சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு, இ-பாஸ் நிறுத்தம் என பரவும் வதந்திகள் !

பரவிய செய்தி
சென்னை தனிமைப்படுத்தப்பட்டது ? இ-பாஸ் ரத்து. போகவும் முடியாது.. வரவும் முடியாது..
மதிப்பீடு
விளக்கம்
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள பகுதியாக தலைநகர் சென்னை அமைந்துள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டி செல்கிறது.
இந்நிலையில், சென்னை உள்ளிட்ட 4 முக்கிய மாவட்டங்களை தனிமைப்படுத்த உள்ளதாகவும், சென்னையில் இருந்து பிற பகுதிகளுக்கு செல்ல இ-பாஸ் வழங்குவதை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளதாகவும் பல முன்னணி செய்தி ஊடகங்களில் கூட செய்திகள் வெளியாகி இருந்தது.
சென்னையில் அரசு மேற்கொள்ளும் கொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வினித் கோத்தாரி, சுரேஷ் குமார் சில கேள்விகளை எழுப்பி இருந்தனர்.
இதற்கு தமிழக அரசு சார்பில் அளித்த பதிலில், ” சென்னையில் ஊரடங்கைத் தீவிரப்படுத்தும் திட்டம் ஏதும் தற்போதுவரை இல்லை. சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளோம், சென்னையில் இ-பாஸ் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டதாக வதந்திகள் பரவி வருகின்றன. அதுபோன்ற எந்த நடவடிக்கையும் நாங்கள் மேற்கொள்ளவில்லை. மருத்துவ நிபுணர் குழு வழங்கும் வழிகாட்டுதல் அடிப்படையில் நாங்கள் முடிவுகளை எடுத்து வருகிறோம் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ” சென்னை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி ” என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருந்தார். மேலும், தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக தவறான தகவல் பரவி வருகிறது.
எனது பெயரில் ஊரடங்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக சில தவறான செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த செய்தி முற்றிலும் தவறானதாகும். இந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இத்தகைய தவறான செய்திகள் வெளியிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) June 12, 2020
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.