மாற்றுத்திறனாளிகள் பயணிப்பதற்கான சென்னை மாநகர பேருந்தின் சோதனை வீடியோ!

பரவிய செய்தி
தமிழக போக்குவரத்து துறை சார்பில் மாற்று திறனாளிகள் பயணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சென்னை மாநகர பேருந்து…சபாஷ்
மதிப்பீடு
விளக்கம்
மாற்றுத்திறனாளிகள் பேருந்துகளில் பயணம் செய்வதில் பல்வேறு சிரமங்கள் இருக்கின்றன. பேருந்துகளில் கூட்டம் இருந்தாலும் இல்லையென்றாலும் படிகளில் ஏறி பயணம் செய்ய முடியாதவர்கள் பலரும் உள்ளனர்.
அவர்களுக்கென்று பிரத்யேகமாக பேருந்துகளில் ஏறுவதற்கு வழியை ஏற்படுத்தி புதிய மாநகர பேருந்துகள் சென்னையில் விரைவில் வெளியாக இருப்பதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி மக்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
மாநில போக்குவரத்து கழகம் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த அரசு பேருந்துகளை உருவாக்க போதுமான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என தொடர்ந்து நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே வந்தது. இந்நிலையில், சென்னை மாநகரத்தில் இயங்கும் MTC சிவப்பு நிற பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் வீல்சேர் உடன் ஏறும் வகையில் ஹைட்ராலிக் ராம்ப் பொருத்தப்பட்ட புதிய பேருந்துகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அதனை சோதனையிடும் காட்சிகள் தான் இணையத்தில் வைரல்.
எம்.டி.சி பேருந்தில் முன்பக்க கதவின் அருகில் பிரத்யேக வழியானது உருவாக்கப்பட்டு உள்ளது. அதில், ஹைட்ராலிக் ராம்ப் பொருத்தப்பட்ட அமைப்பு முழுவதும் பட்டன் முறையில் இயங்கக்கூடியது. ட்ரைவர் அல்லது நடத்துனர் என யாராவது ஒருவர் பட்டனை அழுத்தும் பொழுது ராம்ப் வெளியே வந்து மாற்றுத்திறனாளி பயணியை வீல்சேர் உடன் பேருந்திற்குள் கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இத்தகைய முயற்சிக்கு மாற்றுத்திறனாளிகள் உரிமைக்காக குரல் கொடுக்கும் ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்து உள்ளனர். எனினும், மற்ற பயணிகள், நடத்துனர் உள்ளிட்ட பிறரின் உதவியால் மட்டுமே பேருந்தினுள் செல்வது சாத்தியம் என்கிறார்கள்.
2009-ல் முதல் முறையாக தமிழ்நாட்டில் ஆரோவில் பகுதியில் சுஸ்மிதா என்பவர் 12 இருக்கைகள் கொண்ட பேருந்தின் பின் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் ஏறும் வகையில் ஹைட்ராலிக் ராம்ப் பொருத்தப்பட்ட பேருந்தை பலரின் நிதி உதவி மூலம் வாங்கினார். கரூர் மாவட்டத்தில் தொழிற்சாலையில் இருந்து வீட்டிற்கு மாற்றுத்திறனாளி பணியாளர்கள் செல்லும் வகையில் இந்த புதிய முயற்சியை மேற்கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான பேருந்து வசதி உள்ளிட்டவையை எளிதாக பயன்படுத்தும் வகையில் அரசு ஏற்படுத்தி தர வேண்டியது அவசியமாகும். மாற்றுத்திறனாளிகளுக்காக வடிவமைக்கப்பட்ட எம்.டி.சி பேருந்துகள் குறித்த தகவலை அனைவருக்கும் பகிரச் செய்தல் அனைவரின் கடமையாகும்.