கருப்பு நிறத்தில் இருக்கும் கோழியின் முட்டையும் கருப்பா ?

பரவிய செய்தி
அயாம் செமானி இந்தோனேசியாவில் வசிக்கும் ஒரு அறிய வகை கோழி ஆகும். இதன் உடலின் அனைத்து பாகங்களும் கருப்பு நிறமாக , மேலும் அதன் எலும்புகள் மற்றும் அதன் உள் உறுப்புகள் அனைத்துமே கருப்பு நிறம் என்பது விசேட அம்சமாகும் .
மதிப்பீடு
விளக்கம்
கருப்பு நிறத்தில் இருக்கும் சேவல், கோழிகளின் புகைப்படங்களை காணுகையில் அபூர்வமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும். அரிதாக சேவல் மற்றும் கோழிகளின் உடல் முழுவதும் , அவற்றின் முட்டையும் கருப்பு நிறத்தில் இருப்பதாக கூறப்படும் தகவல் பார்க்காமல் இருந்திருக்க மாட்டீர்கள்.
இந்தோனேசியாவில் வசிக்கும் அயாம் செமானி எனும் ஒருவகையான கோழி கருப்பு நிறத்தில் இருப்பதாகவும், கருப்பு நிறத்திலேயே முட்டையை இடுவதாகவும் முகநூல் உள்ளிட்டவையில் பதிவிட்டு வருகின்றனர்.
அயாம் செமானி :
அயாம் செமானி எனும் ஒரு வகையான கோழி இனம் இருக்கிறதா என்றால், ஆம் இருக்கிறது . இந்தோனேசியாவை பிறப்பிடமாகக் கொண்ட அயாம் செமானி (Ayam Cemani) உடல் முழுவதும் , உடல் பாகங்களும் கரு நிறத்தில் காணப்படுகிறது. அதன் கறியும் கறு நிறமே.
2018-ல் Great big story யூட்யூப் சேனலில் “This Chicken Is Entirely Black, From Beak to Bone ” என்ற தலைப்பில் வெளியான வீடியோவில் இந்தோனேசியாவை சேர்ந்த விவசாயி ஒருவர் , தாம் வளர்க்கும் அயாம் செமானி சேவல் , கோழிகள் குறித்து அளித்த பேட்டி 40 லட்சம் பார்வைகளை பெற்று இருக்கிறது. இந்த வகையான கோழிகள் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளிலும் வளர்க்கப்படுகின்றன.
அயாம் செமானி இனம் கருமை நிறத்தில் இருந்தாலும் அவற்றின் முட்டைகள் கரு நிறத்தில் இல்லை என்பதே உண்மை. இணையத்தில் அயாம் செமானி உடைய முட்டைகள் கரு நிறத்தில் இருப்பதாகவே நம்பப்படுகிறது. backyardchickens என்ற இணையதளத்தில் அயாம் செமானி குறித்த விவரங்கள் விளக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, அவற்றின் முட்டைகள் கரு நிறத்தில் இருப்பதில்லை, பழுப்பு நிறத்தில் இருப்பதாகவே குறிப்பிட்டு காண்பித்து இருக்கின்றனர்.
கடக்நாத் :
இதேபோன்று, உடல் முழுவதும் கரு நிறத்தில் இருக்கும் கடக்நாத் கோழி என்ற இனம் இந்தியாவிலும் காணப்படுகின்றன. மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் நாட்டுக்கோழியான கடக்நாத் வகை கோழிகள் மருத்துவ குணம் கொண்டவை எனக் கூறப்படுவதால் அதை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆகையால், இதற்கு முன்பாக கரு நிறத்தில் இருக்கும் கோழி, சேவல் உள்ளிட்டவற்றின் புகைப்படங்கள் உடன் கருப்பு நிறத்தில் இருக்கும் முட்டையின் புகைப்படத்தையும் இணைத்து கடக்நாத் கோழிகளின் முட்டைகள் கரு நிறத்தில் இருப்பதாக பல மொழிகளில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.
2018-ல் The Lallantop என்ற செய்தி தளத்தின் யூட்யூப் சேனலில் பதிவான வீடியோவில் மாநில அரசின் நிதி உதவியுடன் இயங்கும் கடக்நாத் கோழிகள் வளர்ப்பு மையத்தில் நடக்கும் செயல்முறை விளக்கப்பட்டு இருக்கும். அதில், இயந்திரம் ஒன்றில் கோழியின் முட்டைகள் வரிசையாக வைக்கப்பட்டு இருக்கும். அவை பார்க்க , நாட்டுக் கோழிகளின் முட்டையை போன்றே இருக்கிறது . அந்த காட்சியை வீடியோவின் 2-வது நிமிடத்தில் காணலாம். ஆக, கடக்நாத் முட்டைகள் கரு நிறத்தில் இருப்பதாக கூறுவது தவறான தகவல் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
கரு நிற முட்டைகள் :
கரு நிற முட்டைகள் எனக் காண்பிக்கப்படும் படத்தில் இருக்கும் முட்டைகள் எந்த உயிரினத்தின் முட்டைகள் அல்லது சாயம் பூசப்பட்டவையா என்பதை ஆராய்ந்து பார்த்தோம். அதில், அந்த முட்டைகள் ஈமு கோழியின் முட்டைகள் என அறிய முடிந்தது. அவையும் கரு நிற முட்டைகள் அல்ல. அடர் பச்சை நிறத்தில் இருப்பவை. indiamart தளத்தில் விற்பனை செய்யப்படும் ஈமு முட்டையின் புகைப்படத்தை காண்க.
முடிவு :
நம்முடைய தேடலில் இருந்து, இந்தோனேசியாவில் உள்ள அயாம் செமானி மற்றும் இந்தியாவில் உள்ள கடக்நாத் ஆகிய கோழி இனங்களின் முட்டைகள் கரு நிறத்தில் இருப்பதாக கூறுவது தவறான தகவல்.
அவ்விரு கருப்பு நிற கோழிகளின் முட்டைகள் என காண்பிக்கும் முட்டைகளும், ஈமு கோழிகளின் முட்டைகளும் ஒரே மாதிரியாக இருக்கின்றன.