புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து அடையாறு புற்றுநோய் மையத்தில் கிடைப்பதாக வதந்தி

பரவிய செய்தி

இதுவரை கொடிய நோயாக இருந்த ரத்தப் புற்றுநோயை முழுவதுமாக குணமாக்குவதற்கு புதிதாக மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த மருந்தின் பெயர் “Imitinef Mercilet”

மதிப்பீடு

விளக்கம்

கொடிய நோயான இரத்தப் புற்றுநோயை முற்றிலும் குணமாக்கும் புதிய மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அது அடையாறு புற்றுநோய் மையத்தில் இலவசமாகக் கிடைப்பதாகவும் சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகப் பரவி வருகிறது.

மூங்கில் செய்திகள் என்ற தலைப்பில் பரவி வரும் புகைப்படத்தில் இரத்தப் புற்றுநோயை குணமாக்கக்கூடிய மருந்தின் பெயர் “இமிட்டினெஃப் மெர்சிலேட்” (Imitinef Mercilet) எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

Facebook Link

இரத்தப் புற்றுநோயை குணமாக்கும் மருந்து எனப் பலர் இதனை தங்களது முகநூலில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை என்ன ?

சமூக வலைதளங்களில் வைரலான புகைப்படத்தில் இருக்கும் தகவல் குறித்து இணையத்தில் தேடியபோது, Miracle drug for blood cancer just a hoax: Expert எனும் தலைப்பில் 2021 அக்டோபர் 9ம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அதில் “இமிட்டினெஃப் மெர்சிலேட்” (Imitinef Mercilet) எனும் மருந்து புற்றுநோயை குணப்படுத்தும் என்ற கூற்று முற்றிலும் தவறான ஒன்று எனக் குறிப்பிட்டிருந்தது.

Article Link

அடையாறு புற்றுநோய் மையத்தில் ரத்த புற்றுநோயினை முற்றிலுமாகக் குணப்படுத்தும் மருந்து இலவசமாகக் கிடைக்கிறது எனப் பரவிய செய்தி குறித்து அடையாறு புற்றுநோய் மையம் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது.

Document Link

அதில், “புற்றுநோயை குணப்படுத்தும் “இமிட்டினெஃப் மெர்சிலேட்” (Imitinef Mercilet) எனும் மருந்து அடையாறு புற்றுநோய் மையத்தில் இலவசமாகக் கிடைக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. ஆனால் அது உண்மை அல்ல. ‘chronic myeloid leukemia’ எனும் ஒரு வகையான இரத்தப் புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ‘imatinib mesylate’ எனும் மருந்தையே Imitinef Mercilet எனப் பரவி வருவது தெரியவருகிறது. இந்த மருந்து அடையாறு புற்றுநோய் மையத்தில் மட்டுமில்லாமல்  இந்தியாவில் உள்ள அனைத்து புற்றுநோய் சிகிச்சை மையங்களிலும் கிடைக்கும். எனவே மக்கள் இதுபோலப் பொய்யான செய்திகளைச் சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிட்டிருந்தது.

மேலும், வைரலான புகைப்படத்தில் இருக்கும் மூங்கில் செய்திகள் குறித்து இணையத்தில் தேடியபோது அவ்வாறு எந்தச் செய்தித்தளம்  இருப்பதாகப் பதிவுகள் இல்லை.

மேலும் படிக்க : கோமியத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட கேன்சர் மருந்துக்கு அமெரிக்க காப்புரிமையா ?

மேலும் படிக்க : சர்க்கரை எடுத்துக் கொள்வதை நிறுத்தினால் புற்றுநோய் செல்கள் இறக்குமா ?

மேலும் படிக்க : 100 ரூபாயில் புற்றுநோயை தடுக்கும் கை மருந்து என பரவும் தவறான ஃபேஸ்புக் பதிவு !

இதற்கு முன்பாக, புற்றுநோய் குறித்தும், அதற்கான தடுப்பு மருந்து என பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறன. இப்படி சமூக வலைதளங்களில் உலாவும் போலிச் செய்திகளை நம்பி பகிர வேண்டாம்.

முடிவு :

நம் தேடலில், இரத்தப் புற்றுநோயை முற்றிலுமாகக் குணப்படுத்தும் “இமிட்டினெஃப் மெர்சிலேட்” (Imitinef Mercilet) எனும் மருந்து அடையாறு புற்றுநோய் மையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது எனப் பரவி வரும் செய்தி பொய் எனத் தெரியவருகிறது.

Please complete the required fields.




Back to top button
loader