ஜாதி குறித்து நரிக்குறவர் பெண்ணின் பதில் என வைரலாகும் சித்தரிக்கப்பட்ட யூடியூப் வீடியோ !

பரவிய செய்தி
தரமான கேள்வி. இப்ப பதில் சொல்லு பார்ப்போம். ஜாதி எங்க தான் இல்லாம இருக்கு. சிக்கினாயா சிவனாண்டி.
மதிப்பீடு
விளக்கம்
நரிக்குறவர் சமுதாய பெண்ணிடம் இரண்டு பேர் நேர்காணல் எடுக்கும் 50 வினாடி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அதில், ‘முன்பு இருந்த மாதிரி ஜாதியை பார்த்து இன்னும் பழகுகிறார்களா?’ என்று அப்பெண்ணிடம் முன் வைக்கப்பட்ட கேள்விக்கு ‘ஆமாம், ஜாதி பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். என்ன மாற்றம் கொண்டு வந்து இருக்கிறீர்கள்’ என பதிலளிக்கிறார்.
மேலும் உரையாடல் தொடர்கையில் நேர்காணல் எடுப்பவர் ஒருவர் தான் ஜாதி, மதம் பார்ப்பது இல்லை என கூறுகிறார். ‘அப்படியெனில் எனக்கு கல்யாணம் ஆகவில்லை. என்னை கட்டி (திருமணம்) கொள்வீர்களா?’ என அப்பெண் கேட்கிறார். இதனை பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
தரமான கேள்வி 👌#EnMannEnMakkal pic.twitter.com/gyBmRQewFI
— ஷிபின் Shibin (@Shibin_twitz) August 11, 2023
தரமான கேள்வி 👌
சிக்கினாயா சிவனாண்டி#EnMannEnMakkal pic.twitter.com/viEgYsD6tB
— Sugandha Selvakumar (@SuganthaSelvak1) August 11, 2023
உண்மை என்ன ?
பரவக் கூடிய அந்த வீடியோவில் தண்ணிவண்டி தமிழ் என காண்பிக்கப்படுகிறது. இதனை கொண்டு இணையத்தில் தேடியதில் அப்பெயரில் ஒரு யூடியூப் சேனல் இருப்பதையும், அதில் ‘அவங்க ஜாதி வழக்குப்படி கல்யாணம் பண்ண சொல்லிட்டாங்க’ என்ற தலைப்பில் ஒரு வீடியோவினையும் காண முடிந்தது. இந்த வீடியோவினை நேற்றைய தினம் (2023, ஆகஸ்ட் 11) பதிவிடப்பட்டுள்ளது.
அந்த வீயோவில் நரிக்குறவ சமுதாய பெண்ணும், அவரை நேர்காணல் எடுத்த இரண்டு ஆண்களும் துணிக்கடைக்கு சென்று கல்யாணத்திற்கான ஆடைகளை வாங்குவது போல் உள்ளது. அதில் 41வது வினாடியில் ‘இந்த பதிவில் வரும் அனைத்தும் சித்தரிக்கப்பட்டவை. இது குழந்தைகளுக்கான நிகழ்ச்சி அல்ல. இதில் வரும் அனைவரும் எமது குழுக்களைச் சார்ந்தவர்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் கமெண்டில் வேறொரு யூடியூப் வீடியோ லிங்கும் பதிவிடப்பட்டுள்ளது. அதில், பரவக் கூடிய வீடியோவின் பகுதி இடம் பெற்றுள்ளது. அந்த வீடியோவிலும் 1வது நிமிடம் 15வது வினாடியில் இது சித்தரிக்கப்பட்டு எடுக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.
யூடியூப் தளத்தில் இயங்கும் சில சேனல்கள், உண்மையான சம்பவங்கள் போல் சித்தரித்து வெளியிடப்படும் வீடியோக்களுக்கு பார்வையாளர்கள் அதிகம் வருவதால், இதுபோன்ற சித்தரிக்கப்பட்ட வீடியோக்களை அதிகம் வெளியிட்டு வருகின்றனர். அவற்றில் சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகவும் செய்கின்றன.
மேலும் படிக்க : முஸ்லீம்கள் பகுதியில் இந்துக்களை நுழைய விடவில்லை என வலதுசாரிகள் தவறாகப் பரப்பும் சித்தரிப்பு வீடியோ !
முடிவு :
நம் தேடலில், முன்பு இருந்த மாதிரி ஜாதியை பார்த்து இன்னும் பழகுகிறார்களா என்ற கேள்விக்கு நரிக்குறவர் சமுதாய பெண்ணின் பதில் எனப் பரவும் வீடியோ சித்தரிக்கப்பட்டு எடுக்கப்பட்ட யூடியூப் வீடியோவே. அதில் பேசிய பெண்ணும் அந்த சேனல் தரப்பை சேர்ந்தவர் என்பதையும் அறிய முடிகிறது.