செஸ் ஒலிம்பியாட் மார்க்கெட்டிங் ஒப்பந்தம் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு வழங்கியதாக வதந்தி !

பரவிய செய்தி

செஸ் ஒலிம்பியாட் 2022ஐ மார்க்கெட்டிங் செய்வதற்கான ஒப்பந்தம் மிட்சன் ஆட் பிரைவேட் லிமிடெட், எண்.68/6, முனியாண்டி கோவில் தெரு, ஜெய் நகர் மெயின் ரோடு, பொன்மேனி பைபாஸ் ரோடு, மதுரை என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் வி.சிவ விக்னேஷ் என்பவர் பெரும்பான்மை பங்குதாரர் ஆவார்.

இந்த நிறுவனம் ஒப்பந்தத்தைப் பெற்றிருந்தாலும் கூட, மிட்சன் ஆட் பிரைவேட் லிமிடெட் அனைத்து வேலைகளையும் அவுட்சோர்சிங் செய்து பணத்தின் பெரும் பகுதியை கமிஷனாகப் பெறுகிறது. விக்னேஷ் சிவன் என்று அழைக்கப்படும் பிரபல திரைப்பட இயக்குனர் தான் சிவ விக்னேஷ்.

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் 2022ஐ மார்க்கெட்டிங் செய்வதற்கான ஒப்பந்தம் மிட்சன் ஆட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாகவும், அந்த நிறுவனத்தின் பெரும் பங்குகளைக் கொண்டிருப்பது நடிகை நயன்தாராவின் கணவரும், திரைப்பட இயக்குநருமான விக்னேஷ் சிவன் என்றும் ட்விட்டரில் சவுக்கு சங்கர் பதிவிட்டு இருக்கிறார்.

உண்மை என்ன ?  

zaubacorp இணையத்தில் “Mitsun Ad Private Limited” குறித்து தேடிய போது நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான சிவ விக்னேஷ் என்பவரின் பெயருக்கு முன்பாக வேலாயுதம் என அவரின் தந்தையின் பெயரும் இடம்பெற்று இருக்கிறது. சவுக்கு சங்கரின் பதிவிலும் வி.சிவ விக்னேஷ் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

ஆனால், திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு சொந்தமான ரெளடி பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்களில் “சிவகொழுந்து விக்னேஷ்வர் ” என இடம்பெற்று இருக்கிறது. விக்னேஷ் சிவனின் தந்தை பெயர் சிவகொழுந்து. WIKKI FLIX LLP என்ற நிறுவனத்திலும் விக்னேஷ் சிவன் பங்குதாரராக உள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவனின் தந்தை சிவகொழுந்து மற்றும் அவரின் தாயார் இருவருமே காவல்துறை அதிகாரிகளாக இருந்தவர்கள். அவரின் தந்தை சிவகொழுந்து தற்போது உயிருடன் இல்லை.

முடிவு : 

நம் தேடலில், செஸ் ஒலிம்பியாட் 2022ஐ மார்க்கெட்டிங் செய்வதற்கான ஒப்பந்தம் பெற்றதாகக் கூறப்படும் மிட்சன் ஆட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் சிவ விக்னேஷ் என்பவர் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் அல்ல, இரண்டும் வெவ்வேறு நபர்கள் என அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader