This article is from May 27, 2019

சென்னை ஐசிஎப் அப்ரண்டீஸ் பணியில் தமிழர்களுக்கு முன்னுரிமை !

பரவிய செய்தி

சென்னை ரயில்வே அப்ரண்டீஸ் பணிகளுக்கு தமிழ்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

மதிப்பீடு

சுருக்கம்

2019 மே 20-ம் தேதி வெளியான பெரம்பூர் ஐசிஎப்யில் 990 அப்ரண்டீஸ் பணிகளுக்கான தகுதிகளில் தமிழக வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளனர்.

விளக்கம்

மத்திய அரசின் பணிகளில் தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படுவதாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. குறிப்பாக, தென்னக ரயில்வே பணிகளிலும், போத்தனூர் மற்றும் திருச்சி பொன்மலை ரயில்வே தொழிற்சாலைகளில் அப்ரண்டீஸ் பணிகளில் பெரும் பகுதி வெளிமாநிலத்தவர்களுக்கு வழங்கப்பட்டது தமிழகத்தில் போராட்டங்களை முன்னெடுத்தன.

இதையடுத்து, மே 20-ம் தேதி பெரம்பூர் ஐசிஎப் தொழிற்சாலையில் 990 அப்ரண்டீஸ் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. கார்பென்டர்- 80 , எலக்ட்ரீசியன்-200, ஃபிட்டர்-260, மெஷினிஸ்ட்-80 உள்ளிட்ட பல அப்ரண்டீஸ் பணிகளுக்கு 990 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டன.

இந்த அப்ரண்டீஸ் பணிகளுக்கான தகுதிகளில் தமிழக அரசின் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள், எஸ் & எஸ்டி அமைப்பு உள்ளிட்ட சில தகுதி நிபந்தனைகளை விதித்து உள்ளனர். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் தமிழ்நாட்டில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு உள்ளனர்.

எனினும், ரயில்வே துறை பணியில் இருப்பவர்களின் குழந்தைகளுக்கு பொருந்தாது என்றும் குறிப்பிட்டு உள்ளனர். தமிழக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும் என குறிப்பிட்டதால் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இம்முறை தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் தேர்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு பொன்மலை மையத்தில் தேர்வான 1750 பேரில் வட மாநிலத்தவர் 1,600 பேரும், தமிழகத்தினர் 150 பேர் மட்டுமே இருந்தனர். இதேபோன்று போத்தனூர் தொழிற்சாலையில் தேர்வு செய்யப்பட்ட 1935 விண்ணப்பங்களில், 1187 பேர் வட மாநிலத்தவர்கள், 126 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், 622 பேர் மற்ற தென் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.

பெரம்பூர் ஐசிஎப் தொழிற்சாலை அப்ரண்டீஸ் பணிகளுக்கு 1984-ம் ஆண்டு ரயில்வே வாரிய உத்திரவின்படி விதியை பின்பற்றி தமிழக வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகியதற்கு தொழிற்சங்கம் பாராட்டுகளை தெரிவித்து உள்ளது.

Update :

2019 பெரம்பூர் ஐசிஎஃப் அப்ரெண்டீஸ் பணிகளுக்கு தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பில் வெளியாகியதற்கு பல்வேறு அமைப்பினரும் தங்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டு வருகின்றனர்.

ஆனால், ஐசிஎஃப் அப்ரெண்டீஸ் அறிவிப்பு போன்றே கடந்த ஆண்டுகளில் வெளியான அப்ரெண்டீஸ் அறிவிப்புகளிலும் தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும் என்ற தகுதி இருப்பதை பார்க்க முடிந்தது. இதற்கு முந்தைய ஆண்டுகளிலும் இதே நடைமுறை செயல்பாட்டில் இருந்து வருகிறது. அப்ரெண்டீஸ் பணி அமர்தல் விதிகளில் அப்படியொரு நடைமுறை இருந்து வருகிறது.

இருப்பினும், எதற்காக தமிழகர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. காரணம், வெளியாகும் அறிவிப்பானது ரயில்வேதுறை பணிக்கான இடங்களுக்கு அல்ல, அப்ரெண்டீஸ் எனும் தொழில்பழகுநர் பணிக்கான அறிவிப்பே!

அப்ரெண்டீஸ் பணிகளுக்கு பயிற்சி கட்டணமாக வழங்கப்படும் தொகையானது முதலாம் ஆண்டில் 5 ஆயிரத்தில் தொடங்கி படிப்படியாக மூன்றாம் ஆண்டில் 7 ஆயிரமாக உயர்கிறது. நிரந்தர பணி இல்லை, உதவிக் கட்டணம் குறைவு என்பதால் பெரும்பாலான இளைஞர்கள் அப்ரெண்டீஸ் பணிகளுக்கு விண்ணப்பிப்பது இல்லை. ஆக, தமிழக இளைஞர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்க இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இது குறித்த கட்டுரை ஒன்றை பிபிசி செய்தி நிறுவனம் மே 8-ம் தேதி வெளியிட்டு இருந்தது. அதில், 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப்-டி பணி தொடர்பான வழக்கு குறித்து குறிப்பிட்டு உள்ளனர். அந்த தேர்விற்கு நாடு முழுவதிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில், 3.13 லட்சம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில், 2.17 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. ஆனால், தேர்விற்கு 60,000 பேர் அதாவது 30% பேர் மட்டுமே வந்ததாக சம்பந்தப்பட்ட வழக்கில் தென்னக ரயில்வே விளக்கம் அளித்து உள்ளது.

அப்ரெண்டீஸ் பணிகளுக்கு தமிழக இளைஞர்கள் இடையே போதிய ஆர்வமில்லை, ரயில்வே தேர்வுகள் தொடர்பாக சரியான ஊக்குவித்தல், பயிற்சி மையங்கள், விழிப்புணர்வு இல்லாததும் பணிகள் கிடைக்காமல் போவதற்கு காரணமாகவும் உள்ளது. தற்போதைய ஐசிஎஃப் அப்ரெண்டீஸ் பணிகளில் தமிழக இளைஞர்கள் அதிக அளவில் விண்ணப்பிக்க முன் வரும் பட்சத்தில் அவர்களுக்கான இடங்களும் அதிகம் இருக்க வாய்ப்புள்ளது என அவர்களாக அறிய வேண்டும்.

Update:

2019 மே மாதம் வெளியான செய்தி புதிது போல் இப்பொழுது (29 மே 2021) பரவி வருகிறது!

ஐசிஎஃப்., ரயில்வே பணியிடங்களில் வடமாநிலத்தவர் விண்ணப்பிக்க அனுமதி இல்லை!

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader