85 வயதில் ஓய்வை அறிவித்த மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் சிசில் ரைட் !

பரவிய செய்தி
உலகின் மிகவும் வயதான கிரிக்கெட் வீரர் சிசில் ரைட்(Cecil wright ) வயது 85, தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்தார். மேற்கு இந்திய வேகப்பந்து வீச்சாளரான இவர் தனது வாழ்நாளில் 7000-க்கும் அதிகமான விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.
மதிப்பீடு
விளக்கம்
உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டில் நீண்டகாலமாக விளையாடி வயது மூப்பு காரணமாகவும், வாய்ப்புகள் குறையும் பொழுது விளையாட்டில் இருந்து தங்களுடைய ஓய்வை அறிவிக்கும் கிரிக்கெட் வீரர்கள் குறித்து கேள்விப்பட்டு இருப்போம். அதிகபட்சமாக 40 வயதிற்கு மிகாமல் முன்பாகவே ஓய்வை அறிவித்து விடுவர்.
ஆனால், சமீபத்தில் மேற்கிந்திய கிரிக்கெட் வீரரான சிசில் ரைட் என்பவர் தன்னுடைய 85 ஆவது வயதில் கிரிக்கெட்டில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்து இருப்பதாக முகநூலில் குழுக்களில் பதிவுகள் பதிவிட்டு ஆயிரக்கணக்கான லைக்குகள், ஷேர்களை பெற்றதோடு கமெண்ட்களில் பலரையும் உண்மையா என ஆச்சரியப்படுத்தி உள்ளது.
அதனை பற்றி தெரிந்து கொள்ள கிரிக்கெட் வீரர் சிசில் ரைட் குறித்து ஆராய்ந்த பொழுது செய்திகளில் வெளியான தகவல்களை காண நேரிட்டது. மேற்கிந்திய கிரிக்கெட் வீரரான சிசில் ரைட் தன்னுடைய 85 ஆவது வயதில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தன்னுடைய ஓய்வை அறிவித்து இருக்கிறார்.
சிசில் ரைட் முதன் முதலில் ஜமைக்கா அணியின் சார்பாக விளையாடி உள்ளார். இவர் ஒரு வேகப்பந்து வீச்சாளர் . இத்தனை ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட்டில் இருந்தாலும் விவி ரிச்சர்ட் மற்றும் ஜோயல் கார்னெர் உள்ளிட்ட கிரிக்கெட் ஜாம்பவான்களை போன்று பிரபலமானவராக இல்லை. எனினும், வேறுபாதையில் நீண்டகாலம் வலம் வந்துள்ளார்.
60 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்நாளில் 7000 விக்கெட்களை வீழ்த்தியதாக அவரே தெரிவித்து இருக்கிறார். விவி ரிச்சர்ட் மற்றும் ஜோயல் கார்னெர் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் உடனும் சிசில் விளையாடி உள்ளார்.
நீண்டகாலமாக கிரிக்கெட் விளையாட்டில் இருந்தும் பெரிதும் அறியப்படவில்லை என்றாலும், தன்னுடைய 85 ஆவது வயதில் ஓய்வை அறிவித்த பிறகு உலக அளவில் சிசில் ரைட் பிரபலமாகி உள்ளார். அனைத்து செய்தி ஊடகங்களிலும் சிசில் குறித்த செய்திகள் வெளியாகி உள்ளன.