சென்னையில் 2023ம் ஆண்டை விட 2015ல் இரண்டு மடங்கு அதிக மழை பெய்ததாக அதிமுகவினர் பரப்பும் தவறான தகவல் !

பரவிய செய்தி

வரலாறு காணாத மழை என பொய் பிரச்சாரம் செய்யும் கூட்டத்திற்கு: 2015யில் இதைவிட இரண்டு மடங்கு மழை பெய்துள்ளது, அம்மாவின் துரித நடவடிக்கையால் 3 நாட்களில் இயல்புநிலை திரும்பியது. தற்பொழுது மழை விட்டு 3 நாட்களாகியும் இன்னும் 50% மக்கள் அடிப்படை நிவாரணம் கூட கிடைக்கவில்லை.

X link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

‘மிக்ஜாம்’ புயல் காரணமாக (டிச.4) சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக கனமழை பெய்தது. சென்னையின் குடியிருப்பு பகுதிகளிலும் வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனைச் சரி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகத் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது (டிச.7) சில பகுதிகள் இயல்பு நிலைக்குத் திரும்பியும் சில பகுதிகள் மோசமான நிலையிலும் உள்ளது.

இந்நிலையில், 2023ம் ஆண்டை காட்டிலும் 2015ல் இரண்டு மடங்கு அதிகமாக மழை பெய்தது. அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் துரித நடவடிக்கையால் 3 நாட்களில் மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டனர். ஆனால், தற்போது அப்படி இல்லை என அதிமுகவைச் சேர்ந்த சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவரது டிவிட்டர் ‘நியூஸ் ஜெ’ கார்டினை பதிவிட்டுள்ளார். 

‘24 மணிநேர மழைப்பொழிவு புள்ளிவிவரங்கள்’ எனத் தலைப்பிடப்பட்ட அந்த கார்டில் நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், தாம்பரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு பகுதிகளில் 2023 டிசம்பர் 4ம் தேதியும், 2015 டிசம்பர் 1ம் தேதியும் பெய்த மழையின் அளவு குறிப்பிடப்பட்டுள்ளது. 

உண்மை என்ன ? 

‘நியூஸ் ஜெ’ பதிவிட்டுள்ள கார்டில் உள்ள தகவல் குறித்துத் தேடியதில், அதே போன்ற ஒரு அட்டவணை ‘நியூஸ் மினிட்’ வெளியிட்டிருந்த ஒரு கட்டுரையிலும் இடம்பெற்றிருப்பதைக் காண முடிந்தது.

ஆனால், இது அக்கட்டுரையின் ஒரு சிறு பகுதி மட்டுமே. இது தொடர்பாக ‘Chennai Rains-COMK’ என்கிற பெயரில் வானிலை குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிடும் கே.ஸ்ரீகாந்த் கூறிய கருத்தும் நியூஸ் மினிட் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீகாந்த் கூறியதாவது: இந்திய வானிலை ஆய்வு மையம் காலை 8.30 மணி முதல் மறுநாள் காலை 8.30 மணி வரையில் பெய்யும் மழையின் அளவை ஒருநாள் மழையின் அளவாக கணக்கிடுகிறது. ஆனால், சமீபத்தில் டிசம்பர், 3ம் தேதி இரவு 8.30 மணி முதல் டிசம்பர், 4ம் தேதி இரவு 8.30 மணி வரையில் அதிகப்படியான மழை பெய்துள்ளது. இது இந்திய வானியல் ஆய்வு மைய தரவின்படி இரண்டு நாட்களில் பெய்த மழையாக கணக்கிடப்படுகிறது

அதனால் 48 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவை கணக்கிட்டால் மட்டுமே (டிசம்பர் 3-4, 4-5 தேதிகளில்) முழு மழை அளவு தெரியவரும்.

அதன்படி நுங்கம்பாக்கம் 47 செ.மீ, மீனம்பாக்கம் 42 செ.மீ, தாம்பரம் 41 செ.மீ, செம்பரம்பாக்கம் 37 செ.மீ மழை பெய்ததாக அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதே போல் 2015, 2023 பெய்த மழையின் அளவை ஒப்பிட்டு ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ தளத்திலும் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் பெய்த மழையின் அளவு ஒப்பிடப்பட்டுள்ளது. 

2015ல் வெள்ளம் ஏற்பட்ட போது (Dec 1,2,3) நுங்கம்பாக்கத்தில் 34 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதே பகுதியில் 2023ல் (Dec 2,3,4) 53 செ.மீ மழை பெய்துள்ளது. மேலும் மீனம்பாக்கத்தில் 2015ல் 44 செ.மீ, 2023ல் 46 செ.மீ மழையும் பெய்துள்ளது. இதனைக் கொண்டு பார்க்கையில் 2023ல் அதிக மழை பெய்துள்ளதை அறிய முடிகிறது. 

இது தொடர்பாக, நியூஸ் மினிட் வெளியிட்ட கட்டுரையின் ஒரு பகுதியில் இருந்த தரவை மட்டும் வைத்து ‘News J’ தயார் செய்த கார்டை அதிமுக-வினர் பரப்பி வருகின்றனர். 

தற்போது பெய்துள்ள மழையின் அளவு மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள சேதங்களை 2015ம் ஆண்டுடன் ஒப்பிடுவதற்கு அவ்வாண்டு ஏற்பட்ட வெள்ளமே காரணம். 2015ம் ஆண்டு ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த போது முறையான அறிவிப்புகள் இன்றி செம்பரம்பாக்கம் நீர் தேக்கம் திறந்து விடப்பட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 250 பேர் உயிரிழந்தனர். அந்த நிகழ்வு மக்கள் மனதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதால், அதிக மழை பெய்த ஆண்டாக அதனைக் கருதுகின்றனர்.

எனவே அந்த ஆண்டுடன் தற்போதைய நிகழ்வை ஒப்பிடுகின்றனர்.

அடுத்தபடியாக பெரும் பணச்செலவில் மழைநீர் வடிகால் பணிகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டாலும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் வடியவில்லை என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. 

மிக்ஜாம் புயல் சென்னைக்குக் கிழக்கே 90 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டு, பிறகு ஆந்திரப் பிரதேசம் நோக்கி மணிக்கு 3 முதல் 5 கிலோமீட்டர் எனக் குறைந்த வேகத்தில் நகர்ந்தது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படி புயல் நிலை கொண்டு கடல் அலைகள் அதிக சீற்றத்துடன் காணப்பட்டதால், ஆறுகள் மற்றும் கால்வாய்களின் வழியாக மழை நீர் கடலில் கலக்காமல் தடைபட்டது. புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்த பிறகு, வெள்ள நீர் வடிகால் வழியாகக் குறையத் தொடங்கியது. 

இந்த மழை 2015ஐ காட்டிலும் அதிகம் என்றும், புயல் நிலை கொண்டதினால் ஆற்று நீர் கடலில் கலக்கும் பகுதிகள் நீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் ‘தமிழ்நாடு வெதர் மேன்’ என்னும் பெயரில் இயங்கக் கூடிய பிரதீப் ஜான் என்பவரும் அவரது சமூக வலைத்தளத்தில் டிசம்பர், 4ம் தேதி இரவு பதிவிட்டது குறிப்பிடத்தக்கது. 

நியூஸ் மினிட் தளத்தில் வெளியான செய்தியின் ஒரு பகுதியை மட்டும் வைத்து News J தயாரித்த தவறான கார்டை அதிமுக-வினர் பலர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி பரப்பி வருகின்றனர். தரவுகளின் படி 2015ஐ ஒப்பிடுகையில் 2023ம் ஆண்டு அதிக மழை பெய்துள்ளது என்பதை அறிய முடிகிறது. 

முடிவு : 

நம் தேடலில், 2023ம் ஆண்டை காட்டிலும் 2015ல் இரு மடங்கு மழை பெய்தது எனப் பரவும் தகவல் உண்மை அல்ல. 2015ம் ஆண்டு வெள்ளத்தின் போது பெய்த மழையை காட்டிலும் 2023ம் ஆண்டு வெள்ளத்தின் போது பெய்த மழையின் அளவு அதிகம் என்பதை அறிய முடிகிறது. 

Please complete the required fields.
ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader