ஆலோசனைகளை இந்திய செல்லும் தனது நாட்டு மக்களுக்கு கொடுத்துள்ளது.

நாட்டு மக்களின் நலனுக்காக வழங்கப்படும் ஆலோசனைகளை, வெறுப்பு பிரச்சாரம், விஷமத்தனம் என செய்தி இணையதளங்களும், சமூக வலைத்தள பக்கங்களும் தவறாக பரப்பி வருகின்றனர்.

முடிவு :

நம் தேடலில், கனடா குடிமக்கள் இந்தியாவின் குஜராத், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள பகுதிகள் எங்கும் பயணம் செய்ய வேண்டாம் என்றே கனடா வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் செய்து உள்ளது.

ஆனால், குஜராத், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கே குடிமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்ததாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader