சென்னை சாலை என குஜராத் புகைப்படத்தை பதிவிட்ட பாஜக பொருளாளர் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
அக்டோபர் 26-ம் தேதி தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனால் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை உள்பட பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் பெய்த பலத்த மழையால் நகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் நீர் தேங்கி உள்ளது. சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டும் உள்ளது.
சென்னையில் பல பகுதிகளில் சாலையில் தண்ணீர் தேங்கியதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் அவதிப்பட்டு வருவது தொடர் செய்திகளின் வாயிலாக அறிய முடிகிறது. ஒவ்வொருமுறையும் பலத்த மழை வரும் போதெல்லாம் சென்னை நகரத்தின் நிலை மாறாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் ஒரு நாள் மழையில் நீச்சல்குளம் ஆன சாலை என மழைநீர் தேங்கிய பகுதியில் மக்கள் வரிசையாக குடிநீருக்காக நிற்கும் புகைப்படத்தை தமிழக பாஜகவின் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
உண்மை என்ன ?
பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் பதிவிட்ட புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ஸ் செய்து பார்க்கையில், 2017 முதலே இப்புகைப்படம் குஜராத் வெள்ளம் எனக் குறிப்பிட்டு வெளியான செய்திகளில் இடம்பெற்று இருக்கிறது.
2017-ம் ஆண்டு வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட செய்திகளில் குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியில் குடியிருப்பு வாசிகள் குடிநீருக்காக வரிசையில் நிற்பதாக இப்புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் சென்னை என பதிவிட்ட புகைப்படம் குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியைச் சேர்ந்தது என்றும், 2017-ல் ஆண்டிலேயே இப்புகைப்படம் செய்திகளில் இடம்பெற்று உள்ளதையும் அறிய முடிந்தது.