Fact Check

சி.எஃப்.எல்(CFL) பல்புகள் உடைந்தால் பேராபத்தா ?| பயன்படுத்தக்கூடாதா ?

பரவிய செய்தி

#எச்சரிக்கை !

சி.எஃப்.எல்( CFL )பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால், உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம், ஆர்சனிக், துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது.

இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ, மைக்ரேன் தலைவலி, மூளை பாதிப்பு, உடல்அசைவுகள், பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம். அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம்.

மதிப்பீடு

விளக்கம்

வீடுகளில் பயன்படுத்தி வரும் சி.எஃப்.எல் பல்புகள் குறித்த எச்சரிக்கை பதிவு ஒன்று ஊடக செய்தி முதல் சமூக வலைதளங்கள் வரையில் வெளியாகி இருப்பதை காண நேரிட்டது. சி.எஃப்.எல்(CFL)பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால், உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

Advertisement

ஆங்கிலத்தில் வெளியான எச்சரிக்கை செய்தியை தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள். சி.எஃப்.எல் பல்புகள் உடைந்தால் ஆபத்து என வைரலாகும் எச்சரிக்கை தகவலின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்தோம்.

பிரிட்டிஷ் சுகாதாரத்துறை :

மேற்கூறிய எச்சரிக்கை தகவலை பிரிட்டிஷ் சுகாதாரத்துறை அறிவித்து இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், பிரிட்டிஷ் சுகாதாரத்துறை மூலம் அப்படியொரு எச்சரிக்கை தகவல் வெளியாகவில்லை.

உண்மையில், பிரிட்டிஷ் சுகாதாரத்துறை என்ற துறை நீண்டகாலமாக இருக்கவில்லை. 1968-ம் ஆண்டிலேயே சுகாதார அமைச்சகம் கலைக்கப்பட்டது. அதன் செயல்பாடுகள் Department of Health and Social Security(DHSS) எனும் துறைக்கு மாற்றப்பட்டன. தற்பொழுது Department of Health என்ற துறையே ஐக்கிய ராஜ்யத்தின்(UK) மக்கள் சுகாதார பிரச்சனைகளுக்கான பொறுப்பேற்று உள்ளது.

மெர்குரி :

சி.எஃப்.எல் பல்பு உடைந்தால் அதனுள் உள்ள மெர்குரி வெளியேறி மனிதர்களின் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் என எச்சரிக்கை செய்தியில் குறிப்பிட்டு இருக்கின்றனர். மெர்குரி நிச்சயமாக அதிக ஆபத்தான பொருள். மெர்குரி வெளியேறும் பொழுது தொடர்ச்சியான சுகாதார பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.

இருப்பினும், மெர்குரியின் அளவையும் கருத்தில் கொள்ள வேண்டும். சி.எஃப்.எல் பல்புகளில் இருக்கும் மெர்குரியின் அளவு 4-5 மில்லி கிராம் மட்டுமே. அந்த அளவானது பால் பாயிண்ட் பேனாவின் நுனியை மூடக் கூடிய சிறிய அளவே.

Health Protection Agency இணையதளத்தில் ” Fact sheet on mercury and compact fluorescent lamps (CFLs – Energy Saving Light Bulbs) ” என்ற தலைப்பில் சி.எஃப்.எல் பல்பு குறித்த சரியான தகவலை வெளியிட்டு இருக்கிறார்கள்.

2008-ல் பிபிசியில் வெளியான செய்தியில் Dr David Ray, toxicologist கூறுகையில், ” தற்பொழுது உள்ள குறைந்த ஆற்றல் பல்புகளில் மிகவும் குறைந்த அளவிலான மெர்குரியே(5மிகி-க்கு குறையாமல்) இருக்கின்றன. ஒரு சி.எஃப்.எல் பல்பு உடைவதால் மிகப்பெரிய அளவிலான ஆபத்து இல்லை. இருப்பினும், காற்றோட்டம் இல்லாத ஒரு சிறிய அறையில் 5 சி.எஃப்.எல் பல்புகள் உடைக்கப்பட்டால் குறுகிய கால ஆபத்து ஏற்படக்கூடும் ” எனத் தெரிவித்து இருக்கிறார்.

சி.எஃப்.எல் பல்பு உடைந்தால் செய்ய வேண்டியது :

  1. உடைந்த பல்புகளால் உடலில் காயங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  2. அறையை விட்டு வெளியேறி, குழந்தைகள் மற்றும் வீட்டு விலங்குகளை அப்பகுதிக்கு வெளியே இருக்க செய்யுங்கள். அந்த அறையில் ஏசி இருந்தால் உடனே ஆஃப் செய்ய வேண்டும்.
  3. சுத்தம் செய்வதற்கு முன்பாக 15 நிமிடங்கள் அறையில் இருக்கும் ஜன்னல், கதவுகளை திறந்து வைத்து காற்றோட்டமாக வைக்க வேண்டும்.
  4. வேக்கும் க்ளீனரால் சுத்தம் செய்யக் கூடாது. வெறும் கைகளை பயன்படுத்தாமல் ரப்பர் கையுறைகள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
  5. உடைந்த பல்பின் பாகங்களை நேரடியாக குப்பையில் கொட்டாமல், ஒரு பிளாஸ்டிக் பையில் சேகரித்து சீல் செய்யவும்.

முடிவு :

நம்முடைய தேடலில், சி.எஃப்.எல் பல்புகள் தொடர்பாக பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்ததாக கூறும் தகவல் தவறானது. சி.எஃப்.எல் பல்புகள் குறித்து வல்லுனர்களின் தகவலையும் பெற முடிந்தது.

எனினும், சி.எஃப்.எல் பல்புகள் உடைந்தால் உடனடியாக செய்ய வேண்டியது என்ன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பல்புகள் உடையும் பொழுது அவற்றை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button