படுக்கை இல்லாமல் தரையில் வைத்து சிறுமிக்கு இரத்தம் ஏற்றிய அவலம்.. பாஜக ஆளும் எந்த மாநிலத்தில் நிகழ்ந்தது ?

பரவிய செய்தி
8000 கோடிக்கு மோடிக்கு தனி விமானம் வாங்க பணம் இருக்கு 3 ஆயிரம் கோடியில் பட்டேல் சிலையை வைக்க பணம் இருக்கு உத்திர பிரதேச மருத்துவமனையில் ரத்தம் ஏற்றும் இந்த சிறுமிக்கு ஒரு படுக்கை, ஸ்டாண்ட் இல்லை.. பாஜக ஆளும் மாநிலங்களின் லட்சணம் இதுதான்.
மதிப்பீடு
விளக்கம்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு படுக்கையில் வைத்து சிகிச்சை அளிக்காமல் தரையில் அமர வைத்து அவரின் தாய் கையில் இரத்தம் நிறைந்த பையை கொடுத்து ஏற்றும் அவலநிலையை காண்பிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மிகப்பெரிய படேல் சிலை உள்ள நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் எனப் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதேநேரத்தில், இந்த சம்பவம் பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்தது என்றும் பகிர்ந்து வருவதைப் பார்க்க முடிந்தது.
8000 கோடிக்கு மோடிக்கு தனி விமானம் வாங்க பணம் இருக்கு
3 ஆயிரம் கோடியில் பட்டேல் சிலையை வைக்க பணம் இருக்கு
உத்திர பிரதேச மருத்துவமனையில் ரத்தம் ஏற்றும் இந்த சிறுமிக்கு ஒரு படுக்கை, ஸ்டாண்ட் இல்லை..😡
பாஜக ஆளும் மாநிலங்களின் லட்சணம் இதுதான்🤦♂ pic.twitter.com/QuXpqEOeub
— ச.அருண்(உதயசூரியன்) (@Qb3ZcqsEXiLf44C) March 15, 2023
எங்கு நிகழ்ந்தது ?
வைரல் செய்யப்படும் புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது எனத் தேடுகையில், ” 2022ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி NDTV இணையதளத்தில் வெளியான செய்தியில் இப்புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.
செய்தியில், ” மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கையில் இரத்தப் பையுடன் நிற்கிறார், அந்த பை கீழே அமர்ந்து இருக்கும் மகளின் கையுடன் இணைக்கப்பட்டு உள்ளது. சத்னா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் படுக்கைகள் எதுவும் காலியாக இல்லாததால், 15 வயது சிறுமியை இரத்தம் ஏற்றுவதற்காக தரையில் அமர வைத்துள்ளனர்.
ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்ததால் சந்தோசி கேவாட் தனது தாயுடன் மைகார் பொது மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால், மருத்துவமனை ஊழியர்கள் படுக்கைகள் காலியாக இல்லை எனக் கூறியதையடுத்து சிறுமியை தரையில் அமர வைத்துள்ளனர்.
சிறுமியின் புகைப்படம் வைரலானதால், மாவட்ட ஆட்சியர், தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். விசாரணைக்கு பிறகு மைகார் மருத்துவமனை பொறுப்பாளர் டாக்டர் பிரதீப் நிகாமின் ஒரு இன்கிரிமென்ட் மற்றும் செவிலியரின் இரண்டு இன்கிரிமென்ட் நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது ” என வெளியாகி இருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக நியூஸ் 18 , டெக்கான் ஹெரால்டு உள்ளிட்ட செய்திகளிலும் வெளியாகி இருக்கிறது.
மேலும் படிக்க : கோவை அரசு மருத்துவமனையில் எடுத்த புகைப்படமா ?
மேலும் படிக்க : குஜராத் மருத்துவமனையின் நிலைமை என பரவும் புகைப்படங்கள்.. உண்மை என்ன ?
முடிவு :
நம் தேடலில், படுக்கை வசதி இல்லாமல் தரையில் அமர வைத்து சிறுமிக்கு இரத்தம் ஏற்றிய அவலம் நிகழ்ந்தது மத்தியப் பிரதேசத்தின் மைகார் அரசு மருத்துவமனை, உத்தரப் பிரதேசம் அல்ல. மத்தியப் பிரதேசத்திலும் பாஜகவே ஆட்சியில் இருக்கிறது என்பதையும் அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.