சென்னையில் வாட்டர் ஏடிஎம் அறிமுகமா ?

பரவிய செய்தி
சென்னையில் ரூ.7க்கு 20 லிட்டர் வாட்டர் கேன்… 800 இடங்களில் வருகிறது வாட்டர் ஏடிஎம்.
மதிப்பீடு
சுருக்கம்
சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ள இத்திட்டத்தில் 200 வார்டுகளில் உள்ள 800 இடங்களில் வாட்டர் ஏடிஎம் நிறுவ உள்ளனர்.
விளக்கம்
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை கட்டுக்கடங்காமல் செல்கிறது. குறிப்பாக, தலைநகரான சென்னையில் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு இன்றி உள்ளது. தண்ணீருக்காக மக்கள் குடங்களுடன் காத்திருக்கும் செய்தியை சமீபத்தில் பார்த்து இருந்தோம்.
குடிநீருக்காக தனியார் வாட்டர் கேன்களை நம்பியே சென்னையில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள் உள்ளன. 20 லிட்டர் கொண்ட வாட்டர் கேன் 35 முதல் 40 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் குடிநீர் கேன்களை ஏடிஎம் வடிவில் குறைந்த செலவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சி 20 லிட்டர் கொண்ட தண்ணீர் ரூ.7 க்கு விற்க முடிவு செய்துள்ளனர். இதற்காக சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 800 இடங்களில் வாட்டர் ஏடிஎம் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் அளித்த தகவலில், ” அரசு 250 சதுர அடி கொண்ட இடத்தையும், மெட்ரோ வாட்டர் மற்றும் மின்சார வசதியையும் வழங்கும். அதைப் பயன்படுத்தி தனியார் முதலீடு செய்து ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் முறையில் தண்ணீரை சுத்திகரித்து மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். இதற்காக அப்பகுதியைச் சேர்ந்த இரு பெண்கள் நியமிக்கப்படுவார்கள். இதில் கிடைக்கும் வருவாயில் 20 லிட்டருக்கு 1 ரூபாய் மாநகராட்சிக்கு கிடைக்கும் ” என தெரிவித்து உள்ளனர்.
இதற்காக மக்களுக்கு பிரீபெய்டு கார்டுகள் வழங்கப்படும், அதனை ரீசார்ச் செய்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ள முடியும். சென்னையில் வாட்டர் ஏடிஎம் திட்டம் முதல் முறையாக வரவில்லை. சென்ற ஆண்டில் இருந்தே நடைமுறையில் இருந்து வருகிறது.
கடந்த ஆண்டு தாம்பரம், பூந்தமல்லி, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதியில் 400 இடங்களில் சென்னை மாநகராட்சியின் கீழ் வாட்டர் ஏடிஎம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது புதிதாக 800 இடங்களில் நிறுவ உள்ளனர்.
தண்ணீர் கேன்களை 40 ரூபாய் கொடுத்து வாங்குவதற்கு பதிலாக 7 ரூபாய்க்கு குறைவான விலையில் வழங்கினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால், குறைந்த விலையில் குடிநீர் வழங்குவதால் அதனை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து அதற்கான தண்ணீர் தேவை முன்பை விட பல மடங்கு அதிகரிக்கக்கூடும். மேலும், இதனை செயல்படுத்துவது தனியாரிடம் ஒப்படைக்கப்படும். தமிழ்நாட்டில் மட்டுமின்றி பல மாநிலங்களில் வாட்டர் ஏடிஎம் பயன்பாட்டில் உள்ளது.