This article is from Oct 13, 2019

அதிகம் செல்போன் பயன்படுத்தினால் கண்ணில் புழு படருமா ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி

அதிக நேரம் மொபைல் போனில் விளையாட்டால் கண்களுக்குள் படரும் ஒட்டுண்ணி என்னும் புழுவை அகற்றும் காட்சி. அவசியம் பாருங்கள் இதை தயவு செயது அனைவருடைய குரூப்க்கும் அனுப்பவும்.அனுப்பியவர்க்கு கோடி நன்றி…பகிர்வது மட்டும் இன்றி குழந்தைகளுக்கு போட்டு காட்டி விளக்கவும் நண்பர்களே…

மதிப்பீடு

விளக்கம்

இன்றைய நாட்களில் சிறு குழந்தைகளுக்கும் செல்போன்களை பழக்கப்படுத்தி விட்டதால், அவர்கள் செல்போன் பயன்படுத்துவதிலேயே மூழ்கி விட்டனர். அதிக நேரம் செல்போன் விளையாட்டால் உடல் ரீதியான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.

இப்படி அதிக நேரம் செல்போன்களில் விளையாடியதால் கண்ணில் படரும் ஒட்டுண்ணி போன்ற நீளமான புழுவை அறுவை சிகிச்சை செய்து அகற்றும் காட்சி என மேற்காணும் வீடியோ வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நீண்டகாலமாக பரவி வருகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த வீடியோவை பகிருமாறு கேட்டுக் கொண்டனர்.

எனினும், அதிகப்படியான செல்போன் பயன்பாடு கண்ணில் புழுக்களை உருவாக்குமா என்பது குறித்து விரிவாக ஆராய்ந்து பார்க்க தீர்மானித்தோம்.

கண்ணில் இருக்கும் புழு :

கண்ணில் இருந்து நீளமான புழு ஒன்றை அகற்றும் வீடியோவில் இருந்து காட்சியில் இருந்து புகைப்படத்தை எடுத்து ரிவர்ஜ் இமேஜ் செய்து பார்த்தும், கண்ணில் இருந்து புழுவை அகற்றும் காட்சி என்ற சில முக்கிய வார்த்தைகளை பயன்படுத்தி தேடிய பொழுதும் வீடியோ தொடர்பான சில செய்திகள் நமக்கு கிடைத்தன.

Video archived link 

அதில் ஒன்றாக ,2013-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி indiavideodotorg என்ற யூட்யூப் சேனலில் ” 20 cm Long Worm In The Human Eye, First Ever Recorded On Video ” என்ற தலைப்பில் பதிவாகி இருந்த வீடியோவை கண்டோம். அந்த வீடியோவில் கண்ணில் இருந்து புழுவை நீக்கிய காட்சிக்கு பிறகு கேரளாவைச் சேர்ந்த ” Mulamoottil Eye Hospital “-ஐ சேர்ந்த மருத்துவர் ஆஷ்லே தாமஸ் ஜகோப் பேசும் பொழுது,  லோவா லோவா புழுக்கள் ஈக்கள் மூலம் பரவுவதாக தொடர்ந்து பேசி இருக்கிறார்.

மேற்கண்ட வீடியோவை வெளியிட்ட indiavideo சேனலின் இணையதளத்தில் அதே வீடியோவை பதிவிட்டு, கீழே அறுவை சிகிச்சை குறித்த விவரத்தை அளித்து இருக்கின்றனர். அதில்,

” இது மனித கண்ணில் இருந்து 20 செமீ  நீளமுள்ள லோவா லோவா புழுவின் அறுவை சிகிச்சை நீக்கம் . இந்த புழுவானது முதலில் மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து காணப்பட்டது . இதில் மனிதன் இடைநிலை தொகுப்பாளர். இதை பரப்புவது சதுப்புநில அல்லது மான் ஈக்கள். இந்த பூச்சிக்கள் மனித உடலின் தோலில் காயங்களை ஏற்படுத்தி இரத்தத்தின் வழியாக உடலுக்குள் பரப்பி விடுகிறது. இதில் வளரும் புழுக்கள் கண்கள் , நுரையீரல் , இதயம் மற்றும் தோலுக்கு அடியில் என இடம்பெயர்கிறது  ” எனக் குறிப்பிட்டு இருக்கின்றனர்.

Video archived link 

இதற்கு முன்பாக 2012-ம் ஆண்டில் வெளியான மற்றொரு வீடியோவில் 19 செமீ நீளமுள்ள புழு மனித கண்ணில் இருந்து நீக்கப்படுவதை காட்டி இருக்கின்றனர். அதிலும் , லோவா லோவா புழு என்றே தெரிவித்து குறிப்பிட்டு இருக்கின்றனர்.

இதேபோன்று, இரவில் அதிக அளவில் செல்போன் பயன்படுத்தினால் கண் மற்றும் மூளையில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக முன்பு வதந்திகள் பரவி இருந்தது. அதனை குறித்தும்,

விரிவாக படிக்க : இரவில் செல்போன் பயன்படுத்தினால் கண்ணில் புற்றுநோய் வருமா ?

முடிவு : 

நம்முடைய தேடலில் இருந்து , அதிகம் செல்போன்களில் விளையாடியதால் கண்ணில் புழுக்கள் உருவாகுவதாக பரவும் வீடியோ ஆனது சதுப்புநில ஈக்கள் மூலம் மனிதனில் பரவும் லோவா லோவா எனும் புழுக்கள் அகற்றும் காட்சியே என்பதை புரிந்து கொண்டு இருப்பீர்கள்.

கண்களில் புழுக்கள் இருப்பதை கண்டறிந்து அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய சம்பவங்கள் பல உள்ளன. ஆனால், செல்போன் பயன்படுத்தி கண்களில் புழுக்கள் வந்ததாக செய்திகள் கிடைக்கவில்லை.

செல்போன்களை குறைத்து பயன்படுத்துவது கண்ணிற்கு நல்லது என்றாலும், இவ்வாறான வதந்திகளை பரப்பி மக்களை அச்சுறுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader