பச்சோந்தி அதிவேகமாக தன் நிறத்தை மாற்றும் காட்சி?| உண்மை என்ன?

பரவிய செய்தி
பச்சோந்தி தன் நிறத்தை சூழ்நிலைக்கேற்ப மாற்றும் அற்புதமான காட்சி.
மதிப்பீடு
விளக்கம்
பச்சோந்தி சூழ்நிலைக்கு ஏற்ப தன் நிறத்தை மாற்றிக் கொள்ள கூடியது என்பதை பலரும் அறிந்து இருப்போம். ஆனால், அதிவேகமாக தன்னுடைய நிறத்தை பச்சோந்தி மாற்றிக் கொள்ளும் அற்புதமான காணொளி என வைரலாகும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது.
நவம்பர் 3-ம் தேதி Purushothaman s என்ற முகநூல் பக்கத்தில் வெளியான வீடியோவில், ” மேசை மீது இருக்கும் பச்சோந்தி அருகே கலர் கலராக இருக்கும் கண்ணாடியை மாற்றி மாற்றி வைக்கும் பொழுது அதனை தொடும் பச்சோந்தி அடுத்த நொடியே கண்ணாடியின் நிறத்திற்கு மாறும் . இறுதியில் பல கண்ணாடிகளுக்கு இடையே இருக்கும் பச்சோந்தியின் உடல் அனைத்து கலர்களிலும் மாறி இருக்கும் ” . இந்த பதிவு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
பச்சோந்திகள் உருவ மறைவிற்காக தங்களின் சரும நிறத்தினை தன்னை சுற்றியுள்ள பொருட்களின் நிறத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் என்பது உண்மை. ஆனால் , வீடியோவில் காண்பித்து இருப்பது போன்று இல்லாமல் , மாறுவதற்கு சிறிது நேரம் எடுக்கும் என்பதே சரியான தகவல். கையை வைத்த உடனே நிறம் மாறிவிடாது.
மேற்காணும் வீடியோவில் பச்சோந்தி தன்னுடைய நிறத்தை கண்ணாடியில் இருக்கும் நிறத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்வதாக காண்பிக்கும் வீடியோ cutwater ஏஜென்சி மூலம் Ray-ban சன்கிளாஸ் நிறுவனத்திற்கு எடுக்கப்பட்ட வீடியோவே.
2009-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி Ray-ban சன்கிளாஸ் நிறுவனத்தின் யூட்யூப் தளத்தில் “Super Chameleon” என்ற தலைப்பில் வெளியாகி இருக்கிறது. புதிய நிறங்களில் வெளியான சன்கிளாஸ் தயாரிப்பிற்காக உருவாக்கப்பட்ட விளம்பர வீடியோவில் சன்கிளாஸ்களின் நிறத்திற்கு ஏற்ப பச்சோந்தி நிறத்தை மாற்றிக் கொள்வதாக டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் உருவாக்கி உள்ளார். அந்த வீடியோவில் பின்னணி இசை இருப்பதையும் கவனிக்கலாம் .
ஆக, 2009-ல் Ray-ban சன்கிளாஸ் நிறுவனத்திற்காக எடுக்கப்பட்ட வீடியோவை பச்சோந்தி அதிவேகமாக தன்னுடைய நிறத்தை மாற்றிக் கொள்வதாக 2019-ல் வைரலாக்கி வருகின்றனர்.
இதுபோல், நிசான் நிறுவனத்தின் புதிய ட்ரக் விளம்பரத்திற்காக விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க ட்ரக் உதவுவது போல் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.