சந்திரயான்-3 வெற்றியால் இஸ்ரோ தலைவர் சோம்நாத் நடனமாடுவதாகப் பரவும் பழைய வீடியோ !

பரவிய செய்தி
சந்திரயான்-3 வெற்றியை நடனம் ஆடி கொண்டாடிய Scientist..
மதிப்பீடு
விளக்கம்
இஸ்ரோ கடந்த ஜூலை 14 அன்று சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் ஏவியதைத் தொடர்ந்து, சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்றுள்ள விக்ரம் லேண்டர் நேற்று (ஆகஸ்ட் 23) நிலவின் தென் துருவத்தின் அருகே வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
இதன்மூலம் அதிகம் ஆய்வு செய்யப்படாத நிலவின் தென் துருவத்தின் அருகே இறங்கிய முதல் நாடு என்ற பெருமையையும், அமெரிக்கா, சோவியத் யூனியன் மற்றும் சீனாவுக்குப் பிறகு நிலவில் தரையிறங்கிய நான்காவது நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விஞ்ஞானிகளுடன் இஸ்ரோ தலைவர் டாக்டர் சோம்நாத், சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியதற்காகப் பார்ட்டியில் கலந்துகொண்டு சந்திராயன்-3 வெற்றியைக் கொண்டாடுவதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் கூட்டத்தின் மத்தியில் அவர் மகிழ்ச்சியாக நடனமாடுவதையும் பார்க்க முடிகிறது.
இந்த வீடியோவை கலாட்டா மீடியா (Galatta Media) “Chandrayaan 3 Success-ஐ Dance ஆடி கொண்டாடிய Scientist. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்” என்ற தலைப்பில் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
Chief Dr. S. Somanath & team ISRO 🫡#Chandrayaan3 pic.twitter.com/9a7dH7svrg
— Megh Updates 🚨™ (@MeghUpdates) August 23, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், ட்விட்டரில் இந்த வீடியோவை சித்தார்த்.M.P என்ற பத்திரிக்கையாளர் தன்னுடைய அதிகாரப்பூர்வ பக்கத்தில் நேற்று (ஆகஸ்ட் 23) பதிவு செய்ததற்கு பிறகு தான் வைரலாகத் பரவத் தொடங்கியுள்ளது என்பதை கண்டுபிடித்தோம்.
Pls note: This is a video from earlier this year and I had formal access to this entire event and that’s how I had filmed it
This video is not from tonight!
— Sidharth.M.P (@sdhrthmp) August 23, 2023
அதில் “டாக்டர். எஸ். சோம்நாத் & குழுவினரே, இன்றிரவை உங்கள் மனதில் மகிழ்ச்சி பொங்கும் வகையில் கொண்டாடுங்கள். 1.4+ பில்லியன் இதயங்களை, பெருமை மற்றும் மகிழ்ச்சியால் பெருக வைக்கும் ஆற்றலும் அறிவும், உலகில் எத்தனை பேருக்கு உள்ளது!” என்று குறிப்பிட்டுள்ளதைக் காண முடிந்தது.
ஆனால், அடுத்த பதிவில், இது சந்திரயான் நிலவில் தரையிறங்கிய பிறகு எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதையும் தெளிவுப்படுத்தியுள்ளார். அந்தப்பதிவில் “இது, இந்த ஆண்டின் முற்பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் இந்த முழு நிகழ்வுக்கும் எனக்கு முறையான அனுமதி கிடைத்தது, எனவே இந்த நிகழ்வை நான் படமாக்கினேன்”, என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சித்தார்த்தின் வைரல் வீடியோவின் பதிவானது இரவு 7.40 மணிக்கு அவரது பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதேசமயம் சந்திரயான்-3 தரையிறங்கும் நேரலையின் வீடியோ, இஸ்ரோவின் பேஸ்புக் பக்கத்திலும், யூடியூப் பக்கத்திலும் மாலை 5.18 மணிக்கு தொடங்கி 1:11:49 மணி நேரம் வரை பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இந்த நேரலையைத் தொடர்ந்து, சந்திரயான் வெற்றிகரமாக தரையிறங்கியதற்காக பல்வேறு ஊடகங்களுக்கு சோம்நாத் நேர்காணல் மூலம் பேட்டி கொடுப்பதையும் பார்க்க முடிகிறது. எனவே இங்கு அவர் பேட்டி கொடுக்கும் போதே, அவர் நடனமாடும் வீடியோவும் பதிவிடப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.
மேலும், நேர்காணல் வீடியோக்களுடன் ஒப்பிடும்போது நடனமாடும் வீடியோவில் அவரது ஆடை வேறாக இருப்பதையும் கண்டோம். இவை அனைத்தையும் ஒப்பிட்டு பார்க்கையில், சந்திரயான்-3 தரையிறங்கிய உடனேயே ஆகஸ்ட் 23 அன்று நடன வீடியோ எடுக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
மேலும் படிக்க: சந்திரயான்-3 எடுத்த நிலவு, செவ்வாய் கிரக புகைப்படம் பஞ்சாங்கத்துடன் ஒத்துப் போவதாகப் பரவும் வதந்தி !
இதற்கு முன்பும் சந்திரயான்-3 விண்கலம் குறித்து பல செய்திகள் சமூக ஊடகங்களில் தவறாக பரவின. அதன் உண்மைத்தன்மையையும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: சந்திரயான்-3 அனுப்பிய நிலவின் மேற்பரப்பு காட்சிகள் எனப் பரவும் 3D அனிமேஷன் வீடியோ !
மேலும் படிக்க: விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட சந்திரயான்-3 ஏவப்பட்ட காட்சி எனப் பரவும் SpaceX ராக்கெட் வீடியோ !
முடிவு
நம் தேடலில், சந்திரயான் 3 வெற்றிக்கு பிறகு இஸ்ரோவின் தலைவரான டாக்டர் சோம்நாத் நடனமாடுவதாகப் பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டது அல்ல என்பதையும், அது பழைய வீடியோ என்பதையும் அறிய முடிகிறது.