சென்னை-பெங்களூர் அரசு பேருந்தின் நிலை எனப் பழைய புகைப்படத்தைப் பரப்பும் பாஜகவினர் !

பரவிய செய்தி
பெங்களூருவில் இருந்து சென்னைக்கும். சென்னையில் இருந்து பெங்களூருவுக்கும் பயணிக்கும் அரசுப் பேருந்து! திராவிட மாடல் எப்புடி?
மதிப்பீடு
விளக்கம்
பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் செளதா மணி மற்றும் மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா உள்ளிட்டோர் தமிழ்நாடு அரசு பேருந்தின் நிலை மோசமாக இருப்பதாக பெங்களூர் மற்றும் தமிழ்நாடு அரசு பேருந்துகளின் புகைப்படங்களை ஒப்பிட்டு டிவீட் செய்துள்ளார்.
அப்பதிவில், சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் தமிழ்நாடு அரசு பேருந்து மோசமாக இருக்கிறது, அதே நேரத்தில் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வரும் கர்நாடக அரசு பேருந்து நன்றாக இருப்பதாகப் பதிவிடப்பட்டு உள்ளது. மேலும் திமுக அரசைக் குறிப்பிடும் வகையில் ‘திராவிட மாடல்’ எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
சென்னை to பெங்களூரு செல்லும் "தமிழக பேருந்து"
பெங்களூரு to சென்னை செல்லும் "கர்நாடகா பேருந்து"
போக்குவரத்து துறையில் திராவிட மாடல் சாதனை👌 @mkstalin pic.twitter.com/xbRPDp7bLC
— Ramesh Shivaa (@ShivaaBJYM) February 17, 2023
இந்த புகைப்படத்தினை பாஜகவைச் சேர்ந்த பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
தமிழ்நாடு அரசு பேருந்து என பாஜகவினரால் பரப்பப்படும் புகைப்படத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் ஒட்டப்பட்டு இருப்பதைக் காண முடிகிறது.
மேலும், அந்த புகைப்படத்தை ரிவேர்ஸ் இமேஜ் சர்ச் செய்து தேடினோம். ‘செங்கீற்று’ என்ற இணையதளத்தில் பரவக்கூடிய புகைப்படம் 2018ம் ஆண்டு பதிவிடப்பட்டுள்ளதைக் காண முடிந்தது.
அந்த இணையதளத்தில் 2018ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 13ம் தேதி “சென்னைல இருந்து பெங்களூரு போற பஸ்ஸையும்… பெங்களூருல இருந்து சென்னை வருர பஸ்ஸையும்… பாருங்க…” என பரவக்கூடிய இரண்டு புகைப்படங்களும் பதிவிடப்பட்டுள்ளது. அந்த தேதிகளிலேயே அப்புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டுள்ளனர்.
இதில் இருந்து பரவக் கூடிய தமிழ்நாடு அரசு பேருந்தின் புகைப்படம் 2018ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. அப்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தது அதிமுக தலைமையிலான அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
2022 நவம்பர் மாதம் தமிழ்நாடு அரசு சார்பில் 1000 புதிய பேருந்துகளை வாங்க ரூ 420 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க : தமிழக பாஜகவின் செயற்குழு உறுப்பினர் சௌதா மணி பரப்பிய வதந்திகளின் தொகுப்பு
மேலும் படிக்க : 2018ல் உடைந்த அரசு பேருந்து படிக்கட்டு படத்தை திமுக ஆட்சி எனப் பரப்பும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ !
முன்னதாக செளதா மணி பரப்பிய பொய்களை தொகுப்பாக ‘யூடர்ன்’ வெளியிட்டுள்ளது. அதே போல், தமிழ்நாடு பேருந்துகள் தொடர்பான பொய் செய்களின் உண்மைத் தன்மை குறித்தும் செய்திகளை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க : கட்டணமில்லா பேருந்து ரத்து, அரசு பஸ் கட்டணம் உயர்வு என வதந்தி பரப்பும் தமிழக பாஜக பொருளாளர் !
முடிவு :
நம் தேடலில், திமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசு பேருந்தின் நிலை என சமூக வலைத்தளங்களில் பாஜகவினரால் பரவும் புகைப்படம் திமுக ஆட்சியில் எடுக்கப்பட்டது அல்ல. அப்புகைப்படம் 2018ம் ஆண்டு முதல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதை அறிந்து கொள்ள முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.