ஒன்றிய அரசு அளித்த நிவாரண தொகையில் ஆகாயத் தாமரை அகற்றும் பணிகள் நடப்பதாகப் பரவும் தவறான தகவல் !

பரவிய செய்தி

மழை வருவதற்கு முன்பே அந்த ₹4000 பேக்கேஜல் இதை செய்திருந்தால் சென்னை காப்பாற்றபட்டிருக்கும் ! மத்திய அரசு கொடுத்த பேரிடர் நிவாரண நிதி ₹900 கோடியில் இந்த பணிகள் நடந்து வருகின்றன. 

X link 

மதிப்பீடு

விளக்கம்

‘மிக்ஜாம்’ புயல் காரணமாக (நவ.4) சென்னையின் குடியிருப்பு பகுதிகளிலும் வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. புயல் பாதிப்பைச் சரி செய்யத் தேவையான நிவாரணங்களை மேற்கொள்ளத் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒன்றிய அரசு ரூ.450 கோடியை ஒதுக்கியுள்ளது. 

இந்நிலையில் ஒன்றிய அரசு கொடுத்த பேரிடர் நிவாரண நிதியை கொண்டுதான் நீர் வழித்தடங்களில் உள்ள ஆகாயத்தாமரை அகற்றும் பணி நடைபெற்று வருவதாக பாஜக-வை சேர்ந்த செல்வக்குமார் அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

X link  

இதேபோல் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம் அவரது டிவிட்டர் பக்கத்தில், ‘மழைக்கு முன்பு செய்யவேண்டிய வேலையை அரசு இப்போது செய்துகொண்டு இருக்கிறது’ எனச் சென்னை மாநகராட்சியின் வீடியோவை ரீடிவீட் செய்துள்ளார். மாநகராட்சியின் பதிவில் ‘ஒக்கியம் மடுவு பகுதியில் ஆகாயத் தாமரை அகற்றும் பணி நடைபெற்றது என்றும் அதனை மாநகராட்சி ஆணையர் ராதா கிருஷ்ணன் பார்வையிட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உண்மை என்ன ? 

ஒன்றிய அரசு நிவாரண தொகை அளித்த பின்னர்தான் தமிழ்நாடு மாநில அரசு நீர் வழித்தடங்களைச் சுத்தம் செய்ததாகக் கூறப்படுவது தொடர்பாக முக்கிய வார்த்தைகள் கொண்டு தேடியதில், வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்னரே சென்னை மாநகராட்சி அத்தகைய முன்னெச்சரிக்கை பணிகளைச் செய்துள்ளதைக் காண முடிந்தது. 

தற்போது ஒக்கியம் மடுவு பகுதியில் ஆகாயத் தாமரை அகற்றும் பணி குறித்த சென்னை மாநகராட்சியின் டிவிட்டர் பதிவிற்கு அடுத்த பதிவில், “சென்னை மாநகராட்சி அனைத்து கால்வாய்கள் மற்றும் நீர் வழித்தடங்களை 2023, அக்டோபர் மாதமே சுத்தம் செய்தது. இது தற்போது மழை நீரில் அடித்து வரப்பட்டதைச் சுத்தம் செய்யும் வீடியோ” எனக் குறிப்பிட்டுள்ளனர். 

அது தொடர்பாக தேடியதில், 2023, அக்டோபர் மாதம் சோழிங்கநல்லூர் பகுதியில் சுத்தம் செய்தது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளது. அதற்கும் முன்னதாக ஜூலை மாதம் சென்னை மாநகராட்சி பல்வேறு பகுதிகளில் உள்ள நீர் வழித்தடங்களில் உள்ள ஆகாயத் தாமரைகளைச் சுத்தம் செய்து வருவதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியாவில்’ செய்தி வெளியாகியுள்ளது. 

மேலும் கடந்த அக்டோபர் 20ம் தேதி ரிப்பன் கட்டிடத்தில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திலும் சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் 53.42 கி.மீ. நீளமுள்ள 33 நீர்வழி கால்வாய்களில் ஆகாயத்தாமரை போன்ற நீர்த்தாவரங்களும், சேறு, சகதி உள்ளிட்ட வண்டல்களும் அகற்றப்பட்டு வருவதாக மேயர் தெரிவித்துள்ளார். 

இவற்றைக் கொண்டு பார்க்கையில், வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாகவே நீர் வழித்தடங்களில் உள்ள ஆகாயத் தாமரைகளைச் சென்னை மாநகராட்சி அகற்றியுள்ளதை அறிய முடிகிறது. 

முடிவு : 

ஒன்றிய அரசு புயல் நிவாரண நிதி கொடுத்த பின்னர் சென்னை மாநகராட்சி நீர் வழித்தடங்களில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றுவதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாகவே மாநகராட்சி அப்பணிகளைச் செய்துள்ளதை அறிய முடிகிறது. 

Please complete the required fields.




ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader