This article is from Jun 02, 2018

4 வயது சிரிய அகதி பாலைவனத்தில் தனியாக சென்ற அவலம்.. மீட்டதா ஜோர்டான் UNHCR குழு ?

பரவிய செய்தி

இதயத்தை நொறுக்கும் புகைப்படம்!! சிரியாவில் இருந்து ஜோர்டான் நாட்டின் பாலைவனத்தில் தனியாக அகதியாய் சென்ற 4 வயது குழந்தையை UNHCR குழு காப்பாற்றியுள்ளனர். அவனது கையில் இருந்த பையில் சிரியாவில் கொல்லப்பட்ட அவன் தாய் மற்றும் சகோதரியின் துணிகள் மட்டுமே இருந்தன.

மதிப்பீடு

சுருக்கம்

அக்குழந்தை தனியாக செல்லவில்லை. அவனின் குடும்பத்துடன் செல்லும் பொழுது கூட்டத்தில் தற்காலிகமாக தனியாக பிரிந்து சென்றுள்ளான். பின் அக்குழந்தையை தாயிடம் ஒப்படைத்துள்ளனர்.

விளக்கம்

சமூக வலைத்தளங்களில் உணர்வை தூண்டும் விதத்தில் மற்றும் கேலியான கருத்துகளுடன் இடம்பெறும் பதிவுகள் அதிகளவில் மக்களிடம் சென்றடைகின்றன. குறிப்பாக, கருணையை வெளிபடுத்தும் விதத்தில் பகிரப்படும் செய்திகளை, மக்கள் என்ன ? ஏது ? என்று அறியாமல் உடனடியாக பகிர்ந்து விடுவர்.

இன்றைய நிலையில் உலகம் முழுவதும் அதிகம் தேடப்படுவதும், பகிரப்படும் செய்தி என்னவென்றால் சிரியாவில் நிகழும் போரால் மக்களின் நிலை பற்றி தான் இருக்கும். அதைப் பயன்படுத்தி பல்வேறு மீம்ஸ், கருத்துக்கள், படங்கள், வீடியோக்கள் போன்றவை சமூக வலைத்தளங்களில் அதிகம் பதிவிடப்படுகிறது.

சமீபத்தில் சிரியாவில் நிகழும் போரினால் பாதிக்கப்பட்ட 4 வயது குழந்தை சிரியாவில் இருந்து ஜோர்டானுக்கு இடம் பெயர்வதற்காக பாலைவனத்தில் தனியாக வந்ததை கண்டறிந்து காப்பாற்றியுள்ளது UNHCR குழு. அவனது கையில் இருந்த பிளாஸ்டிக் பையில் சிரியா போரில் இறந்த அவனது தாய் மற்றும் சகோதரியின் உடைகள் மட்டுமே இருந்ததாக கூறி ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அப்படங்கள் வைரலாகி வருகிறது.

உண்மையில் நடந்தது என்னவென்றால், ஜோர்டான் எல்லைப் பகுதியில் அகதிகளாய் இடம்பெயர்ந்து வரும் மக்களின் கூட்டத்தில் வந்த மர்வேன் என்ற 4 வயது சிறுவன் எதிர்பாராமல் கூட்டத்தில் இருந்து விலகியதால் தனது குடும்பத்தினரை விட்டு தற்காலிகமாக தனியாக பிரிந்துள்ளான். பின்னர் அவனை UNHCR குழு அதிகாரிகள் அவனது தாயிடம் ஒப்படைத்தனர். வதந்தியில் கூறியது போன்று அவனது கையில் இருந்த பையில் அவனது இறந்த தாயின் உடைகள் இருந்திருக்காது என்பதை இதிலிருந்து அறியலாம். 

ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையத்தின் (UNHCR) ஜோர்டான் நாட்டின் முன்னாள் பிரதிநிதியான அன்ட்ருவ் ஹார்பெர் இப்படத்தை முதன் முதலில் வெளியிட்டார். அவர் தன் ட்விட்டரில் 2014-ல் பதிவிட்டது யாதெனில், “ 4 வயது மர்வேன் என்ற சிறுவன் தனது குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரிந்து சென்றுள்ளான். அவனுக்கு ஜோர்டான் எல்லையை கடந்து செல்ல UNHCR குழு அதிகாரிகள் உதவி செய்தனர் ” என்று கூறியிருந்தார்.

இதையறியாமல் பரவிய வதந்திகளை அடுத்து பிப்ரவரி 18, 2014-ல் அன்ட்ருவ் மற்றொரு பதிவில், 4 வயதான மர்வேன் அகதிகளின் கூட்டத்திற்கு பின்னால் வருவதை காணலாம். அவன் பிரிந்து சென்றுள்ளான். அவன் தனியாக வரவில்லை என்று கூறியிருந்தார்.

அன்ட்ருவ் ஹார்பெர், அதிகமான அகதிகள் கூட்டத்தில் ஜோர்டான் எல்லையில் தற்காலிகமாக தனியாக பிரிந்த மர்வேன் என்ற குழந்தையை மீண்டும் தாயிடம் ஒப்படைத்தோம் என்று தெளிவாக கூறியிருந்தும், அதை திரித்து பல நாடுகளில் தாயை இழந்த குழந்தை, இதயம் நொறுங்கும் காட்சி என்றெல்லாம் கூறி வதந்தியை பரப்பி மக்களை முட்டாளாக்கியும், உயிருடன் இருக்கும் குழந்தையின் தாயை கொல்லவும் செய்துள்ளனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader