இஸ்லாமிய தாய், மகள் மீது காரை ஏற்றிய காவி?| உண்மை என்ன ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
ஏப்ரல் 30-ம் தேதி Syed Baridh Raja எனும் முகநூல் பக்கத்தில், சாலையில் வந்த கார் ஓரமாக சென்ற இருவர் மீது மோதும் சிசிடிவி காட்சி ஆடியோ ஒன்றுடன் பதிவாகி இருக்கிறது. அதில், உத்தரப் பிரதேசத்தில் சாலையில் சென்ற இஸ்லாமிய தாய் மற்றும் மகளின் மீது வேண்டுமென்றே காரைக் கொண்டு ஏற்றியதில் குழந்தை உயிரிழந்ததாக இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலே குறிப்பிட்ட முகநூல் பக்கத்தில் பதிவிட்ட வீடியோ 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று வருகிறது.
உண்மை என்ன ?
இந்தியாவில் அதிகரித்து வரும் இஸ்லாமோபோஃபியா காரணமாக சாலையில் ஹிஜாப் அணிந்து சென்ற இஸ்லாமிய தாய் மற்றும் மகளை காவி அமைப்பினர் காரை ஏற்றியதில் குழந்தை மற்றும் தாய் ஆகிய இருவருமே இறந்ததாக இந்திய அளவில் இவ்வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால், தமிழில் குழந்தை மட்டுமே உயிரிழந்ததாக குறிப்பிட்டு உள்ளார்கள்.
வீடியோ தொடர்பாக தேடிய பொழுது, ஏப்ரல் 26-ம் தேதி நியூஸ் 18 உத்தரகாண்ட் செய்தியின் யூடியூப் சேனலில் பால்லியா பகுதியில் சாலையில் நிகழ்ந்த கார் மோதலில் தாய் மற்றும் மகள் உயிரிழந்ததாக வைரலாகும் சிசிடிவி காட்சி வெளியாகி இருக்கிறது.
This incident in Rasra area of Ballia district in UP doesn’t seem to be just an accident. A woman and her minor daughter was killed in the accident. Would request @uppolice to deeply look into this matter. @Benarasiyaa @shaileshNBT
See the Alto carDisturbing visuals: pic.twitter.com/ELNvjVQ0hz
— Kanwardeep singh (@KanwardeepsTOI) April 26, 2020
ஏப்ரல் 26-ம் தேதி கன்வர்தீப் சிங் என்பவரின் ட்விட்டர் பக்கத்தில், உத்தரப் பிரதேசத்தின் பால்லியா மாவட்டத்தில் உள்ள ராஷ்ரா பகுதியில் நிகழ்ந்த விபத்தில் தாய் மற்றும் மகள் கொல்லப்பட்டதாகவும், உபி போலீஸ் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையை டக் செய்து இருந்தார்.
— Ballia Police (@balliapolice) April 28, 2020
இந்த சம்பவம் தொடர்பாக பால்லியா போலீஸ் உடைய ட்விட்டர் பக்கத்தில் விபத்து தொடர்பான எஃப்.ஐ.ஆர் பக்கம் வெளியாகி உள்ளது. ராஷ்ரா பகுதியில் கார் மோதிச் சென்றதில் உயிரிழந்த தாய் மற்றும் மகள் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. தாய் உஷா தேவி மற்றும் மகள் புஷ்பாஞ்சலி (12) ஆகிய இருவரும் வீட்டிற்கு சென்ற போது கார் விபத்து நிகழ்ந்து உள்ளது. எஃப்.ஐ.ஆர் பக்கத்தில் அவர்களின் பெயர்கள் உஷா தேவி மற்றும் புஷ்பாஞ்சலி என இடம்பெற்று இருப்பதை காணலாம்.
விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத நபரின் மீது ஐபிசி பிரிவு 304-ஏ மற்றும் 279 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு, குற்றவாளியை தேடி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. பாதிக்கவர்களுக்கு நீதி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ட்விட்டர் தளத்தில் கோரிக்கைகள் எழுகின்றன.
முடிவு :
நம்முடைய தேடலில் இருந்து, உத்தரப் பிரதேசத்தில் சாலையில் சென்ற இஸ்லாமிய தாய் மற்றும் மகளை காரை ஏற்றிக் கொன்ற காவி என வைரலாகும் வீடியோவில் கூறப்படும் மதம் சார்ந்த கோணம் தவறானது. விபத்தில் இறந்தவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல.போலீஸ் குற்றவாளியை தேடி வருவதாக அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.