This article is from Feb 16, 2020

சென்னை துறைமுகத்திற்குள் சிங்கங்கள் நுழைந்தனவா ?

பரவிய செய்தி

ஹலோ. இந்த போட்டோவில் இருக்கும் சிங்கத்தை பார்த்தீங்கனா சென்னை ஹார்பர்.காட்டுப்பள்ளி எனும் காமராஜர் போர்டுக்கு காட்டில் இருந்து வந்துச்சா அல்லது யாரும் கண்டெய்னரில் கொண்டு வந்தாங்களா தெரியலை. மூன்று சிங்கங்கள் சுத்திட்டு இருக்கு. நேற்று லோடு ஏத்தும் போது பார்த்தது. இந்த செய்தியை உங்களுக்கு தெரிந்தவங்களுக்கு அனுப்புங்க.

மதிப்பீடு

விளக்கம்

துறைமுகத்தில் கண்டெய்னர்கள் இருக்கும் பகுதியில் நுழைந்த சிங்கங்கள் கம்பீரமாக நடந்து செல்லும் புகைப்படங்கள் மற்றும் ஆடியோ பதிவு ஒன்று வாட்ஸ் அப் உள்ளிட்டவையில் பகிரப்பட்டு வருகிறது. ஆடியோவில் சென்னையில் உள்ள காமராஜர் போர்ட் பகுதியில் சிங்கங்களை பார்த்தாக கூறி இருக்கிறார்கள்.

கண்டெய்னர்கள் இருக்கும் பகுதியில் மூன்று சிங்கங்கள் நடந்து செல்வதை வைத்து லோடு ஏற்றுமதி செய்யும் ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை செய்வதாக பதற்றத்தை உருவாக்கி இருப்பதால் ஃபார்வர்டு செய்யப்படும் தகவலின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.

ஃபார்வர்டு செய்யப்படும் சிங்கத்தின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2020 பிப்ரவரி 12-ம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா இணையதளத்தில் ” Lion pride strolls in port pipavav’s railway yard ” என்ற தலைப்பில் வெளியான செய்தியில் சிங்கங்கள் துறைமுகப் பகுதியில் நடந்து செல்லும் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.

குஜராத் மாநிலத்தின் பிபாவவ் துறைமுகப்பகுதியின் நோக்கி உள்ள சாலையின் அருகே அடிக்கடி சிங்கங்கள் நுழைந்து நடந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. பெரிய பெரிய கண்டெய்னர் வைக்கப்பட்டு இருக்கும் ஜெட்டி மற்றும் ரயில்வே தடங்கள் சுற்றியுள்ள பகுதிகளில் சிங்கங்கள் நடந்து சென்றதை ஊழியர்கள் பார்த்துள்ளார்கள்.

தற்பொழுது வைரலாகும் புகைப்படங்களும் கடந்த 11-ம் தேதி சிங்கங்கள் நுழைந்த பொழுது எடுக்கப்பட்டவையே. சில நாட்களுக்கு முன்பாகவும் ஜெட்டி பகுதியின் அருகே சிங்கங்கள் நடந்து சென்ற சம்பவம் நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த துறைமுகப் பகுதி அமைந்து இருக்கும் ராஜூலா தாலுகா அருகே பாதுகாக்கப்படாத பகுதியில் அதிகம் அளவில் சிங்கங்கள் வாழ்ந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள துறைமுகப் பகுதியில் நுழைந்த சிங்கங்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை சென்னை துறைமுகத்தில் நிகழ்ந்ததாக தவறான தகவலையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளார்கள்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader