போலியான பால் தயாரிப்பதாக பரவும் வீடியோ | உண்மை என்ன ?

பரவிய செய்தி
போலி பால் இப்படித்தான் தயாரிக்கிறார்கள். மக்களே உஷார். ப்ளீஸ் அனைவருக்கும் பகிருங்கள்.
விளக்கம்
இந்தியாவில் பாலின் தேவை அதிகம் என்பதால் பாலில் தண்ணீர் கலப்பது தொடங்கி கலப்படம் செய்வது வரை நடப்பதை அறிந்து இருப்போம். சமீபகாலமாக கலப்பட பால் குறித்த செய்திகளை சமூக ஊடகங்களில் அதிகம் அறிந்து இருப்பீர்கள்.
தமிழ் ஆன்ட்ராய்டு பாய்ஸ் என்ற முகநூல் பக்கத்தில் ” போலி பால் இப்படித்தான் தயாரிக்கிறார்கள். மக்களே உஷார். ப்ளீஸ் அனைவருக்கும் பகிருங்கள் ” என ஆகஸ்ட் 8-ம் தேதி பதவிடப்பட்ட பதிவானது 18 ஆயிரம் பார்வைகள் மற்றும் ஆயிரத்திற்கும் அதிகமான ஷேர்களை பெற்று வருகிறது.
அந்த வீடியோவில், குழாயில் இருந்து நேரடியாக தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வைத்து, அதனுடன் பாட்டிலில் இருக்கும் ஒரு கெமிக்கல் போன்ற ஒன்றை கலந்த உடன் பால் போன்ற வெண்ணிறத்தில் மாறுகிறது. வீடியோவில் அவர்கள் பிற மொழியில் பேசுவதை கேட்க முடிந்தது.
உண்மை என்ன ?
கலப்பட பால் என்பது நேரடியாக கெமிக்கலை தண்ணீருடன் கலந்து உருவாக்கப்படுவதில்லை. அதனை நேரடியாக பயன்படுத்தவும் முடியாது. அதில், குறைந்தபட்சம் பாலின் அளவாவது இடம்பெற்று இருக்கும்.
2019 ஜூன் 19-ம் தேதி மத்திய பிரதேசத்தில் போலியான பாலை தயாரித்து போபால், டெல்லி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் விற்பனை செய்து வந்த கும்பல் கைது செய்யப்பட்டனர்.
அந்த கும்பல், வெள்ளை பெயிண்ட், உடலுக்கு ஆபத்தான கெமிக்கல் மருந்துகள், பன்னீர், டிடெர்ஜென்ட் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி இருப்பதாக தெரிவித்து இருந்தனர். மேலும், பாலின் அடத்திற்கு தேவையான பவுடர் பொருட்களும் சேர்க்கப்படும். ஆக, தண்ணீரை வெள்ளை நிறத்திற்கு மாற்றும் கெமிக்கல் மருந்தை மட்டும் வைத்து கலப்பட பால் தயாரிக்கப்படவில்லை என்பதை அறியலாம்.
செயற்கையான அல்லது போலியான பால் தயாரிக்கும் முறை என வீடியோக்கள் பரவுவது முதல் முறையல்ல. இதற்கு முன்பாக தொழிற்சாலை பகுதியில் தண்ணீரை பாலாக மாற்றுவதாக ஒரு வீடியோ இந்திய அளவில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
அப்போழுது, டேடால் உள்ளிட்ட கெமிக்கல் பொருட்களை தண்ணீரில் கலந்தால் தண்ணீரின் நிறம் வெண்மையாகும் என்றும், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கூலண்ட் கெமிக்கல்கள் உள்ளிட்ட கெமிக்கல்களை தண்ணீரில் கலந்தாலும் வெண்ணிறமாகும் என விவரித்து பதிவிட்டு இருந்தோம். அதனை செயல்படுத்தியும் வீடியோ வெளியிட்டு இருந்தோம்.
முடிவு :
நமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், போலியான பால் தயாரிக்கும் முறை என சமூக ஊடகங்களில் வைரலாக்கப்படும் வீடியோக்கள் தவறானவையே என நிரூபிக்கப்பட்டு உள்ளது. மக்களை முட்டாளாக்கி தங்கள் பதிவிற்கு, வீடியோவிற்கு அதிக பார்வையாளர்களை பெற அடிக்கடி இவ்வாறான வீடியோக்களை எடுக்கின்றனர் என்பதே உண்மை.