சந்திரயான் 3 பெங்களூரிலிருந்து ஸ்ரீஹரிகோட்டா பாலத்தை லாரியில் கடக்கும் காட்சி எனப் பரவும் கேம் வீடியோ !

பரவிய செய்தி
சந்திரயான் 3 பெங்களூரிலிருந்து, ஸ்ரீஹரிகோட்டா பாலத்தை கடக்கும்போது லாரிடிரைவர் எவ்வளவு மன அழுத்தத்தை எடுக்க வேண்டியிருந்தது என்பதைப் பாருங்கள், ஆகஸ்ட் 23 மாலை 5 மணிக்கு நிலவில் தரையிறங்கி உலகமே நம்மை பார்த்து வியந்ததற்கு இந்த ட்ரக் ட்ரைவரும் ஒரு காரணம் என்பதை இந்த காணொளியில் பாருங்கள்..
மதிப்பீடு
விளக்கம்
சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர், நிலவின் தென் துருவத்தின் அருகே கடந்த ஆகஸ்ட் 23 அன்று வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இந்நிலையில் சந்திரயான் 3 விண்கலம் பெங்களூரிலிருந்து, ஸ்ரீஹரிகோட்டா பாலத்தை லாரியில் கடக்கும் காட்சி என்று கூறி வீடியோ ஒன்று வாட்சப் போன்ற சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ கடந்த ஏப்ரல் (2023) மாதத்திலிருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளதை அறிய முடிந்தது.
*இந்திய ராணுவத்தின் முன்னேற்றங்கள்.* *இவ்வளவு கடினமான பாஸை கடக்கும் ஓட்டுநரின் சாமர்த்தியத்தை போற்ற முடியவில்லை. பெரிய விஷயங்களைக் கனவு காணும் திறன் கொண்ட குறுகிய கால இடைவெளியில் எங்கள் உள்கட்டமைப்பு முன்னேற்றத்தைப் பாராட்டுகிறோம்*
*INDIAN ARMY ADVANCES.* *Couldn’t pic.twitter.com/S21oZgSvYm
— டெல்டா கருடன் என்கிற தனுசுரமான்பாஜக (@Lalitha19010440) April 6, 2023
அதில், இந்திய ராணுவம் முன்னேற்றமடைந்துள்ளதைப் பாருங்கள் என்று கூறி இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
இந்த வீடியோ குறித்து மேற்கொண்டு தேடுகையில், Jim Natelo என்பவரது ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த மார்ச் அன்று இந்த வீடியோ முதன்முதலில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில் இந்த வீடியோ “இதுபோன்ற சூழ்நிலைகளில் அவசரகால பாலம் (Emergency Bridge) தொழில்நுட்பம் மிகவும் உதவியாக இருக்கும்” என்ற தலைப்புடன் , “Spintires: MudRunner” விளையாடுவதாக அந்தப் பதிவுடன் சேர்த்து Tag செய்யப்பட்டிருந்ததையும் காண முடிந்தது.
மேலும் அவருடைய ஃபேஸ்புக் பக்கங்களில் Spintires: MudRunner விளையாடுவதாகக் குறிப்பிட்டு பரவி வரும் வீடியோ போன்றே பல வீடியோக்கள் பதிவிடப்பட்டிருந்தன.
மேலும் படிக்க: மணிப்பூர் கலவரத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு எனப் பரவும் கேம் வீடியோ !
இதற்கு முன்பும், கேம் வீடியோக்களை உண்மையான வீடியோ என்று நினைத்து சிலர் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வந்தனர். அதனையும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: சீனா அறிமுகப்படுத்திய அதிவேக பறக்கும் ரயில் எனப் பரவும் கேம் வீடியோ !
முடிவு:
நம் தேடலில், சந்திரயான் 3 பெங்களூரிலிருந்து ஸ்ரீஹரிகோட்டா பாலத்தை லாரியில் கடக்கும் காட்சி எனப் பரவும் வீடியோ உண்மையானது அல்ல என்பதையும், Spintires: MudRunner என்ற வீடியோ கேம் விளையாடும் போது இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் அறிய முடிகிறது.