முதலமைச்சருக்கு 70 வயது அவரது ஆசிரியருக்கு 68 வயது எனப் பொய் பரப்பும் கிஷோர் கே சாமி !

பரவிய செய்தி

மாணவருக்கு 70 வயது … அவரது ஆசிரியருக்கு 68 வயது ….

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனக்கு மிகவும் பிடித்த மாணவர் என அவரது பள்ளி தமிழ் ஆசிரியர் ஜெயராமன் கூறியது பற்றி சன் செய்திகள் நியூஸ் கார்டு ஒன்றினை வெளியிட்டுள்ளது. 

Archive Link

 

அந்த நியூஸ் கார்டினை வலதுசாரி ஆதரவாளர் கிஷோர் கே சாமி, மீடியான் செய்தி இணையதளத்தின் ஆசிரியர் குழு உறுப்பினர் சரவணபிரசாத் பாலசுப்பிரமணியன் மற்றும் பாஜகவை சேர்ந்த பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அப்பதிவுகளில் ஸ்டாலினுக்கு 70 வயது அவரது ஆசிரியர் ஜெயராமனுக்கு 68 வயது எனக் குறிப்பிட்டுப் பரப்பி வருகின்றனர்.

உண்மை என்ன ? 

சன் செய்திகள் டிசம்பர் 18ம் தேதி பதிவிட்ட நியூஸ் கார்டில் உள்ள செய்தி எங்கு? எப்போது? நிகழ்ந்தது என இணையத்தில் தேடினோம். கடந்த 17ம் தேதி சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில்” OSA Reunion நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சியின் வீடியோ ஆனது, அப்பள்ளியின் mcc school என்ற யூடியூப் பக்கத்தில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

அந்த நேரலை வீடியோவின் 29வது நிமிடத்தில் ஆசிரியர் ஜெயராமன் உரையாற்றுகிறார். “முதலமைச்சர் ஸ்டாலின் இப்பள்ளியில் படிப்பதற்கு முன்னாள் பல அமைச்சர்களின் பிள்ளைகள் படித்துள்ளனர். அவர்களிடம் ஒரு பந்தா இருக்கும். ஆனால், ஸ்டாலினிடம் அத்தகைய பந்தா எதுவும் இருந்ததில்லை. அவரது தந்தை முதலமைச்சரான பிறகும் கூட சாதாரண மாணவரைப் போலவே இருப்பார்” என ஸ்டாலின் மாணவராக இருந்த நினைவுகள் சிலவற்றைப் பகிர்கிறார்.

அதே வீடியோவில் 52வது நிமிடத்திற்கு மேல் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றுகிறார். அவ்வுரையில் “நான் இப்பள்ளியில் படித்த போது எனது அப்பா போக்குவரத்து அமைச்சராக இருந்தார். அண்ணாவின் மறைவிற்கு பிறகுதான் முதலமைச்சரானார்” எனக் குறிப்பிடுகிறார். மேலும், தனது தமிழ் ஆசிரியர் ஜெயராமன் பற்றியும், பள்ளி கால நினைவுகளையும் பகிர்கிறார்.

Archive link 

முதலமைச்சர் தனது தமிழாசிரியரைப் பற்றிக் குறிப்பிட்டதைத் தொடர்ந்து விகடன் பத்திரிகை டிசம்பர், 20ம் தேதி ஆசிரியர் ஜெயராமனை நேர்காணல் செய்துள்ளது. அந்த நேர்காணலில் எனக்கு 83 வயதாகிவிட்டது. வயதின் முதுமையில் உடல்நிலை சரியில்லை. இப்போதுகூட, என் மாணவர் ஸ்டாலினுக்காகத்தான் அந்த விழாவில் கலந்துகொண்டு வந்தேன்” எனக் கூறியுள்ளார்.

அதேபோல, ப.சிதம்பரம், `தி இந்து’ ராம், ஜி.கே வாசன், ஸ்டாலினின் அண்ணன் மு.க முத்து, மு.க அழகிரி என பலர் எங்கள் மாணவர்கள்தான் குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து அவரது வயது 83 என்பது தெளிவாகிறது.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் 1967 முதல் 1969ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்துள்ளார். ஸ்டாலின் பிறந்தது 1953, மார்ச் 1ம் தேதி. கலைஞர் அமைச்சராக இருந்தபோது ஸ்டாலினுக்கு 14 முதல் 16 வயதுக்குள் இருந்திருக்கும்.

அதேபோல், ஆசிரியர் ஜெயராமனுக்கு தற்போது 83 வயது. 1967 முதல் 1969 காலகட்டத்தில் அவருக்கு 28 முதல் 30 வயதிற்குள் இருந்திருக்கும் என்பதை அறிய முடிகிறது. 

முடிவு : 

நம் தேடலில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 70 வயது, அவரது ஆசிரியருக்கு 68 வயது என சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்தி உண்மை அல்ல. ஸ்டாலின் அவர்களின் தமிழ் ஆசிரியர் ஜெயராமனுக்கு 83 வயது என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader