This article is from Sep 30, 2018

16 ஆண்டுகளில் விளம்பரத்திற்காக ரூ.10000 கோடியை செலவிட்ட மத்திய அரசு.

பரவிய செய்தி

கடந்த 16 ஆண்டுகளில் அரசு விளம்பரத்திற்காக ரூ.10000 கோடியை செலவிட்ட மத்திய அரசு. மத்திய அரசின் விளம்பரத்திற்கு மக்களின் வரிப்பணம் தேவையின்றி செலவிடப்படுவது அதிகரித்து வருகிறது.

மதிப்பீடு

விளக்கம்

விளம்பரம்..! இந்தியாவில் விளம்பரம் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. தேர்தலுக்கு முன்பும், தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சியைப் பிடித்தாலும் விளம்பரம் அவசியமாகிறது. மத்தியில் ஆளும் அரசு தங்களின் திட்டங்கள், சாதனைகள் மற்றும் பல விசயங்களை விளம்பரம் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்துகிறது. இந்த விளம்பரம் தொடர்பான செயலில் மட்டுமே எப்பொழுதும் ஒதுக்கப்படும் நிதியை விட அதிகமாகவே செலவிடப்படுகிறது.

மக்களின் வரிப்பணம் கொண்டு நாட்டு மக்களுக்கு ஏதேனும் திட்டம் செயல்படுத்தினால், அதற்கு அதிகளவில் மத்திய அரசு விளம்பரம் தேடிக் கொள்ள மக்களின் வரிப்பணத்தைச் செலவிடுகிறது. மத்திய அரசின் தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் “ The Directorate of Advertising and visual publicity (DAVP) “ வெளியிட்ட தகவலில் மத்திய அரசு 2002-2003 முதல் 2017-2018( 09 மார்ச் 2018) வரையில் அனைத்து விதமான விளம்பரத்திற்கும் ரூ.10,000 கோடியை செலவிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

DAVP வெளியிட்ட தகவல் 2002 ஆம் ஆண்டில் இருந்தே உள்ளது. 2002- 2018க்கு இடைப்பட்ட 16 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியும், 6 ஆண்டுகள் பாரதிய ஜனதா கட்சியும் ஆட்சியும் இருந்துள்ளது. ஓவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் விளம்பர செலவு அதிகரித்துக்கொண்டே செல்வதை பார்க்க முடிகிறது. எனினும், 2006-2007, 2011-2012 மற்றும் 2014-2015 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே விளம்பர செலவுகள் குறைந்து உள்ளன. ஆனால், தேர்தல் காலங்களில் விளம்பர செலவானது மற்ற ஆண்டுகளைக் காட்டிலும் 40 சதவீதம் அதிகமாக உள்ளன. 2013-2014 ஆண்டில் இருந்தே  விளம்பர செலவுகள் 1000 கோடியை தாண்டி உள்ளது.

மத்திய அரசுகள் :  

2002-ல் வாஜ்பாய் ஆட்சியில் ஒரு ஆண்டிற்கு விளம்பரத்திற்க்காக 47 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. அதன்பின் வந்த காங்கிரஸ் ஆட்சியின் தொடக்கத்தில் 312 கோடி செலவிட்டனர். ஆனால், அடுத்த ஆண்டே அது இரட்டிப்பாகிறது. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த போது 999 கோடியை செலவிட்டனர். அதன்பின் பாரதிய ஜனதா ஆட்சியில் 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.4806 கோடி விளம்பரத்திற்காக செலவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டிற்கும் தோராயமாக ரூ.1202 கோடி செலவிட்டுள்ளனர்.

எதற்காக செலவு ?

விளம்பரத்திற்காக செலவிடப்பட்ட 10000 கோடியில் மிகப்பெரிய தொகை அச்சு விளம்பரத்திற்கே செலவிட்டுள்ளனர். 43 சதவீதத் தொகையான ரூ.4272 கோடி அச்சு பத்திரிகைகளுக்கும், 34.5 சதவீதம்( 3431 கோடி) Audio-visual மற்றும் மீதமுள்ள 8 சதவீதம் (786 கோடி) பிரசுரம் மற்றும் வெளிப்புற விளம்பரம் ஆகும். 2013-2014 ஆம் ஆண்டில் Audio-visual விளம்பரத்திற்கே அதிகளவில் செலவழித்துள்ளனர். 2016-2017 ஆம் ஆண்டில் Audio-visual-க்கு ரூ.140 கோடியை மத்திய அரசு செலவிட்டுள்ளது.

மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளம்பரம் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்துவது அவசியம். ஆனால், தங்கள் அரசின் சாதனை எனக் கூறி அரசு விளம்பரம் செய்யும் ஒவ்வொரு ரூபாயும் மக்களின் வரிப்பணமே. மக்களின் நலம் பற்றி சிந்திப்பவர்கள் வீண் விளம்பரத்தை விரும்பமாட்டார்கள் என்பது காமராஜர் காலத்தோடு முடிந்து விட்டது.

தொடர்புடைய கட்டுரைகள்

மத்திய அரசு திட்டங்களின் விளம்பர செலவு ரூ.3755 கோடி

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader