சென்னை உயர் நீதிமன்றத்தின் சாவி கன்னிகாபரமேஸ்வரி கோவிலில் ஒப்படைக்கப்படுகிறதா ?

பரவிய செய்தி
சென்னை உயர் நீதிமன்றம் ஜார்ஜ் டெளன் கன்னிகா பரமேஸ்வரி கோவில் இடத்தில் உள்ளது என்பதை நினைவூட்ட ஆண்டிற்கு ஒரு நாள் 7 வாயிலையும் பூட்டி சாவியை இட உரிமையாளர் கன்னிகா பரமேஸ்வரி கோவிலிடம் ஒப்படைக்கப்படும்.
மதிப்பீடு
விளக்கம்
சென்னை உயர் நீதிமன்றம் கன்னிகாபரமேஸ்வரி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாகவும், பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் பாரம்பரியத்தின் படி ஒருநாள் நீதிமன்றத்தின் சாவி கோவிலிடம் ஒப்படைக்கப்படுவதாக ஓர் செய்தி சமூக வலைதளங்கள், இணைய செய்திகளில் பதிவாகி வருகிறது.
அவ்வாறு கூறும் பதிவிற்கு செய்தித்தாளில் வெளியான கட்டுரையும் இணைக்கப்பட்டு இருந்தது. அது குறித்து தேடிய பொழுது, தினகரன் செய்தி நிறுவனம் 2018-ம் ஆண்டில் ” தொடரும் பாரம்பரியம் சென்னை ஐகோர்ட்டின் வாயில்கள் இன்று மூடல் ” என வெளியிட்ட செய்தி நமக்கு கிடைத்தது.
Dinakaran news | archived link
அதில், ” 150 ஆண்டுகள் பழமையும், பெருமையும் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் கன்னிகாபரமேஸ்வரி கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ளது . இந்த நிலத்தை யாரும் சொந்தம் கொண்டாடக் கூடாது என்பதற்காக வருடத்திற்கு ஒரு நாள் உயர் நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டு, சாவி கோவிலில் வைக்கப்படும். இந்த பாரம்பரிய நடைமுறையானது இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது ” என வெளியாகி இருக்கிறது .
இது குறித்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரை தொடர்பு கொண்டு பேசிய பொழுது, ” சென்னை உயர் நீதிமன்ற பகுதியை சட்டத்துறையை சார்ந்தவர்கள் மட்டும் அல்லாமல், அரசின் பல்வேறு துறையை சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்றம் பொதுமக்களுக்கான பொது இடமல்ல. அது அரசு சொத்து என்பதை நினைவுப்படுத்தி உறுதி செய்யும் விதமாக ஆண்டுக்கு ஒருமுறை ஒரு நாள் முழுவதும் அனைத்தும் வாயில்களும் மூடப்படுவதாக உத்தரவு பிறப்பிக்கப்படும் ” எனக் கூறி இருந்தார்.


2018-ல் தி ஹிந்து ஆங்கில செய்தியில், ” 125 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட நிலம் கோவிலுக்கு சொந்தமானது என்பதால் ஒவ்வொரு ஆண்டும் நீதிமன்றத்தின் வாயில்கள் மூடப்பட்டு சாவியானது கோவிலின் பூசாரியிடம் ஒப்படைக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் சில தவறான தகவல்கள் வெளியாவதாக நீதிமன்ற அதிகாரிகள் கூறியதாக ” வெளியாகி இருக்கிறது.
நமக்கு கிடைத்த தகவலில் இருந்து ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு நாள் மட்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இல்லாமல் சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் மூடப்படுவது உண்மை என்றாலும், அதன் சாவி கன்னிகாபரமேஸ்வரி கோவிலில் ஒப்படைக்கப்படுவதாக கூறுவது தவறான தகவல்.
அப்பகுதியின் அருகே கன்னிகாபரமேஸ்வரி எனும் ஆலயம் இருப்பது உண்மையே. ஆனால், சாவி ஒப்படைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை.