சென்னை அருகே அகழாய்வில் 12,000 ஆண்டுகள் பழமையான விஷ்ணு சிலை கிடைத்ததாகப் பரப்பப்படும் வதந்தி

பரவிய செய்தி

தொல்லியல்துறை சென்னை அருகே 12,000 வருடம் பழமையான விஷ்ணு சிலை மற்றும் சிவலிங்கத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

Facebook link 

மதிப்பீடு

விளக்கம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதிக்கு அடுத்து உள்ள வடக்குப்பட்டு எனும் கிராமத்தில் இந்தியத் தொல்லியல் துறையால் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த அகழாய்வில் பல நாகரிகங்களைச் சேர்ந்த தொன்மையானப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இடைக்கற்காலம்(10,000 ஆண்டுகளுக்கு முன்), சங்கம்(2000 ஆண்டுகளுக்கு முன்) மற்றும் பல்லவர் காலங்களில்(1200-1800 ஆண்டுகளுக்கு முன்) பயன்படுத்திய பல்வேறு பொருட்கள் கிடைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், சென்னை அருகே நடத்தப்பட்ட அகழாய்வில் 12,000 ஆண்டுகளுக்கு முந்தைய விஷ்ணு மற்றும் சிவலிங்கம் கிடைத்துள்ளதாகவும், 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமை கொண்ட கீழடியில் மத வழிபாட்டு சிலைகள் கிடைக்கவில்லை என்பவர்களுக்கு பதில் கூறும் வகையில் 12,000 ஆண்டுகளுக்கு முந்தைய விஷ்ணு, சிவலிங்க சிலைகள் கிடைத்து உள்ளதாக வலதுசாரி ஆதரவாளர்கள் பலரும் இப்படத்தை வைரல் செய்து வருகின்றனர்.

Archive link 

உண்மை என்ன ?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வடக்குப்பட்டுக் கிராமத்தில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள 2022ம் ஆண்டுப் பிப்ரவரி மாதம் இந்திய தொல்லியல் துறையால் அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதிகளில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த அகழாய்வில் பல்வேறு காலங்களில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளது. இந்த ஆராய்ச்சிக்காகத் தோண்டப்பட்ட குழியில் ஒவ்வொரு அடுக்கிலும் ஒவ்வொரு காலத்தைச் சேர்ந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில்,10000 ஆண்டுகள் முன் இருந்த இடைக்கற்காலத்தில் இருந்து பல்லவர் காலத்துப் பொருட்கள் வரை கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்குப் பிறகு வடக்குப்பட்டுக் கிராமத்தில் மட்டுமே இடைக்கற்காலப் பொருட்கள் கிடைத்து உள்ளது.

ஆனால், வைரல் செய்வது போல் வடக்குப்பட்டுக் கிராமத்தில் நடைபெறும் அகழாய்வு பணிகளில் கிடைத்த விஷ்ணு சிலை 12,000 ஆண்டுகள் பழமையானது அல்ல.

வைரல் பதிவுகளில் இடம்பெற்ற டைம்ஸ் ஆப் இந்தியா கட்டுரையில், அந்த விஷ்ணு சிலை பல்லவர் காலத்தை சார்ந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுப்பகுதியில் கிடைத்த விஷ்ணு, சிவலிங்க சிலைகள் கிபி 275 முதல் கிபி 897க்கு இடைப்பட்ட பல்லவர் காலத்தைச் சேர்ந்தவை. மேலும், அங்கு கிடைத்த கற்கருவிகள் 12,000 ஆண்டுகள் பழமையான காலம் என்பது தோராயமானது எனவும் கார்பன் டேட்டிங்(carbon dating) முடிந்த பிறகு சரியான காலம் தெரிய வரும் எனவும் தெரிவித்து உள்ளனர்.

இதனை உறுதிப்படுத்த அகழாய்வு பணி நடைபெறும் பகுதிக்கு நேரில் சென்ற தொல்பொருள் துறை பேராசிரியரிடம் (பெயர் குறிப்பிட விரும்பாத) பேசுகையில்,”  இந்த சிலை பல்லவர் காலத்தை சேர்ந்தது. இவை 12,000 ஆண்டுகள் பழமையானது இல்லை. அங்கு பல்வேறு அடுக்குகளில் தொல் பொருட்கள் கிடைத்து வருகின்றன. அதில், பல்லவர் கால சிலைகளும் கிடைத்துள்ளன ” என உறுதிப்படுத்தினார்.

டைம்ஸ் ஆப் இந்தியா, ” Archaeological Survey of India find 12,000-year-old artefacts near Chennai ” எனும் தலைப்பில் வெளியிட்ட செய்தியில் விஷ்ணு சிலையின் புகைப்படத்தை பயன்படுத்தி 12,000 ஆண்டுகள் பழமையான தொல் பொருட்கள் கிடைத்ததாக குறிப்பிட்டு இருந்தது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபோன்ற செய்தியில், பொருந்தாத புகைப்படத்தை பயன்படுத்தியதும் தவறானச் செய்திப் பரவ வழிவகை செய்து உள்ளது.

முடிவு :

நம் தேடலில், சென்னை அருகே நடைபெற்ற அகழாய்வில் 12,000 ஆண்டுகள் பழமையான விஷ்ணு, சிவலிங்க சிலை கிடைத்ததாக பரப்பப்படும் தகவல் தவறானது. அந்த சிலைகள் பல்லவர் காலத்தைச் சேர்ந்தது. இது 12,000 ஆண்டுகளுக்கு முந்தைய சிலைகள் இல்லை என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader