24 மணி நேர செல்போன் விளையாட்டால் இளைஞருக்கு நேர்ந்த கதியா ?

பரவிய செய்தி
17 வயது இளைஞர் 24 மணி நேரமும் செல்போனில் இருந்தார். இப்போது இவர் மூளை செயலிழந்து விட்டது. ஆனாலும் அவர் கைகளை பாருங்கள் .
மதிப்பீடு
விளக்கம்
இன்றைய தலைமுறையினர் செல்போன் பயன்பாட்டில் மூழ்கி இருக்கின்றனர் என்பது நிதர்சனம். அப்படி 24 மணி நேரமும் செல்போனில் மூழ்கிய 17 வயது இளைஞர் ஒருவருக்கு மூளை செயலிழந்து விட்டது. ஆனால், அவரின் கைகள் இரண்டும் எதையோ பிடித்துக் கொண்டு இருப்பது போன்று இயங்கும் வீடியோவானது முகநூல் உள்ளிட்டவையில் வைரலாகி வருகிறது.
மொஹமத் ரபீக் என்பவர் முகநூலில் பதிவிட்ட வீடியோ 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்கள் மற்றும் 90 ஆயிரம் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.
” மூளை செயலிழந்த இளைஞரின் கைகள் தானாக செல்போன் விளையாடுவது போன்று இயங்குவதாக கூறுவது முற்றிலும் தவறான தகவல். மூளை சாவு அல்லது கோமாவில் இருக்கும் ஒருவரின் கை, கால்கள் இயங்க வாய்ப்பில்லை. மேலும், அவரின் இரு கைகளின் விரல்களும் ப்லேஸ்டேஷனில் ஜாய்ஸ்டிக்கை இயக்குவது போன்றும் அசைகின்றன. வீடியோவின் இறுதியில் அவரின் கையில் ஒரு செல்போன் வைக்கப்படுகிறது. அதை வைத்துக் கொண்டு உறுதியாக எதையும் கூறிவிட முடியாது “.
இது குறித்து மருத்துவர் பிரவீன் கூறுகையில், ” இது தூக்கத்தில் நடப்பது மற்றும் பேசுவது போன்ற செயல். மயக்க மருந்து (அனீஸ்தீஸியா) கொடுக்கப்பட்ட பொழுது கனவில் இருப்பது போன்றே உணர்வார்கள். ஒருவேளை மருந்து கொடுப்பதற்கு முன்பாக செல்போனில் விளையாடுவது நிகழ்ந்து இருந்ததால், இப்படி நிகழ்ந்து இருக்கக்கூடும் ” எனக் கூறினார்.
” 17 வயது இளைஞர் 24 மணி நேரமும் செல்போனில் இருந்தார். இப்போது இவர் மூளை செயலிழந்து விட்டது. ஆனாலும் அவர் கைகளை பாருங்கள் ” என இவ்வீடியோ தமிழில் வைரல் ஆகியது போன்று, இந்திய அளவில் பிற மாநிலங்களில் PUBG விளையாட்டால் பாதிக்கப்பட்டு இருப்பதாக இதே வீடியோ உடன் சில புகைப்படங்கள் முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்டவையில் வைரல் செய்யப்பட்டன.
ஆனால், அப்புகைப்படத்தில் இருப்பவர் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கர்நாடகாவைச் சேர்ந்த 17 வயதான சுஜன் ஆவார். அவரின் சிகிச்சைக்கு நிதியுதவி கேட்டு Milap என்ற இணையதளத்தில் விவரங்கள் இணைக்கப்பட்டு இருந்தன. அந்த விவரங்களில் செல்போன், பப்ஜி விளையாட்டு குறித்த தகவல்கள் ஏதுமில்லை. ஆக, அந்த செய்திக்கும் பரவிய வீடியோவிற்கும் தொடர்பு இல்லை.
பிற மாநிங்களில் வெளியான பதிவுகளில் இடம்பெற்ற வைரலான வீடியோ மட்டுமே தற்பொழுது தமிழில் வைரலாகி வருகிறது. மேலும், இதே வீடியோ 2019 ஆகஸ்ட் 22-ம் தேதி picpanzee என்ற இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. அதில், பப்ஜி விளையாட்டை நேசிப்பவர்களை குறிப்பிட்டு பாகிஸ்தான் நாட்டின் டக்கள் அதிகம் இடம்பெற்று உள்ளன.
செல்போனில் மூழ்கியவர் மற்றும் பப்ஜி விளையாட்டால் பாதிக்கப்பட்டவர் என மேற்காணும் வீடியோ இந்திய அளவில் வைரலாகி இருக்கிறது . ஆனால், பப்ஜி விளையாட்டால் அல்லது செல்போன் பயன்பாட்டால் இப்படி ஆகியதாக இந்த வீடியோ குறித்து ஆதாரங்கள் இல்லை. சில தவறான புகைப்படங்கள் உடன் பகிரப்பட்டு உள்ளன. மேலும், இந்த வீடியோவின் தொடக்கம் எங்கிருந்து வந்தது என்பது குறித்தும் கிடைக்கவில்லை.
விளையாட்டிற்காக அவரின் கையில் செல்போனை அளித்து இருக்கலாம். வீடியோவின் உண்மையான தகவல்கள் தெரியாமல் பல தவறான செய்திகளுடன் இவ்வீடியோ பகிரப்படுகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேற்கொண்டு, அந்த வீடியோவை பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.