உறுப்பு திருட்டுக்காக குழந்தைகளை கடத்தியதாக பரவும் வீடியோ | உண்மை என்ன ?

பரவிய செய்தி

யார் யார் வீட்டில் குழந்தைகள் காணாமல் போயிருச்சு என தெரியல. ரொம்ப கொடுமையா இருக்கு. எத்தனை தாய், தகப்பன்கள் பார்த்து கண் கலங்கி இருப்பாங்கள். என்னாலையே பார்க்க முடியலை, அவ்ளோ கஷ்டமா இருக்கு. தயவு செய்து உங்கள் குழந்தைக்குகளை பாதுகாப்பா பாத்துக்கோங்க. இவ்வளவு குழந்தைகள் இறந்து போயிருக்காங்க. அவங்க கண்ணு ,காது, இதயம் என எல்லாத்தையும் எடுத்துட்டாங்க. தயவு செய்து உங்கள் குழந்தைகளை பாத்துக்கோங்க – வீடியோ

மதிப்பீடு

விளக்கம்

றந்தவர்களின் உடல் வரிசையாக வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படத்திற்கு முன்பாக எடிட்டிங் செய்த விதத்தில் பெண் ஒருவர் தமிழில் கண்ணீருடன் பேசும் வீடியோ சமீபத்தில் முகநூலில் வைரலாகி வருவதை காண நேரிட்டது.

Advertisement

உடல் உறுப்பிற்காக குழந்தைகளை கடத்துவதாக கண்ணீருடன் அப்பெண் பேசும் வீடியோ முகநூலில் uthirakumar uthirakumar என்ற முகநூல் கணக்கில் பதிவாகி இருக்கிறது. அந்த வீடியோ 19 ஆயிரம் பார்வைகள் மற்றும் 830 ஷேர்களை பெற்று தொடர்ந்து பல முகநூல் கணக்குகளில், குழுக்களில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ?

உடல் உறுப்பிற்காக குழந்தைகள் கடத்தப்படுவதாக பரவும் வீடியோவில் அப்பெண்ணிற்கு பின் பகுதியில் இறந்தவர்களின் உடல்களை சுற்றி இருப்பவர்களை காணும் பொழுது இந்தியாவில் இருப்பது போன்று தெரியவில்லை. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில் வசிக்கும் மக்களின் தோற்றத்தில் இருக்கின்றனர்.

இதையடுத்து, புகைப்படத்தை வைத்து ரிவர்ஸ் இமேஜ் செய்த பொழுது, 2019-ல் பிப்ரவரில் AFP என்ற இணையதளத்தில் நைஜீரியாவில் நிகழ்ந்த படுகொலை என இதே புகைப்படத்துடன் பரவிய வதந்தி குறித்து வெளியிட்டு உள்ளனர். மேலும், கட்டுரையின் தலைப்பில் சம்பவம் நைஜீரியா, கேமெரூன், காங்கோவில் நிகழ்ந்த படுகொலை அல்ல, கனா நாட்டில் நிகழ்ந்த விபத்து எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Advertisement

2017 மார்ச் மாதம் மேற்கு ஆப்பிரிக்க நாடான கனாவில் மிகவும் பிரபல சுற்றுலா பகுதியான கிண்டம்போ அருவி பகுதியில் பள்ளி மாணவர்கள் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது சூறாவளி காற்றால் மரங்கள் சாய்ந்து விழுந்ததில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் இறந்தவர்களின் உடல்களை வரிசையாக வைத்து இருக்கும் பொழுது புகைப்படங்கள் எடுத்துள்ளனர். 2017 மார்ச் மாதம் 20-ம் தேதி samuel gyabaah என்ற முகநூல் கணக்கில் ” Kintampo waterfalls disaster ” என இறந்தவர்களின் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

இதேபோன்று, மார்ச் 19-ம் தேதி Peter Makpabi என்ற முகநூல் கணக்கில் இறந்தவர்களின் பிற புகைப்படங்கள் பதிவிடப்பட்டு உள்ளன. பரவும் வீடியோவிலும், 2017-ல் வெளியான பதிவிலும் ஆரஞ்சு நிறத்தில் டி-ஷர்ட் அணிந்து இருக்கும் நபரையும், சுற்றி இருப்பவர்களையும் ஒற்றுமைப்படுத்தி பார்க்கலாம்.

முடிவு :

நம்முடைய தேடலில், குழந்தைகளை உடல் உறுப்பிற்காக கடத்தி செல்வதாக தமிழில் பேசும் பெண்ணின் வீடியோவிற்கு பின்னால் இருக்கும் புகைப்படம் இந்தியாவை சேர்ந்தது அல்ல.

2017-ல் கனா நாட்டில் அருவியில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த மாணவர்களின் புகைப்படமே தவறாக பரவி உள்ளது.

சமீப காலமாக, குழந்தைகள் கடத்தல் கும்பல் குறித்து தவறான தகவல்கள் பரவி வருவதை அதிகம் காண முடிகிறது. அவ்வாறாக பரவும் செய்தியை பகிர்வதற்கு முன்பாக அதன் உண்மைத்தன்மையை அறிந்து பகிருங்கள்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button