தமிழ்நாட்டில் குழந்தைகள் மது அருந்துவதாகப் பரவும் 2018ல் இருந்து பரவிய வடஇந்திய வீடியோ!

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒன்றிய அரசு மற்றும் ஆளுநரின் செயல்களை கண்டித்து கடந்த ஆகஸ்ட் 20 அன்று திமுகவின் இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் நீட் தேர்வை எதிர்க்கும் திராவிட மாடலைப் பாருங்கள் என்று கூறி, ஆறு சிறுவர்கள் புகைப்பிடித்துக் கொண்டே மது அருந்தும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
நீட் தேர்வாவது..
நீட்டாத தேர்வாவது…🙄நெம்பர் ஒன் மாடல்…🤦 pic.twitter.com/GTPIgRnBAJ
— பாரதி கண்ணம்மா,🚩जय श्री राम🚩🚩🚩🚩 (@vanamadevi) August 21, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ கடந்த சில ஆண்டுகளாகவே சமூக ஊடகங்களில் பல்வேறு மொழிகளில் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.
எனவே இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்து தேடினோம். ஸ்ரீலங்காவைச் சேர்ந்த කනේ පහරක් (கனே பகாரக்) என்ற சிங்கள மொழியின் முகநூல் பக்கத்தில் சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதை அறிய முடிந்தது. மேலும் 2018 மே 03 அன்று “நாம் தான் நாளைய நாயகர்கள்” என்ற தலைப்பில் சிங்கள மொழியில் குறிப்பிடப்பட்டு இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்தது.
மேற்கொண்டு தேடுகையில், 2018 ஜனவரி 2ம் தேதி இந்திப் பட பாடலுடன் இதே வீடியோ ஃபேஸ்புக் பக்கம் ஒன்றில் பகிரப்பட்டு இருக்கிறது.
இதன் மூலம் இந்த வீடியோ தற்போது தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது அல்ல. 2018ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வருகிறது என்பது தெளிவாகிறது.
மேலும் படிக்க: திமுக ஆட்சியில் போடப்பட்ட ஆபத்தான சாலை எனப் பரப்பப்படும் 2015ல் பரவிய பழைய வீடியோ !
மேலும் படிக்க: தமிழ்நாட்டில் சிறுவன் மது அருந்துவதாகப் பரப்பப்படும் சித்தரிக்கப்பட்ட போலி வீடியோ !
முடிவு:
நம் தேடலில், தமிழ்நாட்டில் குழந்தைகள் மது அருந்திக்கொண்டே புகைப் பிடிப்பதைப் பாருங்கள் என்று கூறி பரவி வரும் வீடியோ தமிழ்நாட்டைச் சேர்ந்தது அல்ல, இந்த வீடியோ கடந்த 2018-இல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வருகிறது என்பதையும் அறிய முடிகிறது.