சென்னை தலித் மேயர் பிரியா ராஜன் எனப் பரவும் தவறானப் புகைப்படம் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
சென்னை மாநகராட்சியின் இளம் மேயராக 28 வயதான திருமதி பிரியா பொறுப்பேற்றார். இந்நிலையில், சென்னையின் தலித் மேயர் பிரியா ராஜன் என கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துக் கொண்ட தம்பதியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் புகைப்படத்தில் இருக்கும் பெண், சென்னை மேயர் பிரியா ராஜனை போல் இல்லை. இருவரும் வெவ்வேறு நபர் எனத் தெளிவாய் தெரிகிறது.
வைரல் செய்யப்படும் புகைப்படம் எடுக்கப்பட்ட சந்தோஷ்பிரேம் வின்ஃப்ரெட் எனும் முகநூல் பக்கத்தை ஆராய்கையில், ” எனது குடும்ப உறுப்பினர் பிரியா ராஜன் சென்னை மேயராகி இருக்கிறார். அவரின் குடும்ப உறுப்பினரான முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவம் எனது மாமா ” என மார்ச் 5-ம் தேதி பிரியா ராஜன் பதவியேற்கும் புகைப்படத்துடன் பதிவிட்டு இருக்கிறார்.
நியூஸ் 18 தமிழ் சேனலுக்கு பிரியா ராஜன் அளித்த பேட்டியின் போது, ” எங்கள் மாமா திரு.செங்கை சிவம் எம்எல்ஏவாக இருந்துள்ளார். அதேபோல், என் அப்பா பகுதித் துணை செயலாளராக இருக்கிறார் ” எனத் தெரிவித்து இருக்கிறார்.
பிரியா ராஜனின் தந்தை திமுக மூத்த நிர்வாகியாக திருவிக நகர் பகுதியில் இருந்து வருகிறார். முன்னாள் திமுக எம்எல்ஏ செங்கை சிவம் இவரது உறவினர். இப்படி அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்துள்ளார். அவரது வேட்புமனுவில் இந்து ஆதிதிராவிடர் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
முடிவு :
நம் தேடலில், சென்னையின் தலித் மேயர் பிரியா ராஜன் எனப் பரப்பப்படும் புகைப்படம் தவறானது. அந்த புகைப்படத்தில் இருப்பது சென்னையின் மேயர் பிரியா ராஜன் அல்ல என அறிய முடிகிறது.