மேகதாது அணை கட்டுவதற்கு ஆய்வு நடந்த மத்திய அரசு அனுமதி மறுப்பா ?

பரவிய செய்தி
காவிரியாற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்த கர்நாடகாவிற்கு மத்திய அரசு மறுப்பு. தமிழக அரசின் எதிர்ப்பை சுட்டிக்காட்டி கர்நாடகாவின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து உள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
கர்நாடகாவில் மேகதாது எனும் பகுதியில் காவிரியாற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான முயற்சியை கர்நாடக அரசு துவங்கியது. ஆனால், மேகதாதுவில் அணை கட்ட கூடாது என எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், மேகதாது அணை கட்டுவது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்வது குறித்த கர்நாடகாவின் கோரிக்கையை மத்திய அமைச்சகம் மறுத்துள்ளது. மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்க சுற்றுச்சூழல்துறை அனுமதி அளிக்கக்கூடாது என தமிழக அரசு இருமுறை வலியுறுத்தியதை குறிப்பிட்டும், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே சுமூகமான தீர்வு ஏற்பட்டால் மட்டுமே ஆய்வு நடந்த அனுமதி தரப்படும் என மத்திய சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் குழுத் தெரிவித்து உள்ளனர்.
அணைக்கான மாற்று இடத்தைப் பற்றி கர்நாடகா அரசு குறிப்பிடவில்லை, மாறாக ஒரே இடத்தில் இருவேறு உயரங்களில் அணை கட்டுவது தொடர்பாக இடம்பெற்று உள்ளது. எனவே, சிறந்த மாற்று இடத்தை தேர்வு செய்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நிபுணர் குழுவானது கூறியுள்ளது.
மேகதாது அணையானது சுமார் 4,996 ஹெக்டர் வனப்பகுதியையும் உள்ளடக்கி உள்ளது. இதற்கு குழுவானது, தேவையான நிலப்பரப்பு குறித்த தேர்வுமுறை குறித்தும் வினவியுள்ளது. மேகதாது அணை சுமார் 9,000 கோடி மதிப்பில் உருவாக கர்நாடக அரசு தீர்மானித்து இருந்தது.
கர்நாடகாவின் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்வது குறித்த கோரிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி மறுத்து இருப்பது தமிழகத்திற்கு மகிழ்ச்சியான செய்தியே !.
தமிழகத்தின் எதிர்ப்பை சுட்டிக்காட்டியதோடு, இரு மாநிலத்திற்கும் சுமூக உறவு இருந்தால் தான் ஆய்வு மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.