ஒரு போராட்டத்தில் அத்தனை புரளி ! நடந்தது இது தான்.

பரவிய செய்தி
ஏப்ரல் 10-ம் தேதி சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியின் வீரர் Faf Duplesis மீது காலணியை வீசிய போராட்டக்காரர்கள், போட்டியைக் காண வந்த ரசிகரைத் தாக்கிய நாம் தமிழர் கட்சியினர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராட்டம் நடத்தும் திமுக குடும்பத்தினர் ஐ.பி.எல் போட்டியை பார்த்தார்கள்.
மதிப்பீடு
விளக்கம்
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காதது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைய மூடக் கோரி தமிழகம் முழுவதும் பொதுமக்கள், இளைஞர்கள், அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சென்னை சேப்பாக்க மைதானத்தில் ஏப்ரல் 10-ம் தேதி நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஐபிஎல் போட்டியை தமிழக மக்கள் புறக்கணித்து நாடு முழுவதையும் கவன ஈர்ப்பு செய்ய வேண்டும் என சில அரசியல் கட்சிகள் தீவிரமாக பேசி வந்தனர்.
எச்சரிக்கையை மீறி போட்டியை நடத்தினால் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும் என்று அரசியல் கட்சியினர் கூறியிருந்தனர். இந்நிலையில், நேற்று பல தடைகளுக்கு பிறகு சென்னை மைதானத்தில் ஐ.பி.எல் போட்டி நடைபெற்றது. இதை காண வந்த ரசிகர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கபட்டது. இதனை கண்டித்தும், தமிழகத்திற்கு தண்ணீர்தான் தேவை கிரிக்கெட் இல்லை என்றும் பலர் இப்போட்டியை புறக்கணித்தனர். எனினும், ஆட்டத்தை நேரில் பார்க்க சென்றவர்கள் பலத்த சோதனைகளுக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
Faf Duplesis மீது செருப்பு வீச்சு :
பலத்த பாதுகாப்பிற்கு பிறகும் ஆட்டத்தின் இடையே மைதானத்தின் மாடத்தில் இருந்த சிலர் நாம் தமிழர் கட்சியின் கொடியை காட்டி கோஷமிட்டனர். மேலும், ஒருவர் தனது செருப்பை மைதானத்தில் இருந்த வீரர்கள் மீது வீசியுள்ளார். அதுவும் யார் மீது? சென்னை வெள்ளத்தின் போது சென்னை மக்களுக்காக வேண்டிக் கொண்ட கிரிக்கெட் வீரர் Faf Duplesis. அன்பை காட்டியவருக்கு தகுந்த மரியாதை தமிழர்கள் அளித்ததாகக் கூறி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஆனால், முழுமையான வீடியோவை யாரும் பார்க்காமல் தவறான செய்தியை பரப்பி வருகின்றனர். மைதானத்தின் மாடத்தில் இருந்தவர் தனது செருப்பை மைதானத்திற்குள் வீசியதை, பௌண்டரி லைனில் இருந்த Faf Duplesis ஓடிச் சென்று எடுத்து வந்துள்ளார். மேலும், மைதானத்திற்குள் வந்த செருப்பை ஜடேஜா காலால் எட்டி உதைத்ததும் அந்த வீடியோவில் தெளிவாக பதிவாகி உள்ளது. இதனை சரியாக பார்க்காமல் தமிழகத்திற்கு விளையாட வந்த வெளிநாட்டு வீரரை அவமானப்படுத்திய தமிழர்கள் என்ற ஒரு தவறான செய்தியை பரப்பி வருகின்றனர். செருப்பு வீச்சு , மை வீச்சு என நம்மூர் தலைவர்கள் முதல் உலகத் தலைவர்கள் வரை தாக்குதல் நடந்துள்ளது அரவிந்த் கேஜ்ரிவால் , வைகோ, ஜார்ஜ் புஷ் என இந்த பட்டியல் ஏராளம் .
ரசிகர்களை தாக்கியது யார் ?
இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாக மைதானத்திற்கு வந்த ரசிகர்களை நாம் தமிழர் கட்சியினர் கடுமையாக தாக்கியதாகக் கூறி சமூக வலைத்தளத்தில் மற்றொரு செய்தியும் வைரலாகியதால் நாம் தமிழர் கட்சிக்கு கண்டனங்கள் எழுகிறது.
ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகரான சரவணன் மீதும், மற்ற ரசிகர்கள் மீதும் கண்மூடித்தனமாக தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் என நினைத்து கொண்டிருக்கையில் அது பொய்யான செய்தி என வீடியோ ஆதாரமும், சரவணன் அவர்களின் ட்விட்டர் பதிவும் தெளிவுப்படுத்தி உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ அனைவரும் என்னை திடீரென தாக்கினர். அந்நேரத்தில் கட்சியின் கொடியை பார்க்கவில்லை. ஆனால், தவறுதலாக அது சீமானின் நாம் தமிழர் கட்சியின் செயல் என கூறினேன். அதன்பின்னர் வீடியோவை பார்த்த பிறகுதான் கருணாஸ் கட்சி என புரிந்து கொண்டேன் ” என்று பதிவிட்டுள்ளார்.
மைதானத்திற்கு வெளியே பலர் எம்.எல்.ஏ கருணாஸின் கட்சியின் கொடியை ஏந்தி ரசிகர்கள் மீது வன்முறையில் ஈடுப்பட்டதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.
சென்னை போட்டியில் உதயநிதி ஸ்டாலின் :
திராவிட முன்னேற்றக் கழகம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என பல்வேறு போராட்டத்தை நடத்தி வருகிறது. ஆனால் ஐ.பி.எல் போட்டிக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஸ்டாலின் அவர்களின் மகன் உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்துடன் சென்னை அணியின் போட்டியை பார்க்க மைதானத்திற்கு சென்றதாக ஒரு ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்துடன் சென்னை அணியின் டி-ஷர்ட் அணிந்து போட்டியைக் காண்பது போன்ற புகைப்படம் 2013-ல் நடைபெற்ற சென்னை அணியின் போட்டியின் போது எடுக்கப்பட்டது. இந்த புகைப்படத்தைபொள்ளாச்சி உதயநிதி ஸ்டாலின் மன்றத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
ஒரு ஐ.பி.எல் போட்டியில் நடந்த நிகழ்வுகளில் மட்டும் 3 புரளிகளை பரப்பியுள்ளனர் சில முகநூல் வாசிகள். நேற்றைய தினத்தில் நடைபெற்ற செயல்கள் பல கண்டிக்கத்தக்கதாக இருந்தாலும், அவற்றில் சில போலியான செய்திகள் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
காவிரி நீரை பெறுவதற்காக போராடி வந்த மக்களை ஐ.பி.எல் போட்டியின் மீது திசை திருப்பி உள்ளனர். மேலும், இந்திய அளவில் தமிழர்கள் மீது தவறான எண்ணத்தையும் இந்த போன்ற நிகழ்வுகள் உருவாக்கி உள்ளன.
தவறான செய்திகளை மக்கள் நம்புவதை விடுத்தும், மேலே உள்ளவர்களின் திட்டத்தை செயல்படுத்தும் சிலரின் செயலுக்கு துணை போகாமல் எப்படியாவது போராடி காவிரி நீரை பெறுவது நமது கடமை என்பதை உணர வேண்டும். காவிரியே நமது நோக்கம் அதுவே ஒற்றைக் கோரிக்கை அதை நோக்கி மட்டும் கவனம் இருக்கட்டும் . இந்த திசை திருப்பும் முயற்சிக்கு பலி ஆக வேண்டாம் . அனைத்து கட்சியும் ஒருகுரலாக கேட்க வேண்டியது கடமை . மாற்றி மாற்றி விமர்சனங்களை வைத்து வீணாக வேண்டாம் . IPL ரசிகர்கள் , IPL எதிர்ப்பாளர்கள் என இரண்டாக பிரிவது , குறிக்கோள் மாறுவது யாருக்கோ லாபம் ஆகும் . இருவருக்கும் நீர் வேண்டும் என்பதை நினைவில் வையுங்கள் .
மீண்டும் காவிரி வேண்டும் , காவிரி மேலாண்மை வாரியம் கட்டாயம் வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழட்டும் . கட்சி ரீதியான காழ்ப்புணர்ச்சிக்கான நேரம் இதுவல்ல . அப்படி இல்லாமல் பேசு பொருளை மாற்றத் துணிந்தால் நீங்கள் வரலாற்றின் குப்பைகள் என நினைவில் கொள்ளுங்கள் . அறவழியில் நிற்போம், வன்முறையற்று .
“Unite again for Cavery “