தீட்சிதர்களை மீறி பொதுமக்கள் கனகசபையில் கால் வைக்கக்கூடாது என அண்ணாமலை கூறியதாகப் போலிச் செய்தி !

பரவிய செய்தி
தீட்சிதர்களைச் சீண்டவேண்டாம்; அண்ணாமலை தீட்சிதர்களை மீறி பொதுமக்கள் கனகசபையில் கால் வைத்தால் அண்ணாமலையின் சிங்கமுகத்தைத் தமிழகம் பார்க்கும். – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைTwitter Link
மதிப்பீடு
விளக்கம்
சிதம்பரம் நடராஜர் கோவிலின் கனகசபை மேடையில் கடந்த ஜூன் 24, 25, 26, 27 ஆகிய நான்கு நாட்கள் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வழிபட தடை விதித்து சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் பதாகை வைத்தனர். இதனையடுத்து, இந்து சமய அறநிலையத்துறையினர் கடந்த ஜூன் 26 அன்று போலீஸ் பாதுகாப்புடன் பதாகையை அகற்றி பொதுமக்கள் கனகசபை மேடையில் ஏறலாம் என அறிவித்தனர்.
இந்நிலையில், “தீட்சிதர்களை மீறி பொதுமக்கள் கனகசபையில் கால் வைத்தால் அண்ணாமலையின் சிங்கமுகத்தைத் தமிழகம் பார்க்கும்” என்று தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாக புதியதலைமுறையின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன ?
பரவி வரும் நியூஸ் கார்டு தொடர்பாக புதியதலைமுறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடியதில், அது தொடர்பாக எந்த நியூஸ் கார்டும் புதிய தலைமுறை வெளியிடவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
இதுகுறித்து தேடியதில், கடந்த ஜூலை 02 அன்று ‘தீட்சிதர்களுக்காக போராடுவேன்’ என்னும் தலைப்பில் புதியதலைமுறை நியூஸ் கார்டு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு தமிழக அரசு தொந்தரவு கொடுத்தால் போராடுவேன். தீட்சிதர்கள் விவகாரத்தில் அவர்களுக்கு எந்தவித தொந்தரவும் மாநில அரசு கொடுக்க கூடாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்து சமயத்தின் புனிதமான எந்தக் கோட்பாட்டின் மீதும் நம்பிக்கை இல்லாத நாத்திகத்தைப் பரப்பி, இந்து கடவுள்களை கொச்சைப்படுத்தும் கூட்டத்திற்கு அடைக்கலமாகத் திகழும் திமுக, சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாகத்தில் இதற்கு மேலும் தலையிட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிக… pic.twitter.com/EGgbspcAmy
— K.Annamalai (@annamalai_k) June 29, 2023
இவ்விவகாரம் தொடர்பாக, கடந்த ஜூன் 29 அன்று அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “இந்து சமயத்தின் புனிதமான எந்தக் கோட்பாட்டின் மீதும் நம்பிக்கை இல்லாத நாத்திகத்தைப் பரப்பி, இந்து கடவுள்களை கொச்சைப்படுத்தும் கூட்டத்திற்கு அடைக்கலமாகத் திகழும் திமுக, சிதம்பரம் நடராஜர் கோவிலின் நிர்வாகத்தில் இதற்கு மேலும் தலையிட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிக பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதில் அவர், பரவி வரும் செய்திகள் தொடர்பாக எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பதையும் உறுதிப்படுத்த முடிந்தது.
எனவே தீட்சிதர்களுக்காக போராடுவேன் என்று அண்ணாமலை கூறியதாக வெளியிடப்பட்ட புதியதலைமுறையின் நியூஸ் கார்டை எடிட் செய்து பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : ‘சொந்த பந்தங்களிடம் தலை காட்ட முடியவில்லை’ என அண்ணாமலை மனைவி கூறியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !
முடிவு:
நம் தேடலில், தீட்சிதர்களை மீறி பொதுமக்கள் கனகசபையில் கால் வைத்தால் அண்ணாமலையின் சிங்கமுகத்தைத் தமிழகம் பார்க்கும் என அண்ணாமலை கூறியதாக பரவி வரும் நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.