சிறுமியை வன்புணர்வு செய்ததாக தவறாக பரப்பப்படும் நபர் !

பரவிய செய்தி
இவன் தான் திருச்சியில் 6 வயது சிறுமியை கற்பழித்து பாலியல் வழக்கில் தலைமறைவான தி.க உறுப்பினர் !
மதிப்பீடு
விளக்கம்
திருச்சியில் 6 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து விட்டு தலைமறைவாக இருப்பதாக படத்தில் இருப்பவரின் புகைப்படத்தை ” போர் அடிச்சா மீம் போடுவோம் ஹாங் ” என முகநூல் பக்கம் மே 4-ம் தேதி பதிவிட்டு இருந்தது.
இப்பதிவானது ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்கள் செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால், இவ்வாறு பதிவிட்ட செய்தியில் உண்மை இல்லை. சமீபத்தில்
திருச்சியில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை என எந்தவொரு செய்திகளிலும் வெளியாகவில்லை. படத்தில் இருப்பவர் தி.க ஆதரவாளரான ஸ்டிபன் ராஜ் ஆவார். தலைமறைவாக இருப்பதாக கூறும் அவரிடம் Youturn தொடர்பு கொண்டு பேசி உள்ளோம்.
” தன்னை பற்றி பதிவிட்ட செய்தி உண்மை இல்லை என மறுத்தார் ஸ்டிபன் ராஜ். தாம் தற்போது சென்னையில் இருப்பதாகவும், தன் வீட்டிலும் குழந்தைகள் உள்ளனர், இப்படி ஒரு தவறான தகவலை பரப்பி வருகின்றனர். ஃபேஸ்புக், வாட்ஸ் அஃப்களில் வேகமாக பரவி வருகிறது. வீட்டில் அனைவருக்கும் இந்த செய்தி தெரிந்து உள்ளது என தன் வருத்தத்தை தெரிவித்து இருந்தார் ஸ்டிபன் ராஜ் ” .
தலைமறைவாக இருப்பதாக கூறினார்கள்.. ஆனால், அவர் சென்னையில் இருப்பதாக கூறி விட்டார். மேலும், அவரிடம் தொடர்பு கொண்டு பேசி உள்ளோம். ஸ்டிபன் ராஜ் தி.க ஆதரவாளர் என்பதாலும், அவர் முகநூலில் பதிவிடும் பதிவுகளால் பிடிக்காத யாரோ ஒருவர் உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டு உள்ளனர்.
அரசியல், கொள்கை சார்ந்து எதிர்க்க இங்கு பலருக்கும் தைரியம் இல்லை. சில நேரங்களில் தங்களுக்கு பிடிக்காதவர்களை தவறாக சித்தரித்து வதந்திகளை பரப்பி விடுகின்றனர். சமூக வலைத்தளங்களில் பல செய்திகள் இப்படித்தான் பகிரப்படுகிறது. பிறரை இழிவுப்படுத்தி அதில் மகிழ்ச்சி அடைந்து வெற்றி பெற்றதாக கருதுகின்றனர்.
முன்பே, தமிழிசை அவர்களின் விசயத்தில் கூறி இருந்தோம், அவர்களை எதிர்க்க வேண்டும் என்றால் அவரின் கொள்கையை விமர்சன செய்யுங்கள். ஆனால், அவர்களை உருவ கேலி செய்யாதீர்கள் என்றோம். சமூக வலைத்தளத்தில் பகிரும் செய்திகளில் உண்மைத்தன்மை இல்லாமல் போய் வருகிறது. நீங்கள் பகிரும் இவ்வாறான தவறான தகவலால் எங்கோ, யாரோ ஒருவர் நிச்சயம் பாதிக்கப்படுவார் என்பதை நினைவில் வையுங்கள்.