குடைமிளகாய்க்குள் இருப்பது மெல்லிய பாம்பு புழுவா ?| உண்மை அறிவோம்!

பரவிய செய்தி
சமையலுக்கு பயன்படுத்தும் குடைமிளகாய்க்குள் ஆபத்தான வெள்ளை நிறத்தில் மெல்லிய பாம்பு புழு.
மதிப்பீடு
விளக்கம்
குடைமிளகாயை வெட்டி உள்ளே பார்க்கும் பொழுது உள்ளிருந்து நீளமான வெள்ளை நிறத்தில் புழு போன்ற ஒன்று வெளியே வருவதை காண்பிக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது . இதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து கூறுமாறு ஃபாலோயர் கேட்டுக் கொண்டனர்.
குடைமிளகாய்க்குள் நீளமாக வெளி வருவது புழு வடிவில் இருக்கும் ஆபத்தான பாம்பு எனக் கூறி மேற்காணும் வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இவ்வீடியோ தற்பொழுது இந்தியா முழுவதும் பரவி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
காய்கறிகளில் புழுக்கள் இருப்பது அரிதான ஒன்று அல்ல. நாம் பயன்படுத்தும் பெரும்பாலான காய்கறிகளில் புழுக்களை பார்த்து அவற்றை நீக்கி சுத்தம் செய்த பிறகு காய்கறிகளை சமையலுக்கு பயன்படுத்தி இருக்கிறோம். மேலும், குடைமிளகாயில் புழு இருப்பது முதல் முறையும் அல்ல. 2012-ல் வெளியான வீடியோவில் குடைமிளகாய்க்குள் பச்சை நிறத்தில் கம்பளிப்பூச்சி இருப்பதை காணலாம்.
இதற்கு முன்பாக, 2017-ல் இதைப் போன்ற மற்றொரு வீடியோவில் முட்டைக்கோஸில் ஆபத்தான நாடாப்புழு(அதே புழு) உயிருடன் இருப்பதாகவும், மக்கள் முட்டைக்கோஸ் காய்கறியை உண்பதை நிறுத்திக் கொள்ளுமாறு தகவலுடன் வைரலாகி இருந்தது.
வீடியோவில் இருக்கும் புழு ஆபத்தானதா ?
முதலில், குடைமிளகாய் மற்றும் முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறிகளின் உள்ளே மேற்கூறுவது போன்று கண்ணுக்கு புலப்படாத மெல்லிய ஆபத்தான புழுக்கள் இருப்பதாக எச்சரிக்கை செய்யும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் எங்கும் கிடைக்கவில்லை.
2017-ல் முட்டைக்கோஸ்களில் ஆபத்தான புழுக்கள் இருப்பதாக வைரலான வீடியோ குறித்து VTV குஜராத் என்ற சேனல் செய்தி வெளியிட்டு இருந்தது. அதில், காய்கறி விற்பனையாளர்களிடம் கேட்ட பொழுது முட்டைக்கோஸில் இருந்து அதுமாதிரியான எந்தவொரு புழுக்களும் வருவதில்லை என்றே கூறி இருந்தன.
அதையடுத்து, புழுவைப் பற்றி அறிந்து கொள்ள தாவர வல்லுநர்களிடம் கருத்து கேட்டனர். அதற்கு வல்லுநர்கள் கூறுகையில், ” முட்டைக்கோஸில் இருந்த வெள்ளை நிறத்தில் இருக்கும் புழு ஆனது நாடாப்புழு அல்ல. இது பிற வகையாக இருக்கலாம் ” என தெரிவித்து உள்ளனர்.
அது என்ன ?
வீடியோவில் குடைமிளகாய் மற்றும் முட்டைக்கோஸில் இருக்கும் வெள்ளை நிற புழு ஆனது ஒட்டுண்ணி வகையை சார்ந்த நூற்புழுக்கள் (Nematode) இனத்தை சேர்ந்தவையாக இருக்கலாம். உண்மையில், ஆயிரக்கணக்கான Nematode worms-கள் வகை இருக்கின்றன. அவற்றில் சில, பூச்சிகள் மற்றும் ஆர்த்ரோபோட்ஸ்களில் ஒட்டுண்ணியாக இருக்கின்றன. இவை மனிதர்கள் உடலில் இருப்பதில்லை.
வீடியோவில் பார்த்தது இளம் வளர்ச்சியில் இருக்கும் Nematode worms ஒட்டுண்ணியாக இருக்க வாய்ப்புக்கள் உள்ளன. அவை பூச்சிக்கள் மூலமோ, வேறு எந்த வழியாகவோ காய்கறிகளுக்குள் சென்றிருக்க வேண்டும்.
மேலும், 2016-ல் இதே வெள்ளை நிற புழு ஆனது கத்தரிக்காயில் இருப்பதாக வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. குறிப்பாக, குடைமிளகாய் உள்ளிட்ட காய்கறிகளில் வேர் முடிச்சு ஒட்டுண்ணி மூலமும் பாதிக்கக்கூடும். எனினும் , குறைந்த அளவிலான வாய்ப்புகளே உள்ளன. சிலர் அதுபோன்ற புழுக்களை எடுத்து காய்கறிகளில் இருந்ததாக கூறி வீடியோ எடுத்து, அவற்றை உண்ண வேண்டாம் என வதந்திகளை கிளப்பி விடுகின்றனர்.
முடிவு :
நம்முடைய தேடலில் இருந்து, குடைமிளகாய் மற்றும் முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறிகளில் இருக்கும் வெள்ளை நிற மெல்லிய புழு ஆபத்தான பாம்பு அல்ல. புழுக்கள் உடன் காய்கறிகளை சமைத்து உண்பது மனிதர்களின் உயிருக்கு பெரிய அளவிலான பாதிப்பிற்கு வழிவகுக்கவில்லை. எனினும், சில நேரங்களில் தொற்றுகள் ஏற்பட்டு ஆரம்ப நிலையில் சிகிச்சை பெற்று சரியாகி விடுகின்றனர்.
எனவே, குடைமிளகாய் மற்றும் முட்டைக்கோஸில் தென்படும் புழுக்கள் குறித்து கூறும் தகவல் முற்றிலும் சரியானது அல்ல. அவற்றால் மனிதர்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்பதே உண்மை. எனினும், பிற ஒட்டுண்ணிகளின் லார்வாக்கள் மற்றும் முட்டைகளை காய்கறிகளில் தங்கி இருந்து மனித உடலுக்கு பரவ வாய்ப்புகள் உள்ளன.
எனவே, மக்கள் காய்கறிகளை சமைக்கும் முன்பாக நன்கு கவனித்து துண்டுகளாக வெட்டி சூடான நீரில் சுத்தம் செய்து சரியான முறையில் சமைத்து உண்ணுங்கள்.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.