சென்னை மழை வருண பகவானின் தண்டனை என அர்ஜுன் சம்பத் கூறினாரா ?

பரவிய செய்தி
திமுகவுக்கு வாக்களித்த சென்னை மக்களை, மழையின் வெள்ளத்தால் வருணபகவான் தான் தண்டித்துள்ளார். அவர்களுக்கு இது தேவைதான் – அர்ஜுன் சம்பத்
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாட்டில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் சென்னை நகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் பாதிக்கப்பட்ட செய்திகள் ஊடகங்களில், சமூக வலைதளங்களில் பிரதானமாக வெளியாகி வருகிறது.
இந்நிலையில், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், ” திமுகவுக்கு வாக்களித்த சென்னை மக்களை, மழையின் வெள்ளத்தால் வருணபகவான் தான் தண்டித்துள்ளார். அவர்களுக்கு இது தேவைதான் ” எனப் பேசியதாக இந்தியா கிளிட்ஸ் தமிழ் ட்வீட் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
அர்ஜுன் சம்பத் பேட்டி பற்றி இந்தியா கிளிட்ஸ் உடைய யூடியூப் சேனல் மற்றும் ட்விட்டர் பக்கத்தை ஆராய்கையில், சமீபத்தில் அர்ஜுன் சம்பத் குறித்த பேட்டி பதிவுகள் ஏதும் இடம்பெறவில்லை.
இதுதொடர்பாக, இந்தியா கிளிட்ஸ் நரேஷ் அவர்களை தொடர்பு கொண்டு பேசுகையில், சமீபத்தில் அர்ஜுன் சம்பத் அவர்கள் இந்தியா கிளிட்ஸ் சேனலுக்கு எந்த பேட்டியும் அளிக்கவில்லை. இது யாரோ தவறாக எடிட் செய்து பரப்பி இருப்பார்கள் ” எனத் தெரிவித்து இருந்தார்.
நவம்பர் 5-ம் தேதி இந்தியா கிளிட்ஸ் ட்விட்டர் பக்கத்தில் பதிவான குரு பெயர்ச்சி பலன்கள் வீடியோவின் பதிவில் அர்ஜுன் சம்பத் குறித்து எடிட் செய்து இருக்கிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், திமுகவுக்கு வாக்களித்த சென்னை மக்களை, மழையின் வெள்ளத்தால் வருபகவான் தான் தண்டித்துள்ளார். அவர்களுக்கு இது தேவைதான் என அர்ஜுன் சம்பத் கூறியதாக பேசிய செய்தி போலியாக எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.