சென்னை வீடுகளில் கொள்ளை கும்பல் மார்க் செய்து கொள்ளையா ?

பரவிய செய்தி
மாடம்பாக்கம் சுதர்சன் நகரில் புகைப்படத்தில் இருக்கும் பெண் ஒரு வீட்டில் சென்று பெல் அடிக்கிறார், வீட்டில் உள்ளர்வர்களிடம் பேசிய பின்பு அந்த வீடு சரிபார்க்கப்பட்டது என்பதற்காக SAW என்ற குறியீட்டை வீட்டு சுவரில் எழுதி விட்டு செல்கிறார். அங்குள்ள பெண்கள் அவரை பிடித்து எனக்கு தெரிந்தவர் ஒருவரிடம் இருந்து வந்த தகவலையடுத்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். அதன்பின்னரே, அந்த பெண்ணின் மீது நிலாங்கரையில் திருட்டு வழக்குகள் இருப்பதாக தெரியவந்தது. தனியாக இருக்கும் பெண்கள் பாதுகாப்பாக இருக்கவும் இதுபோன்று மார்க் செய்து இருந்தால் காவல் துறையிடம் புகார் அளிக்கவும் என பதிவு செய்யப்பட்டு இருக்கும் வாட்ஸ் ஆஃப் ஃபார்வடு செய்தி.
மதிப்பீடு
விளக்கம்
சென்னை சுற்றுவட்டாரப் பகுதியில் பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளில் கொள்ளை கும்பல் பெண்களை அனுப்பி நோட்டம் விடுவதாகவும், அப்படி சரி பார்க்கப்பட்டு விட்டால் அந்த வீட்டின் சுவரில் saw என்ற குறியீட்டை எழுதி விட்டு செல்வதாகவும், அதில் ஈடுபட்ட பெண் ஒருவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் இரு படங்கள் உடன் ஒரு குரல் பதிவு வாட்ஸ் ஆஃப்பில் அதிகம் வைரல் ஆகியது.
ஏற்கனவே, தவறான வாட்ஸ் ஆஃப் ஃபார்வடு செய்திகளால் ஆங்காங்கே உயிர் பலிகள் ஏற்படும் நேரத்தில் மீண்டும் கொள்ளை கும்பல் என்ற பெயரில் வாட்ஸ் ஆஃப் ஃபார்வடுகள் அச்சத்தை உருவாக்கி உள்ளன.
இவ்வாறு ஃபார்வடு செய்யப்பட்ட செய்தி உண்மையில் நடந்ததா என அறிய Youturn தரப்பில் இருந்து நேரடியாக சேலையூர் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்ட போது அழைப்பை எடுக்கவில்லை. இதையடுத்து, Chennai South Control-க்கு தொடர்பு கொண்டு சேலையூர் காவல் நிலையத்தின் க்ரைம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் அவர்களின் அலைபேசி எண்ணை பெற்றுக் கொண்டோம்.
க்ரைம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்க்கு தொடர்பு கொண்டு சேலையூரில் வீடுகளில் குறியீடுகளை எழுதி கொள்ளையில் ஈடுபடுவதாக புகார்கள், கைது நடவடிக்கை ஏதும் நிகழ்ந்ததா என கேட்தற்கு, ” அந்த செய்தியே பொய். அவ்வாறு ஏதுவும் நடக்கவில்லை ” என தெரிவித்தார்.
சேலையூரில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என தெளிவாகி விட்டது. வாட்ஸ் ஆஃப் ஃபார்வடுகள் பெரும்பாலும் பொருந்தாத படங்கள் உடன் குரல் பதிவை இணைத்து பகிரப்படுபவை.
ஒரு வாட்ஸ் ஆஃப் ஃபார்வடு செய்தியை கண்டால் அது உண்மையா ? பொய்யா என குறைந்தபட்ச உண்மைத்தன்மையை அறிந்து பகிர்வதே நல்லது. இல்லையென்றால், தேவையற்ற உயிர் பலிகள் ஏற்படக்கூடும்.