திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் தமிழ் நீக்கம் என வதந்தி !

பரவிய செய்தி

முடிந்தளவு பகிருங்க.. எங்கடா எங்க தாய்மொழி தமிழ்..

Tweet link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

திருவாரூரில் அமைந்துள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகையில் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்று உள்ளதாகவும், தமிழ் மொழி இடம்பெறவில்லை எனக் கூறி கீழ்காணும் புகைப்படம் முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Facebook link | archive link 

தமிழன் அலெக்ஸ் எனும் முகநூல் பக்கத்தில் வெளியான இப்பதிவு 7 ஆயிரத்திற்கும் மேல் ஷேர் ஆகியுள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் போராட்டம் நிகழ வேண்டும் என கமெண்ட் செய்து வருகிறார்கள். வைரலாகும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

திருவாரூர் மத்திய பல்கலைக்கழத்தின் பெயர்ப்பலகையில் தமிழ் மொழி இடம்பெற்று உள்ளதா என புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து தேடிப் பார்க்கையில், 2019-ம் ஆண்டில் ” தமிழில் பெயர்ப்பலகை: கண்டுகொள்ளாத தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை ” எனும் தலைப்பில் தினமணி செய்தியில் இப்புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது. எனினும், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழில் பெயர் பலகை இருக்கிறதா அல்லது இல்லையா என எந்த தகவலும் இடம்பெற்றவில்லை.

Advertisement

மேற்கொண்டு தேடுகையில், panmai2010.wordpress.com-ல் 2011 பிப்ரவரி 9-ம் தேதி ” பெயர்/விளம்பரப் பலகையில் தமிழ் ” எனும் தலைப்பில் வெளியான கட்டுரையில் வைரலாகும் புகைப்படமும், தமிழில் உள்ள புகைப்படமும் இடம்பெற்று இருக்கிறது.

அதில், ” திருவாரூரில் மத்தியப் பல்கலைக்கழகம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தற்காலிகக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அதற்குச் செல்லும் இரு வழிகளில் ஒன்றில் ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் பெயர்ப்பலகையும், மற்றொரு வழியில் தமிழில் மட்டும் ஒரு பெயர்ப்பலகையும் வைக்கப்பட்டுள்ளது. உள்ளேயும் தனித்தனியேதான் பெயர்ப்பலகைகள் வைத்திருக்கிறார்கள் ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்தியப் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு ஒரு பெயர்ப்பலகையும், இந்தி மற்றும் ஆங்கிலத்திற்கு ஒரு பெயர்ப்பலகையும் என தனித்தனியாக பெயர்ப்பலகை வைத்ததே குழப்பத்திற்கு காரணம். எதற்காக தனித்தனி பெயர்ப்பலகை வைத்துள்ளனர் என்றும், ஒரே பலகையாக வைப்பதில் என்ன சிரமம் என்றும் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இதேபோல், திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படத் தொகுப்பில் நுழைவு வாயிலில் தமிழ், இந்தி, ஆங்கிலத்தில் பெயர் பொறிக்கப்பட்டு உள்ளது. மேலும், பல்கலைக்கழகத்தின் கட்டிடத்திலும் அவ்வாறே பெயர் இடம்பெற்றுள்ள மற்றொரு புகைப்படத்தையும் பார்க்க முடிந்தது.

மேலும் படிக்க : சென்னை சென்ட்ரலில் தமிழ் மொழி நீக்கப்படவில்லை !

இதற்கு முன்பாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழ் மொழியில் பெயர்ப்பலகை வைக்கப்படவில்லை என வதந்தி பரவியது. இதேபோல் அங்கும் தமிழுக்கு முதலில் பெயர்ப்பலகை வைத்திருந்ததை பார்க்காத காரணத்தினால் குழப்பம் ஏற்பட்டது.

முடிவு : 

நம் தேடலில், திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழத்தில் தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளதாக பரவும் தகவல் தவறானது என்றும், தமிழுக்கு தனி பலகையும், இந்தி மற்றும் ஆங்கிலத்திற்கு தனி பலகையும் வைக்கப்பட்டு உள்ளதை அறிய முடிகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button