மத்திய அரசு நிதி கொடுத்தும் ஆக்சிஜன் ஆலையை டெல்லி, மகாராஷ்டிரா அரசு அமைக்கவில்லையா ?

பரவிய செய்தி

8 ஆக்சிஜன் மையம் அமைக்க மத்திய அரசு 202 கோடி நிதி கொடுத்தும் ஒரே ஒரு மையம் மட்டும் அமைச்சு மக்களை வதைக்கும் கெஜ்ரிவால்

மதிப்பீடு

விளக்கம்

கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்ததன் காரணமான வடமாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்ட போது மத்திய அரசின் மீது குற்றச்சாட்டுகள் அதிகம் எழுந்தன. இதில் மாநில அரசுகளும் அடங்கும்.

Advertisement

இதையடுத்து, மத்திய அரசின் சார்பில் ஆக்சிஜன் ஆலைகள் அமைக்க நிதியுதவி அளித்தும் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில அரசுகள் நிதியைப் பெற்றுக் கொண்டு ஆக்சிஜன் ஆலையை அமைக்கவில்லை என பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்கள் தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

” 162 ஆக்சிஜன் ஆலை அமைக்க மாநில வாரியாக பிஎம் கேஸ் நிதியில் இருந்து ரூ.201.58 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில், மேற்கு வங்கத்திற்கு 5 ஆலைகளுக்கும், மகாராஷ்டிராவிற்கு 10 ஆலைகளுக்கும், டெல்லிக்கு 8 ஆலைகளும் அமைக்க அம்மாநில அரசுகள் நிதி பெற்றுள்ளனர் ” என இந்திய அளவில் பகிரப்பட்டு வருகிறது.

Archive link 

Advertisement

உண்மை என்ன ?

1.மாநில அரசுகளுக்கு நிதி வழங்கப்பட்டதா ?

2021 ஜனவரியில், ” 162 பிரஷர் ஸ்விங் அட்ஸார்ப்சன்(பிஎஸ்ஏ) மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை அமைக்க மத்திய அரசின் அமைப்பான சிஎம்எஸ்எஸ்-க்கு ரூ201.58 கோடி பிஎம் கேர் நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

ஆக்சிஜன் உற்பத்தி ஆலை தொடர்பாக விற்பனையாளர்களை மதிப்பிடுவது, தேர்ந்தெடுப்பது, விலையை நிர்ணயிப்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் இருந்து பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்வது போன்றவை சிஎம்எஸ்எஸ் (Central Medical Supply Store) உடைய பொறுப்பாகும்.

ஜனவரி 5-ம் தேதி Press Information Bureau மற்றும் PMO தரப்பில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைப்பது குறித்து வெளியிட்ட அறிவிப்பில் மாநில அரசிற்கு நிதி அளிக்கப்படுவதாக எங்கும் குறிப்பிடவில்லை.

” இந்த ஆலைகளுக்கு 3 ஆண்டுகளுக்கு உத்தரவாதம் உள்ளது. அடுத்த 7 ஆண்டுகளுக்கு சிஏஎம்சி(விரிவான வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தம்) கீழ் திட்டம் அடங்கும். அதன்பிறகு, வழக்கமான செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஆனது மருத்துவமனை/ மாநிலங்களால் செய்யப்பட வேண்டும் ” எனக் கூறப்பட்டுள்ளது.

முதல் 150 ஆலைகளுக்கான ஏலத்திற்கு அழைக்கும் டெண்டரை சிஎம்எஸ்எஸ் 2020 அக்டோபரில் வெளியிட்டது. கொரோனா பெருந்தொற்றிற்கு நாடு தழுவிய பொதுமுடக்கம் அறிவித்த 8 மாதங்களுக்கு பிறகு டெண்டர் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆக்சிஜன் ஆலைகள் சிஎம்எஸ்எஸ் மூலம் நிறுவப்பட வேண்டும் மற்றும் மத்திய அரசால் நேரடியாக நிதியளிக்கப்படுகிறது.

2. ஆம் ஆத்மி அரசு மறுப்பு :

ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் அமைப்பதில் நிதி ஏதும் வழங்கப்படவில்லை, டெல்லியில் பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகள் அமைப்பதில் உள்ள தோல்வியை மறைக்க ” தவறான தகவல்களை ” மத்திய அரசு கொடுப்பதாக கெஜ்ரிவால் அரசு அறிக்கை வெளியிட்டதாக ஏப்ரல் 26-ம் தேதி ஏஎன்ஐ செய்தி முகமை வெளியிட்டு இருக்கிறது.

” இந்தியா முழுவதும் 162 பிஎஸ்ஏ ஆக்சிஜன் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து 2020 அக்டோபரில் அதற்கான டெண்டர்களை வெளியிட்டது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த ஆலைகளை பிஎம் கேர் நிதி மூலம் மத்திய சுகாதார அமைச்சகம் வாயிலாக அமைக்கப்படும், மாநில அரசுகளுக்கு ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை. சொல்லப்போனால், மத்திய அரசிற்கு சொந்தமான சஃப்தர்ஜங் மருத்துவமனையில் கூட பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலை செயல்படவில்லை ” என ஆம் ஆத்மி அரசு தெரிவித்து உள்ளது.

3. ஏன் தாமதம் & எத்தனை ஆலைகள் அமைக்கப்பட்டன  

ஆக்சிஜன் ஆலை அமைப்பதற்கான தாமதங்களுக்கு மருத்துவமனை மற்றும் ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிறுவனங்களும் ஒருவருக்கொருவர் குறை சொல்லுகிறார்கள். இயந்திரங்கள் அமைக்க இடத்தை உருவாக்கி உள்ளதாகவும், ஆனால் இன்னும் அவற்றைப் பெறவில்லை, அவற்றை நிறுவவில்லை என மருத்துவமனைகள் கூறுகின்றன. மறுபுறம், சில நிறுவனங்கள் அனைத்து கொள்முதலையும் முடித்து விட்டதாகவும், ஆனால் மருத்துவமனையில் போதுமான உள்கட்டமைப்பு தயாராக இல்லை எனக் கூறுகிறார்கள் என ஸ்க்ரோல் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

ஒப்பந்தங்கள் அளிக்கப்பட்ட பிறகும், 4 மாதங்களில் கூறப்பட்ட 162 ஆக்சிஜன் ஆலைகளில் 33 மட்டுமே நிறுவப்பட்டு இருக்கிறது. 2021 ஏப்ரல் இறுதிக்குள் 59 ஆலைகளும், மே இறுதிக்குள் 80 ஆலைகளும் நிறுவப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

Twitter archive link

ரூ.201 கோடியில் 162 பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலை அமைக்கும் திட்டம் குறைந்த விலையில் அமைக்கப்படுவதே. சராசரியாக மருத்துவமனையில் அமைக்கப்படும் ஒரு ஆலைக்கு 1.25 கோடி ஆகிறது. இந்த ஆலையின் கொள்ளளவு நிமிடத்திற்கு 100 லிட்டர் முதல் 1000 லிட்டர் வரையாகும். இந்த ஆலையில் ஒரு நிமிடத்திற்கு 1000 லிட்டர் கொள்ளவு இருக்கையில் 100-160 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் உதவி கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

முடிவு :

நம் தேடலில், டெல்லிக்கு 8 ஆக்சிஜன் ஆலைக்கும், மகாராஷ்டிராவிற்கு 10 ஆலைக்கும் மத்திய அரசின் பிஎம் கேர் நிதியில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதியை அம்மாநில அரசுகள் பயன்படுத்தாமல் விட்டதாக பரப்பப்படும் தகவல் தவறானது.

அதேபோல், 8 ஆக்சிஜன் மையம் அமைக்க மத்திய அரசு 202 கோடி நிதி கொடுத்ததாக மீம் பதிவில் கூறி இருப்பதும் தவறான தகவல். 162 ஆக்சிஜன் ஆலை அமைக்க அளிக்கப்பட்ட நிதியே ரூ.201.58 கோடியாகும். 162 ஆக்சிஜன் ஆலைகள் அமைக்க பிஎம் கேர் நிதியானது மாநில அரசுகளுக்கு அளிக்கப்படவில்லை, நேரடியாக சிஎம்எஸ்எஸ் எனும் மத்திய அரசின் அமைப்பிற்கே செல்கிறது.

ஆக்சிஜன் ஆலை அமைக்க மாநில அரசிற்கு நிதி அளித்ததாக மத்திய அரசின் ஆதரவாளர்கள் பரப்பும் தகவலை டெல்லி அரசு மறுத்து உள்ளது என அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button